தமிழக அரசின் சிவில் சர்வீஸ் பயிற்சி மையம்




ந்த ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 65 பேர்களில் 47 பேர் அரசு நடத்தும் இலவச பயிற்சி மையத்தில் படித்தவர்கள்.
திடீரென எல்லோரும் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தின் புகழ்பாடிக் கொண்டிருந்த நேரத்தில் சத்தமில்லாமல் இந்த சாதனையைச் செய்துள்ளது அரசு மையம்.
தமிழக அரசு பயிற்சி மையத்தில் படித்து வெற்றிபெற்ற 9 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணியும், 8 பேருக்கு ஐ.பி.எஸ். பணியும், 10 பேருக்கு ஐ.ஆர்.எஸ். பணியும், 2 பேருக்கு ஐ.எப்.எஸ். பணியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்த மையம் இருப்பது சென்னை அண்ணா நகரில். விடுதியில் தங்கிப் படிக்கலாம் அல்லது பகுதி நேரமாக / மாலை நேரமாக வீட்டிலிருந்தே சென்றும் பயிற்சி பெறலாம்.
ஆண்டுக்கு 300 மாணவர்களை தேர்வு செய்கிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். முதல் நிலைத் தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு இங்கு முழுமையான பயிற்சி, முற்றிலும் இலவசமாக தரப்படுகிறது.
இந்த மையத்தில் ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ். முதல்நிலைத்தேர்வுக்கு 300 பேருக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறோம். தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மேல் இருந்தால் மட்டும் உணவு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த இலவச பயிற்சிக்கு தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான இலவச பயிற்சிக்கு மாணவர்களை தேர்வு செய்ய தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதற்கான விண்ணப்ப படிவங்களை சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து அங்கேயே கொடுத்துவிடலாம்.
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ராஜா அண்ணாமலைபுரம் பி.எஸ்.குமாரசாமி சாலையில் இயங்கி வரும் (காஞ்சீ கட்டிடம்) அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் மாதம் 4-ந் தேதி ஆகும். எழுத்துத்தேர்வு அக்டோபர் மாதம் 7-ந் தேதி தமிழகம் முழுவதும் 14 மையங்களில் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து நிறைய ஏழை மாணவ-மாணவிகள், நலிந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளாக வரவேண்டும் என்பதுதான் இந்த இலவச பயிற்சி மையத்தின் பிரதான நோக்கம்.
மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை
தமிழக அரசு பயிற்சி மையத்தில் மெயின் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கான உணவு மானியத்தை ரூ.1200-லிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, மெயின் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை.
அண்மையில் ஐ.ஏ.எஸ். முதல்நிலைத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளும் அரசு மையத்தில் இலவசமாக பயிற்சி பெறலாம். பயிற்சியுடன் தங்குமிடம், உணவு வசதி, பாடப்புத்தகங்கள் அனைத்தும் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். அனுபவமிக்க பேராசிரியர்களும், கல்வி நிபுணர்களும், அண்மையில் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களும் வந்து பாடம் நடத்துவார்கள். பல்வேறு ஆலோசனைகளை வழங்குவார்கள்.
நேர்முகத்தேர்வுக்கும் பயிற்சி
முதல்நிலைத்தேர்வு மற்றும் மெயின் தேர்வுக்கு மட்டுமின்றி நேர்முகத்தேர்வுக்கும் இங்கே பயிற்சி தரப்படுகிறது. மாதிரி நேர்முகத்தேர்வு நடத்தி அவர்களின் தவறுகளை சரிசெய்வதற்கு ஆலோசனையும் அறிவுரையும் வழங்கப்படுகிறது. நேர்முகத்தேர்வுக்கு டெல்லியில் பயிற்சி பெறவும் ஏற்பாடு செய்கிறது இந்த மையம். நேர்முகத்தேர்வுக்கு டெல்லி சென்றுவர பயணச் செலவாக ரூ.2 ஆயிரம் தருகிறார்கள்!!
1966-ல் இந்த பயிற்சி மையம் நிறுவப்பட்டது. அன்றைக்கு தாழ்த்தப்பட்ட  / பழங்குடி மாணவர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் 1971-ல் மிகப்பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
இந்த ஆண்டு அட்மிஷனுக்கான விளம்பரம் வெளியாகியுள்ளது. கடைசி தேதி செப்டம்பர் 4, 2012.