Showing posts with label 01-தியானம். Show all posts
Showing posts with label 01-தியானம். Show all posts

தியானம் என்றால்



உடலை எரிக்கப் பயன்படுவது மயானம்; மனதை எரிக்கப் பயன்படுவது தியானம்-இளையராஜா வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது என்ற தனது புத்தகத்தில் தியானம் பற்றி.
————————————————————————–
கடவுள் பக்தி உள்ளவர்தாம் தியானம் செய்ய வேண்டுமா என்றால் இல்லை. தியானம் என்றால் நினைவுகளை ஒருங்கிணைப்பது; எண்ணங்களை இல்லாமல் செய்வது, மனதை ஒருங்குவிப்பது எனச் சொல்லலாம்.

கண்களை மூடிக்கொண்டு உலகை கவனி

கண்களைத் திறந்திருக்கும்போது உலகை மற!

என்ற ஆங்கிலப் பழமொழி தியானத்திலிருந்தே வந்திருக்கும் .

தியானம் என்றால் ஆழ்நிலைத்தியானமா? சூழ்நிலைத் தியானமா? ஈஷாவா? வேதாத்திரியா? ரவிசங்கரா? என்றெல்லாம் கேட்பவ்ர்கள் தியானத்தைப்பற்றி ஏதும் அறியாதவர்கள். தியானம் செய்வது பற்றி எல்லா மதங்களையும் விட இந்து மத நூல்களில் பகவத் கீதை; உபநிஷத்துக்கள் போன்ற வற்றில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது.

நினைவு என்ற ஒன்றை நீக்கிப் பார்க்கின்ற போது மனம் என்ற ஒன்றில்லை – ரமணர்.

நீ கடவுளை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால் அவர் ஈரடி உன்னை நோக்கி எடுத்து வைக்கிறார்-ராமகிருஷ்ணர்.

மனஸ் என்றால் அசைந்துகொண்டிருப்பது என்கிறது சம்ஷ்கிருத மொழி.

உலகிலேயெ மிக உயர்ந்தது எது என்றால் அது: தியானம்
உலகிலேயே மிக சிறந்தது எது என்றால் அது: தியானம்
அனைவர்க்கும் மிக அவசியமானது எது என்றால் அது: தியானம்.
மிருகங்களும், விலங்குகளும், தாவரங்களும் கூட சிரிப்பதை, சிந்திப்பதை, சிலிர்ப்பதை அறிவியல் சொல்கிறது. ஆனால் தியானம் ஒன்றுதான் மனிதர்க்குக் கிடைத்த அரிய வரம். ஒவ்வொருவரின் வாழ்வையும்  தியானத்துக்கு முன்/ தியானத்துக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம்.
தியானம் என்பது தேவையில்லாத பகுதிகளை செதுக்கி வாழ்வை அழகிய சிலையாக மாற்றுவது; தியானம் என்பது குரோட்டன்ஸ் செடியின் அளவற்ற அடர்த்தியை வெட்டி அழகாக மாற்றுவது போன்றது. தியானம் என்பது ஒரு செடியோ மரமோ தடை மீறி சூரியஒளியை நோக்கி வலைந்து வளர்ந்து செல்வது போன்று வாழ்வை செலுத்துவது.

ரமண மஹரிஷி அழகாக சொல்வார்: அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை (ஏன் என்றால்) எல்லா நூல்களிலுமே இறுதியாக மனோநிக்ரஹமே வழி என்று சொல்லப்பட்டிருக்கிறபடியால். (மனசின் ஆர்ப்பாட்டதை அடக்குவது நினைவைப் பிரித்து மனம் என்ற ஒன்று இல்லாமலிருப்பதை கண்டுகொல்வது.)அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை என்பார்.
தியானம் என்பதன் அடிப்படையில் “தனியிடத்தில் அமர்ந்தவனாகி” என்ற சொல் கீதை போன்ற பழம் பெரும் நூலில் உண்டு. இதை ஒப்பு நோக்குகையில் கூட்டம் கூட்டிக்கொண்டு தற்போது இவர்கள் சொல்வதும் செய்வதும் தொடர்பில்லாமல்  நடப்பதும் உமக்கு விளங்கும்.

