விண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா சாவ்லா
Kalpana Chawla Ph.D.
(1962-2003)
நேற்றைய தினத்தில் வாழ்ந்தவர் இன்றைய நாளில் உயிருடன் இல்லை என்னும் பெருமை யுடையது இவ்வுலகு!
திருவள்ளுவர் [நிலையாமை]
விண்வெளித் தீர மாது கல்பனாவின் மின்னல் போன்ற வாழ்வு!
2002 ஆம் ஆண்டு மே மாதம், ‘பெண் விண்வெளி வீராங்கனைகள் ‘ என்னும் புத்தகத்துக்குக் கல்பனா சாவ்லாவை நேர்முக வினாக்கள் கேட்ட கனடாவின் எழுத்தாளி, லாரா உட்மன்ஸீ [Laura Woodmansee] கூறியது: ‘கல்பனா விண்வெளித் தேர்வில் வேட்கை மிகுந்தவராகத் தோன்றினார்! துடிப்பாக வாலிபம் பொங்கி இனிப்புக் கடைமுன் நோக்கும் மதலை போல் ஆர்வத்துடன் நடமாடினார்! தான் செய்யும் வேலைகளில் பெரும் இறுமாப்புக் கொண்டு, பங்கு கொள்ளப் போகும் கொலம்பியா பயணப் பணியில் முற்றிலும் ஊறிப் போய், உள்ளொளி வீசக் காணப் பட்டார்! மெய்யாகவே அவர் எதிர்கால விண்வெளிக் கனவுகளில் மிதந்தார்! சந்திர மண்டலத்தில் ஆராய்ச்சிகள் செய்ய ‘விஞ்ஞான அரங்கு ‘ [Scientific Base] ஒன்றை நிறுவிப் பணி புரியத் தான் விரும்புவதாகக் கூறினார்! ‘ இவ்வாறு மேதை போல் பேசி, மங்கிடப் போகும் மாபெரும் ஓர் அறிவுச் சுடர் மகத்தான ஒளி வீசித் திடீரென மின்னல் போல் மறைந்தது!
பாரத நாட்டில் யாரும் அறியாத பாமரக் குடும்பத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பின் போது விமானப் பொறியியலில் வேட்கை கொண்டு, பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் 20 வயதில் விமானத்துறைப் பொறியியல் பட்டம் பெற்று, அதற்குப் பிறகு அமெரிக்கா நோக்கிச் சென்று, அங்கே 22 ஆவது வயதில் டெக்ஸஸ் பல்கலைக் கழகத்தில் M.Sc. [Aerospace Engineering] பட்டமும், அடுத்து 26 வயதில் கொலொராடோ பல்கலைக் கழகத்தில் விண்வெளி எஞ்சினியரிங்கில் Ph.D. [Aerospace Engineering] பட்டத்தையும் பெற்று, நாஸாவில் 32 ஆவது வயதில் விண்வெளி வீராங்கனை ஆகிய கல்பனாசாவ்லாவைப் போன்ற வேறோர் வனிதாமணி உலகத்தில் இதுவரை வாழ்ந்திருக்கிறாரா ?
எட்டாண்டுகள் அமெரிக்க அண்டவெளி விமானியாகத் திகழ்ந்து, இரண்டு முறை விண்வெளி மீள்கப்பலில் வெற்றிகரமாய்ச் சுற்றி, வானை நோக்கி விண்மீன்களின் கண்கொளாக் காட்சியில் கவர்ச்சி யுற்று, அந்த இனிய கதைகளை நமக்கு மீண்டும் சொல்லாமல் மறைந்த, மாதர் குல மாணிக்கத்தை மனித இனம் மறக்க முடியுமா ? ‘காரிருளில் விண்மீன்களைக் காண்பதும், பகலில் பூகோளம் வேகமாய் உருள்வதை நோக்குவதும் என் நெஞ்சில் புல்லரிப்பை உண்டு பண்ணுகிறது! இரண்டாம் தடவையாக அவற்றைக் காண்பது ஓர் வாழும் கனவு! இனிய கனவு! அதுவும் மற்றும் ஒரு முறை! ‘ கொலம்பியா விண்கப்பலில் ஏறும் முன்பு இவ்வாறுக் கூறிச் சென்ற கல்பனா மெய்க்கனவிலிருந்து விடுபட்டு மீண்டும் விழிக்கவே வில்லை!
