Superstar Rajini blesses his die hard fan’s marriage


KTK_00005 KTK_00004 KTK_00003 KTK_00002 

rajini-fan-marriage-feat
முருகனுக்கு இன்னும் அந்த சிலிர்ப்பான நிமிடங்களின் பிரமிப்பு நீங்கவில்லை. உண்மையிலேயே இதெல்லாம் நடந்ததா… தினமும் அவரையே நினைத்து அத்தனை விஷயங்களையும் செய்வதால் இப்படி நமக்குத் தோன்றியதா.. என நண்பர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
 பிப்ரவரி 14… அவருக்கும் ராஜலட்சுமிக்கும் திருமணம். யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் மின்னலாய் வந்து வாழ்த்திவிட்டுப் போனவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அவரது பிரமிப்புக்கும் நெகிழ்ச்சிக்கும் காரணம் புரிகிறதா!!
சோளிங்கர் ரவியைத் தெரியாத ரஜினி ரசிகர்கள் இருக்க முடியாது. ரவியின் தம்பிதான் இந்த முருகன்.
தலைவருக்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள் இருவரும். ரஜினி உடல் நிலை குன்றியிருந்தபோது, எதற்கும் கலங்காத இந்த சகோதரர்கள் கலங்கிவிட்டார்கள். சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலுக்கு முட்டிப் போட்டு படியேறி ரஜினி குணமடைய பிரார்த்தனை செய்தவர்கள். அந்த பிரார்த்தனையில் சோளிங்கர் ரவியின் முழங்கால் காயமடைந்து இரண்டு மாதங்கள் சிகிச்சை எடுக்க வேண்டி வந்தது.
இந்த சகோதரர்களின் பக்தி, தன் மீதான பாசத்தைக் கேட்டும், பார்த்தும் திகைத்துப் போன சூப்பர் ஸ்டார், எப்படி இவர்களுக்கு நன்றி செலுத்துவதென்று நெகிழ்ந்து போனார். அதைத்தான் தனது பிறந்த நாள் விழாவில் ஊரறிய தன் வாயாலேயே சொன்னார்.
ரஜினி பிறந்த நாள் வருகிறதென்றால்… டிசம்பர் முதல் தேதியிலிருந்தே சோளிங்கர் களை கட்டும். ஊருக்கு முன் வரும் ரஜினி பிறந்த நாள் விழா கொண்டாட்ட செய்தி சோளிங்கர் ரவியுடையதாகத்தான் இருக்கும்.
தாய் தந்தையை இழந்த பிறகு, தன் ஒரே தம்பி முருகனுக்கு எல்லாமாகவும் இருந்து வளர்த்தவர் ரவி. சூப்பர் ஸ்டாரை தன் தெய்வமாகவே நினைத்து வணங்குபவர் முருகன். அப்படி ஒரு மரியாதை!
முருகனுக்கு திருமண ஏற்பாடுகளில் இறங்கிய ரவி, திருமணப் பேச்சு ஆரம்பித்ததுமே, எப்படியாவது தலைவர் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என விரும்பினார்.
ஆனால் இதை ரஜினி வீட்டில் தெரிவித்தபோது, “எதையும் உறுதியாக சொல்வதற்கில்லை… ஒரு ரசிகர் திருமணத்துக்கு வந்தால், மற்றவர்கள் ஏங்கிப் போவார்கள். வீண் செலவு செய்யாமல், சிக்கனமாக திருமணத்தை நடத்துங்கள்.. தலைவர் ஆசீர்வாதம் உண்டு,” என்று மட்டும் சொன்னார்களாம்.
பிப்ரவரி 13- 14 ல் திருமணம். ஊரில் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்பதுதான் முதல் திட்டம். ஆனால் ரஜினி நடமாடும், அவர் காலடி படும் இடத்திலேயே இந்தத் திருமணத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ராகவேந்திரா மண்டபத்தையே பதிவு செய்துவிட்டார் ரவி.
தலைவர் வருவார் என்ற நம்பிக்கையுடனேயே திருமணப் பத்திரிகை அடித்தார் ரவி. அதில்,
எங்களை வழிநடத்தி, வாழ வைக்கும் வாழும் தெய்வம் திரு ரஜினிகாந்த், திருமதி லதா ரஜினிகாந்த், திரு ஆர் சத்தியநாராயணராவ் கெயிக்வாட், திரு பி ராஜா பாதர் ஆகியோரின் நல்லாசியுடன்…
என்று அச்சடித்து விநியோகித்துவிட்டார்கள்.
திருமண வரவேற்பு. தலைவர் வருவாரா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் லதா மேடம் வருவார் என்றுதான் கூறியிருந்தனர். கிட்டத்தட்ட ஒரு மாநாடு ரேஞ்சுக்கு குவிந்திருந்தனர் ரசிகர்களும் உறவினர்கள்…
ஆனால் சரியாக 7 மணிக்கு மண்டபத்தில் தலைவரின் கார்… மின்னல் வேகத்தில் சரசரவென நடந்து மணமக்களை நெருங்கினார் சூப்பர் ஸ்டார். என்ன நடக்கிறது என ரசிகர்கள் யோசிக்கும் முன், மேடையில் இருந்தார் ரஜினி.
அவர் வந்ததை நம்ப முடியாத பரவசத்துடன் மண்டபத்திலிருந்த மொத்தப் பேரும் எழுந்து நின்றனர்.
தலைவரைப் பார்த்ததுமே, ஏதும் பேசத் தோன்றாமல் சோளிங்கர் ரவி, மணமக்கள், உறவினர்கள் அனைவருமே உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி நிற்க, அவர்களை ஆசுவாசப்படுத்திய ரஜினி.. மணமகனிடம்… “அழாதே கண்ணா…” என்று கூறி கட்டிப் பிடித்து, தலையில் கைவைத்து ஆசி வழங்கினார்.
மணமக்களுக்குப் பரிசளித்த ரஜினி, அடுத்த சில நிமிடங்களில் அதே வேகத்தில் கிளம்பிச் சென்றார்.
thanks to http://gallery.envazhi.com/