இவர்கள் எல்லாமே நானும் கூட “சர்வ சமய தியான வழி வாழ்வு முறை” என்று குரான், பைபிள்; பௌத்தம்; சமணம்; கீதை எல்லாம் சேர்த்து பயிற்சி கொடுத்துவருகிறேன் எனினும் இதற்குஎல்லாம் யாரும் காரண கர்த்தாவல்ல. அனைவரும் கற்றுக்கொண்ட வழித்தடத்தை காணிக்கையாக்குகிறார்கள் எந்தக் கொடித்தடம் யார் யாருக்கு பிடிக்கிறதோ அதன் வழி மக்கள் பயணப்படுகிறார்கள் கட்சிகள் போல.

பொதுவாக யோகப்பயிற்சியில் 4 வகையான யோகம் இடம்பெற்றிருக்கின்றன.:

1.மந்திர யோகம்: மந்திர உச்சரிப்புகள், ஜெபம், பிரார்த்தனைகள்; பாடல்கள் வழியே கடவுள் மார்க்கம் தேடுவது. இதன்வழிதான் காந்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. இலய யோகம்: உலகில் உள்ள எல்லாமே இயற்கையின் ஒரு அம்சமே, மனிதனும் இயற்கையின் ஒரு சிறு துகளே. என்று எல்லாவற்றையும் இறை அம்சத்தில் பார்த்து வியப்பது இலயித்துக் கிடப்பது.ஒரு பைத்யக்கார நிலை என்று கூட சொல்லலாம்.

3. ஹடயோகம்: ஆசனம், சக்ரா, கிரியைகள், முத்திரைகள் எல்லாம் தியானத்துக்கு ஏதுவாக  ஒரு உபகரணமாக ஒரு கருவியாக தயார்படுத்தி வைப்பது – இராமதேவ் பாபா இவ்விஷியத்தில் கில்லாடி.எண்ணற்ற  ஆசனங்கள் இதில் அடங்கும். ஏன் நடனத்தையே கூட இதில் சேர்க்கலாம். நாட்டிய வழியில் கூட ஆன்மாவோடு இலயித்தல் இருக்கலாம்.

4. இராஜ யோகம்:  நீ உண்மையிலேயே உனது உடலைக் கடந்து உயிரோடு – ஆன்மாவோடு கலக்க வேண்டுமானால் அதற்கு இந்த வழிதான்  இந்த யோகப் பயிற்சிதான் சிறந்தது. இதை அஷ்டாங்க யோகம் என்றும் சொல்வார்கள் இதுவே நம் வழி திறப்பு விழி.

விவேகானந்தர், இராமகிருஷ்ணர்; அரவிந்தர் ஏன் இன்றைய சித்பவானந்தர் வரை அவரவர்கள் அவரவர்கள் பாணியில் இக்கலையை நமக்குப் பகிர்ந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். எது நன்றாக  இருக்கிறதொ? எப்பகுதி சுலபமாக இருக்கிறதோ? எவ்வழி பிடித்திருக்கிறதோ? அதன் படி நாம் பயணம் செய்ய…






அஷ்டாங்க யோகம் அல்லது ராஜ யோகம் என்பதில் எட்டு நிலைகள் அல்லது 8 படிகள் உண்டு. யமம்; நியமம்; ஆசனம், பிரணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம் , சமாதி என. இதில் இந்த 8 நிலைகளிலும் தேர்ச்சியுற்ற மேதைகள் ஞானிகள்தான், சித்தர்தான், துறவிகள்தான், முனிவர்கள்தான், புத்தர்கள்தான்.

இவர்கள்தான் ராமகிருஷ்ணராக, விவேகானந்தராக, ரமணராக, ராகவேந்திரராக, சங்கரராக, ராமனுஜராக யேசுவாக இன்ன பிற உலகை திருத்த வந்த உத்தமராக பரிணமிக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் அடிப்படை: யமம்: அடிப்படை ஒழுக்கம். வாழ்க்கை முழுதும் கடைப்பிடிக்க வெண்டியதாக:-

1.நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாதிருத்தல்(எங்கள் வீட்டில் கொசு அடிக்கப்படுகிறது தியானம் அமர முடிய வில்லையே என; எலி அடிக்கப்படுகிறது அக்கப்போர் தாங்க முடியவில்லையே என்று).