பாரதப் பிரதமர் அடல் பெஹாரி வாச்பையி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு வருந்தல் தந்தி அனுப்பினார்: ‘இந்த துக்க நாளில் நாங்களும் உங்களுடன் இணைந்து வருந்துகிறோம். விண்வெளிக் கப்பலில் பணியாற்றிய உன்னத வாலிப ஆடவர், மாதர் அனைவர் சார்பிலும் எங்கள் இதயங்கள் நோகுகின்றன. மரணமானவர்களில் ஒருவர் பாரதத்தில் பிறந்தவர் ஆனாதால், இந்தியாவில் எங்களுக்கு இந்த பரிதாபமான விபத்து, பெருந்துயரை உண்டாக்கி யிருக்கிறது! ‘
|
மீள்கப்பல் பயணத்தில் மீளாது போன ஏழு விண்வெளித் தீரர்கள்!
கொலம்பியா மீள்கப்பல் இருபதாம் நூற்றாண்டு உருவாக்கிய ஓர் நூதனப் பறக்கும் பூத வாகனம்! அது ஏவுகணை போல் [Missile] ஏவப்பட்டு, அண்டவெளிச் சிமிழ்போல் [Spacecraft] சுழல்வீதியில் [Orbit] சுற்றி வந்து, இறக்கை முளைத்த ஜெட் விமானம் போல் [Aircraft], தரைதொட்டு இறங்கும் முத்திறம் உடைய, ஓர் ஒப்பில்லா பொறி நுணுக்க யந்திரம்! 1986 இல் நிகழ்ந்த விண்கப்பல் சாலஞ்சர் விபத்துக்குப் பின்பு கடந்த 16 ஆண்டுகளாக, நான்கு விண்வெளிக் கப்பல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பயணங்களை வெற்றிகரமாக முடித்திருக்கின்றன! தொலைக்காட்சி சாதனத்தில் விண்கப்பல் செங்குத்தாக ஏறுவதும், பயணத்தை முடித்துக் குடை விரித்திழுக்க தொடுதளத்தில் விரைந்து, அது வந்து நிற்பதும் கண்கவர்க் காட்சியே! அக்காட்சிகளை ஆயிரக் கணக்கான மாந்தர்கள் தூரத்தில் நின்று ஏவுதளத்து அருகிலும், இறங்கு தளத்து அருகிலும் கண்டு புளதாங்கிதம் அடைகிறார்கள்!
ஆனால் 2003 பிப்ரவரி முதல் தேதி யன்று ஃபிளாரிடா தொடுதளத்தை நோக்கி இறங்கிய கொலம்பியா விண்கப்பல் 16 நிமிடங்களுக்கு முன்பு, காலிஃபோர்னியா டெக்ஸஸ் வானிலே பிளவடைந்து சிதறிப் போவதை நேராகவும் தொலைக்காட்சி மூலமாகவும் கண்ட உலக மக்கள், அடைந்த வேதனையை எவ்விதம் விவரிப்பது ? விண்கப்பலில் பறந்த ஏழு விண்வெளி வீரர்களை மகிழ்ச்சியோடு வரவேற்க வந்த தாய், தந்தையர், கணவர், மனைவிமார், சின்னஞ் சிறு பிள்ளைகள் ஆகியோர் மனமுடைந்து மயக்க முற்றதை எப்படி வார்த்தைகளில் எழுதுவது ?
நியூயார்க் நகரில் 2001 செப்டம்பர் 11 தேதிக் காலை வேளை, இரட்டைக் கோபுர மாளிகைகளில் நிகழ்ந்த கோரக் காட்சியை மக்கள் நேராகவும், தொலைக் காட்சியிலும் கண்டு துடிப்புற்ற பின்பு, மறுபடியும் அதுபோல் ஒரு கோர மரணச் சம்பவம் நிகழ்வதைப் பார்த்துத் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்ந்தனர்! பாரத நாட்டில் பிறந்து அமெரிக்க விண்வெளி விமானியான, கல்பனா சாவ்லா விண்கப்பலில் வந்து இறங்குவதைக் கண்டு வாழ்த்த, இந்தியாவில் அவர் படித்த தாகூர் பால் நிகேதன் பள்ளி நண்பர்கள் ஆடிப் பாடி ஆரவாரம் செய்து கொண்டிருந்த அனைவரும் அப்படியே கல்லாய் நின்றனர்!
