பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க

ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்கின்றது மருத்துவ உலகம். பண்டைய காலத்தில் பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி உண்டு. ஆனால் இன்றைக்கு பற்கள் பாதிக்கப்பட்டால் இதயம், பக்கவாதம் போன்ற நோய்களும் எட்டிப்பார்க்கும் என்கின்றனர் மருத்துவர்கள். அத்துடன் முக அளகும் போய்விடுகின்றது. எனவே பற்களை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியது மிக அவசியம்.

பற்களை பாதுகாக்க வீட்டில் உள்ள பொருட்களே உதவுகின்றன. மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி, சிறு  வயதில் இருந்தே பற்களை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்களை இழந்து அவஸ்தைப்படுவோர் கூறும் அறிவுரைகளாகும். 

பொதுவாக பற்களில் பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னரே மருத்துவரைப் பார்க்கும் வழக்கம் எம்மில் பலருக்கும் உள்ளது. குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.

கீரைகளை நன்றாக மென்று துப்பலாம். இதனால் பல் இடுக்குகளில் உள்ள உணவுப்பொருட்கள் வெளியேறிவிடும், பற்கள் ஆரோக்கியமடையும். பச்சை வெங்காயத்தை மூன்று நிமிடம் நன்றாக மென்று துப்ப வாய், பற்களில் உள்ள தேவையற்ற கிருமிகள் இறந்துவிடும். உணவு உண்டவுடன் வெதுவெதுப்பான நீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து நன்றாக கொப்பளிக்க வேண்டும்.

சத்தான உணவுகள்

சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சிலில் உள்ள அமிலம் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது.

தினசரி உணவில் கால்சியம், வைட்டமின் சி போன்றவைகளை அதிகம் சேர்த்துக்கொள்வது பற்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். தினசரி அரை எலுமிச்சையை சாறு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்கலாம்.

பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.

பல்வலியை போக்க
பல்வலி ஏற்பட்டால் அந்த இடத்தில் சிறிதளவு வெள்ளைப் பூண்டை எடுத்து பல் வலிக்கும் இடத்தில் வைக்க நிவாரணம் கிடைக்கும். அதேபோல் கிராம்பு பொடி செய்து பல்வலி உள்ள இடத்தில் வைக்கலாம். வெள்ளைப் பூண்டு, கல் உப்பு சேர்த்து நன்றாக பல் தேய்க்க பல்வலி குணமாகும்.

வாய் துர்நாற்றம் போக

தினசரி நன்றாக பல்துலக்க வேண்டும். வாய், நாக்கு உள்ளிட்ட இடங்களில் அழுக்குகளை நீக்க வேண்டும். கொத்தமல்லி இலைகளை நன்றாக மென்று சாறுகளை விழுங்கலாம்.
வெதுப்பான நீரில் ஒரு டீ ஸ்பூன் இஞ்சி, ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து நன்றாக கொப்பளிக்க வேண்டும். தினசரி மூன்று முறை இவ்வாறு செய்யலாம். சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும்.
வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிதளவு பேகிங் சோடா, சிறிதளவு தூள் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கலாம்.

பற்கூச்சம் ஏன்? 
பிறிட்சில் இருந்து எடுத்தது போன்ற குளிரான உணவுகளை (ஐஸ்கிறீம்) உண்ணும் போது அல்லது, குளிரவைத்த மென்பானங்களை அருந்தும்போது பற்கள் கூசும்.

அதேபோல புளிப்பு அதிகம் உள்ள பழங்கள், புளிப்பான உணவுப் பண்டங்களை உண்ணும்போதும் கூசும். சிலருக்கு கடுமையான இனிப்பும் கூசவைக்கும்.

பொதுவாக எமது பற்களின் மேற்புறம் எனாமல் எனப்படுவது கடினமான ஒரு பூச்சினால் பாதுகாக்கப்பெற்றுள்ளது, எமது உடலின் மிகக் கடுமையான பகுதி எனாமல்தான். இது உணர்வற்றது அதனால் வலி தெரிவதில்லை.