2.நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிறர் பொருள் மேல் ஆசைப்படாதிருத்தல்.

3.நினைவாலும் சொல்லாலும் செயலாலும் உண்மையைக் கடைப்பிடித்தல்.

4.பிரமசாரியம் காத்தல்

5.பிறரிடமிருந்து எதுவும் ஏற்றுக்கொள்ளாதிருத்தல். இவையே.

இவற்றில் ஒன்றிரண்டையாவது கொஞ்சமாவாது கடைப்பிடிப்பவரிடம் கடவுள் இருக்கும்.ஏன் எனில் இப்போதெல்லாம் முழுதும் இவற்றை எல்லாம் கடைப்பிடிக்க ஆள் யாரும் இல்லை. எனவே கடவுளுக்கு ஆள் கிடைப்பது அரிதாகிவிட்டது என்பதால் நிபந்தனைகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டுள்ளது.அப்படியும் இலட்சக்கணக்கானவர்களில் கோடியில் ஒருவருக்கு மட்டுமே இந்த உணமையான நாட்டம் ஏற்படுகிறது. இதை கொஞ்சம் உரசிப்பார்த்தால் தற்போது சாமியார்கள் எல்லாம் நடத்தும் நாடகம் யாவும் புரியும். வியாபாரம் என்று தெரியும். மேல் சொன்ன 5 ஒழுக்கங்களும் பெரும்பாலும் எல்லா சமயங்களிலும் கிறிஸ்தவம்; புத்தம், சமணம், இந்து, முகமதியம் ஆகிய எல்லா மதங்களுக்கும் பொருந்துவதுதான். இவை ஆர்வமுள்ள மாந்தரால் ஆயுள் முழுதும் வாழ்வு முழுதும் கடைப்பிடிக்கவேண்டியதாக தியான முறைகள் சொல்கின்றன.

இதன்படிதான் சித்தர்கள் , யோகிகள்,  ஞானிகள் எல்லாம் வாழத்தலைப்பட்டனர்.நோ காம்ப்ரமைஸ். பூமிப்பூங்காவை நமது கைகளில் தாரை வார்த்துச் சென்றனர். ஆனால் இப்போதிருப்பதோ நம்மால் அள்ளிக் கொட்டவும் முடியா அசிங்கங்கள்.

நியமம்:- நியமம் என்றால் அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய உடல் சுத்தம் தியான நேரம், அளவான உறக்கம், அளவான சாப்பாடு போன்றவை பற்றி சொல்வது.

ஆசனம்:- எங்கு எப்படி எந்த நேரத்தில் அமர்வது என்பது பற்றிய குறிப்புகள் இதைப்பற்றி பகவத்கீதையிலும், சித்பவானந்தரும் அழகாக குறிப்பிட்டுள்ளார்கள்.

பிரணாயாமம்:- முச்சுப்பயிற்சி இது தியானம் அமர்வதற்கு அவசியமான உடல் தயாரிப்பாக சொல்லப்படுகிறது. எண்ணங்களைத் தூய்மை செய்வதற்கு முன் இந்த பயிற்சி எவ்வளவு இன்றியமையாததாகிறது என்பதை சொல்வது ஆயுளை அதிகம் விருத்தி செய்ய பயன்படும்.

பிரத்யாஹாரம்:- அரவிந்தரும் , விவேகானந்தரும் இந்த பிரத்யாஹாரம் அடுத்து வரும் தாரணை பற்றி மிக அழகாக எளிதில் அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளது குறிப்பிடவேண்டியது. இது நமது தியான நேரத்தில் நமை தொந்தரவு செய்யும் எண்ணங்களை எப்படி விரட்டுவது என்பது பற்றி சொல்வது.

தாரணை:- இது ஒரு பொருள் பற்றி சிந்தித்தல் என்பது. முன் சொன்னதன் தொடர்ச்சி அதாவது: எண்ணங்களை வடிகட்டி நமக்கு தேவையான ஒரே எண்ணம் மீது மட்டும் நாம் கவனம் செலுத்தவேண்டும் என்பதை கற்பிப்பது. யேசு இது குறித்து நமது சீடர்களுக்கு நன்கு விளக்குவார்.

