நீங்க காமர்ஸ் – எகனாமிக்ஸ் பட்டதாரியா… இன்கம்டாக்ஸ் துறையில் வேலை காத்திருக்கு…!


சென்னை: இந்திய முழுவதும் வருமான வரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 350 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணிக்கு பொருளாதாரம், வணிகவியல், கணிதம், புள்ளியியல் ஆகிய பாடங்களில் பட்டதாரிகளாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வருமான வரி செலுத்துவோருக்கு ரிட்டன் கணக்கு தயார் செய்யும் பணிக்காக இந்தியா முழுவதும் மொத்தம் 5 ஆயிரம் பணியாளர்களை நியமிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, வருமான வரி கணக்கு தயாரிப்பாளர்களாக சுயமாக பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.
இவர்கள் பயிற்சி முடித்த பிறகு, மாதாந்திர டி.டி.எஸ். அறிக்கையை தயாரித்து சமர்ப்பிப்பது, ஆன் லைனில் வருமான வரி கணக்கு சமர்ப்பித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
என்ன வருமானம் கிடைக்கும்?
புதிய பணியாளர்களின் சேவையில், புதிதாக வருமான வரி செலுத்துவோரின் மூலம் வரும் வரி தொகையில் 3 சதவீதம், அவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படும்.
மேற்கண்ட பணிக்காக தமிழகத்தில் உள்ள சென்னை திருவான்மியுர், முகப்பேர், பல்லாவரம், அண்ணா நகர் மற்றும் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் மொத்தம் 350 பணியிடங்கள் உள்ளன.
படிப்பு – தகுதிகள்
இந்த பணிக்கு பி.காம். பி.பி.ஏ. பி.ஏ வணிகவியல், புள்ளியியல், சட்ட பட்டப்படிப்பு(எல்.எல்.பி) ஆகிய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வயது வரம்பு: 21 வயதிற்கு மேற்பட்டவராகவும், 35 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விருப்புவோர் www.trpsscheme.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
கடைசி நாள்
இதற்கான கடைசி நாள் வரும் 20ம் தேதி ஆகும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களின் அறிவிப்பு மேற்கண்ட இணையதளத்தில் அடுத்த மாதம் 5ம் தேதி வெளியிடப்படும்.
அடுத்த மாதம் 23ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ள எழுத்து தேர்வில், பொது அறிவு, ரீசனிங், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் இருந்து மொத்தம் 160 கேள்விகள் கேட்கப்படும்.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு வருமான வரித்துறை சார்பில் ஒரு மாத கால பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு மதிப்பீடு தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழும், வருமான வரி கணக்கு தயாரிப்பாளர் பணியும் அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை, எழுத்து தேர்வு, தேர்வு இடங்கள் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை, www.trpsscheme.com என்ற இணையதளத்தில் பெறலாம்.