ஆனால் எனாமலுக்கு உள்ளே மென்மையான நரம்புச் செறிவுள்ள டென்ரீன் இருக்கிறது. வெளியே உள்ள எனாமலுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளே உள்ள டென்ரீன் வெளிப்பட்டால் அது வலியை உணரும். எனவே எனாமலில் சிதைவினால் ஏற்படுவதே பற்கூச்சம்

பற்களும் முரசும் சந்திக்கும் பகுதியில் எனாமலின் தடிப்பு மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் சிறிய சேதம் அதில் ஏற்பட்டாலும் பற்கூச்சம் ஏற்படும்.

காரணங்கள்

மிக முக்கிய காரணம் நீங்கள் உபயோகிக்கும் பிரஸ்சும் அதனை நீங்கள் உபயோகிக்கும் முறையும்தான்.

பிரஸ்சைப் பொறுத்தவரையில் மென்மையான அல்லது நடுத்தரமுள்ள பிரஸ்சை (Soft or Medium)மட்டுமே உபயோகியுங்கள்.

மருத்துவர் ஆலோசனை கூறினால் மட்டுமே தடிப்பமான (Hard) பிரஸ் தேவை.

பல் துலக்கும் முறை
பல் துலக்கும் முறையும் முக்கியமானதாகும்.
அடுப்புக் கரி மண்டிய சமையல் பாத்திரத்தை அழுத்தித் தேய்த்துக் கழுவுவதுபோல பிரஸ்சால் கண்டபடி பற்களை உரச வேண்டாம். அப்படிச் செய்வதனால் பற்களை மட்டுமல்லாது முரசுகளையும் புண்படுத்திவிடும்.

மேல்வாய்ப் பற்களை மேலிருந்து கீழ் நோக்கித் துலக்குங்கள். அதே போல கீழ்வாய்ப் பற்களை கீழிருந்து மேல் நோக்கித் துலக்குங்கள். இவ்வாறு துலக்கும்போது முரசு காயப்பட்டு தேயாது.

பல் அரிப்பு Dental Erosion என்பது பற்கூச்சத்திற்கான மற்றொரு காரணமாகும்.

இது பல்லின் மேற்பரப்பான எனாமலில் ஏற்படும் நுண் அரிப்புகளாகும். அமிலத் தன்மையான உணவுகளாலும் பானங்களாலும் அவ்வாறு ஏற்படும். எனாமல் கரைந்தால் உள்ளே இருக்கும் டென்ரீன் வெளித் தெரியவரும்.

முரசு கரைதல் மற்றொரு காரணமாகும். முரசின் கன அளவு குறைந்து கொண்டு போகும். வயதாகும் போது இது தானாக நடக்கும் செயலாகும்.
முரசு கரைந்து செல்லும்போது பற்களின் வேர் வெளித் தெரிய ஆரம்பிக்கும். பல் வேரை எனாமல் மூடியிருப்பதில்லை.
அதனால்தான் முரசு கரைந்து அவை வெளியே வந்ததும் பற் கூச்சம் ஏற்படுகிறது.

முரசு நோய்கள் மற்றொரு காரணமாகும் வாயை ஒழுங்காகச் சுத்தம் செய்யாது விட்டால் பற்களின் மேல் அழுக்கு மென்படலமாகப் படிய ஆரம்பிக்கும். இது பிளாக் (Dental Plaque) எனப்படும். இதைக் கவனியாது விட்டால் அது இறுகி கறையாகப் (Tartar) படியும்.  இவ்வாறான கறை படர்ந்தால் முரசு கரைதல் தீவிரமாகும். முரசு நோய்களுக்கு நீரிழிவு நோயும் முக்கிய காரணியாகும்.