தியானம்:- இந்த நிலையை எட்டுவதுதான் தற்போதைய தியான வழிகளின் படிகளின் இலக்கு இதன் சில பல படிகளை கடக்கும்போது:

சமாதி நிலை: அல்லது முக்தி நிலை பெறலாம். சித்தி பெறலாம் புத்தர் ஆகலாம்.இது போன்ற சமாதி நிலையை உயிர் வாழும்போதே விவேகானந்தர் போன்றோர் அனுபவித்திருக்கிறார். இது போன்ற சமாதி அல்லது உணர்வற்ற உடலின் நிலையைத்தான் வாழும்போதே நமது முனிவர்கள் சித்தர்கள் பெற்றார்கள் அவர்களிடம் இயற்கையும் இயங்கியது.

தியானம் வெட்ட வெட்ட நீண்டு கொண்டே செல்லும் அற்புதச் சுரங்கம். முடிவில்லாமல் செல்லும். அள்ள அள்ளக் குறையாத அற்புதப் பரிசு. விண்வெளியில் ஒரு சிறு பறவை பறக்கும் அனுபவம்.வழி. மண்ணை அகல அகல வைரமணிகளாய் கிடைக்கும் விழி. இதன் சுழலில் சுழியில் அகப்பட்டவர்க்கு வெளிவரவே தோன்றாது.சுகம் . பரமசுகம். பேரின்பம் என்பது இது ஒன்றைத்தான். இது உங்களது வாழ்வில் உயரிய வழியில் உங்களைக் கேட்காமலே வழிநடத்தும் அளப்பரிய சக்தி மிக்கது. இருளின் ஆக்ரமிப்பைக் களையும் மெல் ஒளி.

இந்த மனவடக்கமே மாபெரும் வெற்றி எனத் தாயுமானவர் இதன் பெருமை பற்றி சொல்வதைக் கேளுங்கள்:

                         மனவடக்கமே மாபெரும் வெற்றி
                         —————————–
கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
          கரடி வெம்புலி வாயையும்
        கட்டலாம் ஒரு சிங்க முதுகின் மேற் கொள்ளலாம்
           கட்செவி யெடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்
            வேதித்து விற்றுண்ணலாம்
     வேறொருவர் காணாமல் உலகது லாவலாம்
         விண்ணவரை  யேவல் கொளலாம்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு
          சரீரத்தி மும் புகுதலாம்
       சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்
                தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கிற
              திறமரிது சத்தாகி யென்
         சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே
                   தேசோ மயானந்தமே.
                 – தாயுமானவர்.
கந்து= குதிரை, கட்செவி= பாம்பு. சந்ததம்= ஆயுள்


நன்றி:
கவிஞர் தணிகை.

விபாசனா தியானம்.

விபாசனா தியானம்.

புத்த மதத்தில் பல வித தியானங்கள் அனுசரிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மதசார்பற்றவையே. அதில் மிகவும் பிரபலமானது விபாசனா தியானம். இந்த தியானம் புத்தரால் நேரடியாக சீடர்களுக்கு சொல்லித்தரப்பட்டது என்ற கருத்து நிலவுகிறது. புத்த மத நூல்களில் ‘பாலி’ மொழியில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பழமை வாய்ந்த நூல்களில் இந்த தியான முறை காணப்படுகிறது. இந்த தியானம் தற்காலத்தில் உள்நோக்கு தியானம் (Insight Meditation) என்ற பெயராலும் அறியப்படுகிறது. இன்று பல நாடுகளிலும் தியான முகாம்களில் கற்றுத் தரும் இந்த தியானத்தை மிகவும் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் பர்மாவைச் சேர்ந்த எஸ்.என்.கோயன்கா என்றழைக்கப்பட்ட சத்யநாராயண கோயன்காவும், சன்ம்யாய் சயடாவும்.



