வேலைவாய்ப்புOpen Link in New Tab  http://www.india-jobs.co.in/
குழு விவாதத்தின் வெற்றி ரகசியம்

வேலை வழங்கும் நிறுவனங்கள், போட்டியாளர்களின் திறனை பரிசோதிக்க, குழு விவாதத்தை நடத்துகின்றன. இதன்மூலம் போட்டியாளர்களின் திறமையை, நிறுவனங்கள் கண்டு கொள்கின்றன. இதில் வெற்றி பெறுவது பெரிய விஷயம் இல்லை.

பதட்டப்படாமல், தகவல் தொடர்புத்திறனில் கவனம் செலுத்தினாலே போதும். கூற வந்த கருத்தை எளிய வார்த்தைகளில், தெளிவாக எடுத்துரைத்தாலே நிறுவனங்களை கவர்ந்து விடலாம். பலருக்கும் குழு விவாதம் என்றாலே ஒரு வித பயம் இருக்கும். இது குறித்து சரியான புரிதல் இருந்தால் வெற்றி எளிது.
* விவாதங்களில் 10 முதல் 12 போட்டியாளர்கள் வரை, ஒரே நேரத்தில் பங்கேற்பர். தரப்படும் தலைப்பில் கருத்துக்களை விவாதிக்க வேண்டும். 20 முதல் 25 நிமிடங்களுக்கு விவாதம் நடக்கும். இதில் போட்டியாளரின் பண்புகளும் பரிசோதிக்கப்படுகின்றன.

* தற்போதைய வணிக, பொருளாதாரச் சூழலில் தேவைப்படும் டீம் ஸ்பிரிட் எனப்படும் குழு சார்ந்த குணாதிசயம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. டீம் லீடராக இருப்பவர், குழுவில் உள்ளவரை வழிநடத்தி, அரவணைத்துச் செல்லும் குணத்தைப் பெற்றிருப்பது அவசியம். ‘ஐடி’ துறையில் பணிக்கு சேர்ந்த துவக்கத்தில், குழு உறுப்பினராக செயல்படும் ஒருவர், சில மாதங்களிலேயே தலைவராக உருமாற, டீம் ஸ்பிரிட் அவசியம்.

* மற்றவரோடு ஒத்துப் போகாமல், தனது கருத்தையே விதண்டவாதமாகப் பேசுபவர், தலைமைப் பண்புக்கு சரிபட்டு வரமாட்டார். தரப்பட்ட தலைப்பில் உணர்ச்சி பொங்க பேசுபவரும், தலைமைப் பண்பைப் பெற்றவரல்ல. தலைப்பை நன்றாக புரிந்து கொண்டு, அனைவரின் கருத்தையும் அதை நோக்கி குவியச் செய்து, ஒருமித்த கருத்தை உருவாக்குபவரே தலைமைப் பண்பைப் பெற்றவர். இது குழு விவாதம் மூலம் பசோதிக்கப்படுகிறது.

* இதுதவிர, விவாதத்தை துவக்கி வைப்பது, கருத்தில் உறுதி, சொந்தமாக கருத்துக்களைப் பெற்றிருப்பது, மற்றவரை வசீகரிக்கும் தன்மை, விஷய ஞானம் போன்றவையும் குழு விவாதத்தில் பரிசோதிக்கப்படுகின்றன. இவற்றை கருத்தில் கொண்டு செயல்பட்டால், குழு விவாதத்திலேயே நிறுவனங்களை கவர்ந்து எளிதில் சாதிக்கலாம்.