பல்லுக் கடித்தல் பழக்கம் காரணமாக பற்களின் எனாமல் படிப்படியாகக் கரைந்து பற் கூச்சத்தை ஏற்படுத்தும்.
பற்சொத்தை பல் உடைதல் ஆகியவற்றால் ஆரம்பத்தில் பற் கூச்சம் ஏற்பட்டாலும், அதன் பின் பெரும்பாலும் பல்வலிதான் ஏற்படும். நித்திரையில் பல் கடித்தல் கடுமையாக இருந்தால் உங்கள் பற்களைப் பாதுகாக்க Tooth guard என்னும் உபகரணம் பாவிக்கலாம்.

பற்களை வெண்மையாக்குவதற்கு உபயோகிக்கும் பற்பசைகள் பெரும்பாலும் பேக்கிங் பவுடர் மற்றும் பெரோட்சைட் போன்றவற்றைக் கொண்டிருக்கும். அவற்றை அதிகம் உபயோகித்தாலும் எனாமல் கரைந்து பற்கூச்சம் ஏற்படும்.

சில தருணங்களில் நீங்கள் பல் மருத்துவரிடம் சென்று வந்தாலும் பற்கூச்சம் ஏற்படுவதுண்டு, பல் சுத்தப்படுத்துதல் மற்றும் பல பற்சிகிச்சைகளின் பின் ஏற்படக் கூடிய பற்கூச்சம் தற்காலிகமானது. ஒரு சில வாரங்கள் செல்ல தானே குணமாகிவிடும்.

வாயைச் சுத்தமாக வைத்திருக்க உபயோகிக்கப்படும் சில மருந்துகளில் (Mouth Wash) அமிலத்தன்மை இருக்கிறது. ஏற்கனவே டென்ரின் சேதமுற்ற ஒருவர் தொடர்ந்து அத்தகைய வாய் கொப்பளிக்கும் மருந்துகளை நீண்ட காலம் உபயோகித்தால் சேதம் மோசமாகி பற்கூச்சத்தை கொண்டுவரும்.

ஆனால் புளோரின் கலந்த வாய் கொப்பளிக்கும் மருந்துகள் பற்கூச்சத்தை குறைக்கும். எனவே பல் மருத்துவரின் ஆலோசனையுடனேயே அவற்றை உபயோகிப்பது உசிதமானது.

பற்கூச்சம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்.

வாய்ச் சுத்தத்தை ஒழுங்காகப் பேணுங்கள். காலை மாலை பல்துலக்குவதுடன், உணவுகள் நீராகாரங்களின் பின் வாயை அலசிக் கொப்பளிப்பது அவசியம். கடும் இனிப்பான மற்றும் புளிப்பு அமிலத் தன்மையுள்ள உணவு நீராகாரங்களின் பின் மிக முக்கியமாகும்.

மென்மையான பற்தூரிகையை உபயோகியுங்கள்.

முற்புறம் வளைந்த தூரிகைகள் பல்வரிசைகள் முழுவதையும் இலகுவாக அடைந்து சீர்மையாகத் துலக்க உதவும். தூரிகையால் கடுமையாக அழுத்தித் தேய்ப்பது கூடாது.

மென்மையாகவும், கவனமாகவும் சரியான முறையிலும் பல் துலக்க வேண்டும். முக்கியமாக முரசும் பல்லும் இணையும் இடங்களில் மிக அவதானமாகத் துலக்கவும்.

பற்கூச்சத்தைக் குறைப்பதற்கான விசேட பற்பசைகள் பரவலாகக் கிடைக்கின்றன. புளோரின் கலந்த பற்பசைகள் நல்லது. படுக்கப் போகும்போது அத்தகைய பசையில் சிறிது கூசும் பல்லின் மேல் தடவுவது உதவலாம். பற்களை வெண்மையாக்குவதற்கு உபயோகிக்கும் விசேட பற்பசைகள் பற்கூச்சத்திற்குக் கூடாது.

அமிலத்தன்மை, இனிப்பு, புளிப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிருங்கள். கடும் சூடு, கடும் குளிருள்ளவையும் கூடாது.

உடன் சிகிச்சை அவசியம்
இதேபோல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்க முடியும்.

நன்றி :பனிப்புலம் 

No comments:

Post a Comment