எஸ்.என்.கோயன்கா இந்த தியானமுறைக்கு அறிமுகப்பட்ட நிகழ்ச்சி சுவாரசியமானது. பர்மாவில் பழங்காலத்தில் குடியேறிய இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எஸ்.என்.கோயன்கா. அவர் கிட்டத்தட்ட 25 பள்ளி, கல்லூரி, வணிக அமைப்பு, ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றின் நிர்வாக உறுப்பினர், காரியதரிசி, தலைவர் பதவிகளை வகித்து வந்தவர். பகவத்கீதை சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வந்தவர். இப்படி சமூகத்தில் மிக முக்கிய நபராக இருந்து வந்த அவர் நீண்ட நாட்களாக மைக்ரைன் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். நவீன மருத்துவ சிகிச்சைகளால் அதைக் குணப்படுத்த முடியாமல் அவர் தவித்தபோது ஊ பா கின் என்ற பர்மியர் கற்றுக் கொடுத்து வந்த விபாசனா தியானத்திற்கு செல்லுமாறு நண்பர் ஒருவரால் அறிவுறுத்தப்பட்டார். “அவர் சொல்லித் தரும் பத்து நாட்கள் தியான முகாமிற்குச் சென்று அந்த தியானத்தை தொடர்ந்து செய்தால் அந்த தலைவலியை நிரந்தரமாகப் போக்கிக் கொள்ளலாம்” என்று அவர் நண்பர் சொன்னார்.

ஊ பா கின் சன்னியாசியல்ல. குடும்பஸ்தர். அரசாங்கத்தில் சிறியதொரு வேலையில் இருந்தவர். ஆனால் அவரை சென்று பார்த்தவுடனேயே அவர் ஆன்மிகத்தில் உயர் நிலை எட்டியவர் என்பதை கோயன்காவால் உணர முடிந்தது. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “என்னுடைய மைக்ரைன் தலைவலியை நீக்க தங்கள் தியான முறையைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்று கோயன்கா சொன்னார்.

கோயன்காவின் உயர்பதவிகளால் சிறிதும் பாதிக்கப்படாத் ஊ பா கின் “தங்களுக்கு தியானத்தைக் கற்றுத் தர இயலாது” என்று சொல்லி விட்டார்.

திகைப்புடன் கோயன்கா ஏன் என்று கேட்ட போது “இந்த தியானம் நோயை மட்டும் தீர்க்கும் மருந்தல்ல. மனிதனை வருத்தும் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றுத் தரும் ஒரு வாழ்க்கை முறை. இந்தியாவில் இருந்து பெறப்பட்ட, புத்தர் பிரானால் பின்பற்றப்பட்ட இந்த சிறப்பு தியானத்தை வெறும் ஒரு குறிப்பிட்ட நோயை மட்டும் நீக்கும் நோக்கத்தோடு வருபவருக்குச் சொல்லிக் கொடுக்க நான் விரும்பவில்லை” என்று ஊ பா கின் கூறினார். விபாசனா வெறும் பயிற்சிகளை சொல்லித் தரும் தியானம் அல்ல ஒன்றும், சில ஒழுக்க விதிகள், நற்குணங்கள் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றி அத்துடன் இந்த தியானப் பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே இந்த தியானம் முழுப் பலன் தரும் என்றும் விளக்கினார் ஊ பா கின். “சில பயிற்சிகளால் தியானத்தில் சமாதி நிலை என்னும் மிக உயர்ந்த நிலையைக் கூட அடையலாம். ... ஆனால் அடிமனதைத் தூய்மைப்படுத்தாமல் இந்த தியான உயர்நிலைகளை அடைவது உறங்கும் அரக்கன் மீது அமர்ந்து அந்த உயர்நிலைகளை அடைவது போலத் தான். மேலோட்டமாகப் பார்த்தால் மனதை முழுமையாக வெற்றி கொண்டது போல் தோன்றும். அந்த அரக்கன் விழித்தெழுந்தால் எரிமலை வெடிப்பது போலத் தான். உள்ளே அகற்றாமல் வைத்திருந்த சில குணங்கள் இது வரை சேர்த்து வைத்திருந்த எல்லா முன்னேற்றத்தையும் அழித்து சேதப்படுத்தி விடும்”

(ஆன்மீகத்தில் மிகுந்த முன்னேற்றமடைந்தவர்களாக ஒரு காலத்தில் நினைக்கப்பட்டவர்கள் பற்றி இன்னொரு காலத்தில் மிகக் கேவலமான செய்திகளைக் கேட்க நேர்வது ஏன் என்பதற்கு ஊ பா கின் அன்று சொன்னது தான் பதில். எத்தனையோ சித்திகள் அடைந்திருக்கலாம். ஆனால் அடிப்படையில் ஒழுக்கம் இல்லையானால், ஒழுக்க விதிகள் பின்பற்றப்படவில்லையானால் எல்லாமே வியர்த்தமாகி விடும். பதஞ்சலியின் யோக சூத்திரங்களிலும் ஆரம்பத்தில் யமா, நியமா என்ற ஒழுக்க விதிகள் பற்றி வலியுறுத்தியதை நாம் முன்பே பார்த்தோம். இவர் சொல்வதும் அப்படியே ஒத்து வருகிறது).

அவர் கருத்தில் இருந்த உண்மையை உணர்ந்த கோயன்கா அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு முழுமையாக அந்தத் தியானத்தில் முறைப்படி ஈடுபட சம்மதித்தார். அந்த தியானம் கற்ற பிறகு அவர் தலைவலி குணமானது மட்டுமல்லாமல் அவர் வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் விபாசனா தியானத்தை பிரபலப்படுத்தி அனைவருக்கும் கற்றுத் தர ஆரம்பித்தார்.

விபாசனா தியானத்தில் ஐந்து தர்மவிதிகளைப் பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கீழ்கண்ட உறுதிமொழிகளை விபாசனா தியானம் செய்வோர் எடுத்துக் கொள்கின்றனர்.

1. நான் எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்க மாட்டேன். கொல்ல மாட்டேன்.
2. நான் திருட மாட்டேன்.
3. நான் தவறான உடலுறவுகளில் ஈடுபட மாட்டேன். வாழ்க்கைத் துணையுடன் அல்லாத உடலுறவில் ஈடுபட மாட்டேன்.
4. நான் பொய் பேச மாட்டேன். தீங்கு விளைவிக்கும் பேச்சினையும் பேச மாட்டேன்.
5. நான் புத்தியை மழுங்கச்செய்யும் மது, போதை வஸ்துக்களை உட்கொள்ள மாட்டேன்.

தியானப் பயிற்சிமுகாம்களில் பங்கு பெறும் போது அந்த நாட்களில் பங்கு பெறுவோர் மேலும் மூன்று உறுதி மொழிகள் எடுத்துக் கொள்கின்றனர்.

6. நான் இருட்டிய பிறகு உணவு உட்கொள்ள மாட்டேன்.
7. நான் அலங்காரம், பகட்டு, கேளிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட மாட்டேன்.
8. நான் சொகுசான படுக்கை, இருக்கை ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டேன்.

மொத்தத்தில் தூய்மை, எளிமை, நேர்மை ஆகியவையே இங்கு வலியுறுத்தப்படுகின்றன. விபாசனா தியான முறையாக மட்டுமல்லாமல் காலப்போக்கில் வாழ்க்கை முறையாக மாற வேண்டிய ஒரு உயர்நிலையாக கருதப்பட்டது. எனவே அந்த தியானமுகாமில் பங்கு பெறும் நாட்களில் இந்த உறுதிமொழிகள் எடுத்துக் கொண்டு பின் பற்றுவது அந்த நெறியான வாழ்க்கைக்கு அறிமுகமாகும் சந்தர்ப்பமாக அமைகிறது.

விபாசனா தியான முறை



1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத்திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். சத்தங்களே இருக்கக்கூடாது என்பதல்ல நம்மை அதிகமாக அலைக்கழிப்பது போன்ற சத்தங்கள் இருக்கக் கூடாது என்பது முக்கியம்.

2) உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ அமருங்கள். நீண்ட நேரம் அமர்கையில் உங்களுக்கு சிரமமாக இருக்கும்படியாக மிக இறுக்கமாக அமராதீர்கள். அதே நேரம் கூன் போட்டோ, விறைப்பாகவோ இல்லாமல் முடிந்த அளவு நேராக நிமிர்ந்து இருங்கள். உதாரணத்திற்கு வயலின் தந்தி மாதிரி இருக்கச் சொல்கிறார்கள். ஒரேயடியாக இறுக்கமாகவோ, தளர்ச்சியாகவோ இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

3) உங்கள் வலது உள்ளங்கை இடது உள்ளங்கையின் மீது இருக்கும்படியாக கைகளை திறந்த நிலையில் மடியில் வைத்துக் கொள்ளவும் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டாம். கண்களை மூடியோ, லேசாகத் திறந்தோ வைத்துக் கொள்ளலாம்.

4) உங்கள் கவனத்தை வயிற்றுப் பகுதியில் வையுங்கள். உங்கள் உள் வாங்கும் மூச்சினால் உங்கள் வயிறு விரிவடைவதையும், வெளி விடும் மூச்சினால் வயிறு குறுகுவதையும் கவனியுங்கள். உங்கள் கவனத்தை அதைத் தவிர வேறெதிலும் வைக்க வேண்டாம். ஆரம்ப நாட்களில் அதை “விரிவடைகிறது”, “குறுகுகிறது” என்று மனதில் பெயரிட்டு கவனத்தை பலப்படுத்தலாம். ஆனால் அதற்கு மேல் உங்கள் மூச்சை அலசப் போக வேண்டாம். ’உள் மூச்சு ஆழமாகிறது” “வெளிமூச்சு முழுமையாக இல்லை” போன்ற விமரிசனங்களுக்குப் போகாதீர்கள்.

5) போகப் போக அந்த பெயரிட்டு அழைப்பதையும் நிறுத்தி வயிர்றின் அசைவுகளை மட்டும் உணர ஆரம்பியுங்கள். இது படிக்க சுலபமாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவு சுலபமில்லை. வேண்டுமானால் உங்கள் கைகளை முன்பு சொன்ன நிலையிலேயே வயிற்றை ஒட்டினாற் போல் வைத்துக் கொள்ளலாம். கைகளாலும் அந்த அசைவுகளை உணர்வது தியானத்தை ஆழப்படுத்த உதவும்.

6) மூச்சை நீங்களாகக் கட்டுப்படுத்த முயலாதீர்கள். அது இயல்பாக இருக்கட்டும். மூச்சினால் ஏற்படும் வயிற்றசைவில் மட்டும் வைக்கையில் நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். அப்போது அடுத்த அசைவைப் பற்றி சிந்திக்காதீர்கள். உதாரணமாக உள்மூச்சின் அசைவில் கவனம் வைக்கையில் வெளிமூச்சின் அசைவைப் பற்றி முன்பே நினைக்க ஆரம்பிக்காதீர்கள். உங்களைப் பொறுத்த வரை அந்த ஒரு கணம் மட்டுமே கவனமிருக்கட்டும். மனம் ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும். கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் கவனத்தை பெரும்பாலும் சிதற வைக்கும் மனதிற்கு நிகழ்காலம், அதுவும் சுவாரசியம் இல்லாத இந்த மூச்சு ஏற்படுத்தும் அந்த ஒரே அசைவில் கவனம் வைப்பது இமாலயப் பிரயத்தனமாகவே இருக்கும். ஆனால் அவசரமில்லாமல், அலைபாயாமல் அந்த நிகழ்கால கணத்தின் அந்த அசைவில் மட்டுமே மனம் வையுங்கள்.

7) மனம் எத்தனை முறை அலைபாய்ந்தாலும் சலிக்காமல் அதைத் திரும்ப வயிற்றின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். இதெல்லாம் நமக்கு சரிப்படாது என்று ஆரம்பத்தில் தோன்றலாம். அது இயற்கையே. ஆனால் எந்தப் புதிய வித்தையும் ஆரம்பத்திலேயே சுலபமாகக் கை கூடாது என்கிற போது அது கைகூடுகிற வரை பொறுமையுடன் பயிற்சி செய்யத் தான் வேண்டும் என்கிற போது இந்த தியானப் பயிற்சியில் ஆரம்பத்திலேயே வெற்றி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் அல்லவா?

8) சில நாட்கள் இப்படியே இந்த தியானத்தை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் செய்யுங்கள். பின் அடுத்த கட்டமாக மனம் எப்போதெல்லாம் மூச்சின் அசைவை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறதோ அதன் செயலுக்கு ஒரு பொதுவான பெயரை வைத்து உணர்ந்து திரும்ப மூச்சின் அசைவுக்கே மனதைக் கொண்டு வாருங்கள். உதாரணத்திற்கு கவனம் வெளியே ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்பதிற்கு சென்றால், சுருக்கமாக “சத்தம்” என்று மட்டும் என்று பெயரிடுங்கள். அடுத்த கணம் மீண்டும் மூச்சின் அசைவுக்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள். மனம் வேறு எதையோ நினைக்கிறது என்று எடுத்துக் கொண்டால் “நினைப்பு” என்று பெயரிட்டு மறுபடியும் மூச்சின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். கால்வலிக்கிறது என்று மனம் சொன்னால் “வலி” என்று பெயரிட்டு உடனடியாக கவனத்தை மீண்டும் திருப்புங்கள்.

9) நீங்கள் கவனச் சிதறல்களுக்கு வைக்கும் பெயர் எப்போதும் பொதுவாகவும் ஒரு சொல் அளவாகவே இருக்கும்படி சுருக்கமாகவும் இருக்கட்டும். வேறெதையும் நினைக்கவே கூடாது என்று தீர்மானமாக உட்கார்ந்தால் கண்டிப்பாக தோற்றுப் போவீர்கள். மனம் கட்டுப்பாடுகள் அதிகமாக அதிகமாக முரண்டும் அதிகமாகவே பிடிக்கும். மாறாக ஒவ்வொரு கவனச்சிதறலையும் நீங்கள் அறிந்திருந்து, அதற்கு ஒரு பெயர் வைத்து அங்கீகரித்து, சலிக்காமல் உங்கள் கவனத்தை உடனடியாக மீண்டும் திருப்புவதே பெரிய வெற்றி.

10) கவனம் சிதறுகிறது என்பதை உடனடியாக உணர்வதும், அது எது விஷயமாக என்று பொதுவாக அறிந்திருப்பதும், அது விஷயமாக மேற்கொண்டு சிந்தனையை நீட்டிக்காமல் எங்கு கவனம் வர வேண்டுமோ அங்கு உடனடியாக மனதைக் கொண்டு வர முடிவதுமே தியானத்தில் முதல் பெரிய வெற்றி. கவனச் சிதறல் எதிலோ ஆரம்பித்து அதிலேயே தொடர்ந்து சில நேரம் இருந்து அதை அறியாமலேயே இருப்பது தான் தியானத்தின் எதிர்மாறான நிலை.

11) உட்கார்ந்த நிலை சில நிமிடங்கள் கழித்து அசௌகரியத்தை ஏற்படுத்தினால் தாராளமாக மாறி உட்கார்ந்து கொள்ளுங்கள். ஆனால் அந்த எண்ணம் தோன்றியவுடனேயே “மாற்றம்” என்று பெயரிட்டு அந்த எண்ணத்தை அங்கீகரித்து முழுக் கவனத்துடன் மாறி உட்கார்ந்து மறுபடியும் வயிற்றின் அசைவிற்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள்.

12) இப்படி இந்த உள்நோக்கு தியானம் உங்கள் கவனம் செல்லுமிடங்களைக் கூர்மையாக அறியச் செய்வதுடன் கவனத்தின் மீது உங்கள் ஆளுமையை வளர்த்த உதவுகிறது.

13) நாளடைவில் தியானத்தில் இருக்காத நேரங்களிலும் உங்களுக்குள் ஏற்படும் உணர்வுகளை அறிந்திருக்க இந்த தியானப் பழக்கம் உதவுகிறது. கோபம் வருகிற போது “கோபம்” என்று பெயரிட்டு அறியும் அளவு விழிப்புணர்வு இருந்தால் கூட மனதிற்கு கவனத்தை அதிலிருந்து வேண்டும் இடத்திற்கு திருப்பவும் எளிதில் முடியும் என்பது அனுபவம்.

விபாசனா என்னும் இந்த உள்நோக்கு தியானம் வாழ்க்கை முறையாக பரிணமிக்கும் போது வாழ்க்கை ஆழப்படுகிறது.