கொலம்பியா பயண ஆளுநர் ரிக் ஹஸ்பன்ட் [Rick Husband 45], பயண விமானி, வில்லியம் மெக்கூல் [William McCool 41], பயணச் சிறப்புநர் மைக்கேல் ஆன்டர்ஸன் [Michael Anderson 43], பயணச் சிறப்புநர், டேவிட் பிரெளன் [David Brown 46], பயணச் சிறப்புநர் இலான் ராமோன் [Ilan Ramon 47], பயணச் சிறப்புநர், மருத்துவ டாக்டர் லாரல் கிளார்க் [Dr. Laurel Clark 41], பயணச் சிறப்புநர், பறப்பியல் டாக்டர் கல்பனா சாவ்லா [Kalpana Chawl 41] ஆக மொத்தம் ஏழு பேர் [ஐந்து ஆடவர், இரு மாதர்] விபத்தில் மாண்டனர்! ஏழு பேரில் இலான் ராமோன் இஸ்ரேலிலிருந்து பங்கெடுத்த முதல் விண்வெளி விமானி! மற்ற ஆறு பேரும் அமெரிக்கர்! இந்தியாவில் பிறந்து முதல் அமெரிக்க விண்வெளி விமானியான கல்பனா சாவ்லா இரண்டாம் முறையாக விண்கப்பலில் பயணம் செய்தவர்!
விண்வெளி மீள்கப்பல் இறங்கும் போது வானில் வெடித்தது!
1986 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி விண்வெளி மீள்கப்பல் ‘சாலஞ்சர் ‘ [Space Shuttle, Challenger] ஃபிளாரிடா கனாவரல் முனை [Cape Canaveral, Florida] ஏவுதளத்திலிருந்து செங்குத்தாக எழுந்து, ஒரு நிமிடம் இயங்கி 50,000 அடி உயரத்தில் [சுமார் 10 மைல்] செல்லும் போது, திடாரென பழுது ஏற்பட்டு வானத்தில் வெடித்தது! விண்கப்பல் சுக்கு நூறாகப் போனதுடன், பயணம் செய்த ஏழு அண்டவெளி விமானிகள் [ஐந்து ஆடவர், இரு மாதர்] ஒருங்கே உயிரிழந்தனர்! பதினேழு ஆண்டுகளுக்குப் பின்பு மற்றுமோர் விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா [Space Shuttle Columbia] ஏவுதளம் நோக்கி இறங்கும் போது, எதிர்பாராது பயங்கர விபத்துக் குள்ளானது! சாலஞ்சர் மீள்கப்பலைப் போன்று, கொலம்பியா விண்கப்பலில் இறந்தவர், நால்வர் ஆடவர், இருவர் மாதர். முன்னது ஏவப்படும் போது ஒரு நொடியில் வெடித்தது! பின்னது தரைக்கு இறங்கும் போது சிறிது, சிறிதாய்ச் சிதைந்து, முடிவில் வெடித்தது!
ஐந்து விண்வெளிக் கப்பல்களில் சாலஞ்சர் வெடித்த பின் நான்காகி, இப்போது கொலம்பியா சிதைந்து மூன்று மீள்கப்பல்களாய் குறைந்து விட்டன! பிழைத்தி ருக்கும் மூன்று விண்கப்பல்களின் தலைவிதியும், எதிர்கால விண்கப்பல் பயணங்களின் பணிவிதியும், விபத்தின் காரணங்களை அறிந்த பிறகுதான் நிர்ணய மாகும். இதுவரை நான்கு மீள்கப்பல்களின் 111 விண்வெளிப் பயணங்களைச் சுமார் 21 ஆண்டுகள் நாஸா திட்டப்படித் திறம்படச் செய்து காட்டியுள்ளது! கொலம்பியா விண்கப்பல்தான் முதலில் கட்டப்பட்டுத் தயாரானது. 1981 ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகள் சீராய்ப் பணியாற்றிய விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா! அது 27 தடவை விண்வெளியில் ஏவப்பட்டு, விண்ணாய்வுகளை செவ்வனே முடித்து, வெற்றிகரமாகப் பூமியில் இறங்கி யுள்ளது. இருபத்தி எட்டாவது முறை ஏவிய போது, திட்டப்படி அண்டவெளியில் புகுந்து, 16 நாட்கள் விண்வெளிப் பணிகளை முடித்து, பூமிக்கு மீளும் போதுதான் தீவிரப் பழுதுகள் ஏற்பட்டு விபத்துக் குள்ளாகி, இறுதி 16 நிமிடங்களில் அது சிதைய ஆரம்பித்தது!
காலை 8-15 மணிக்கு [EST], இந்து மகாக் கடலைக் கடக்கும் போது, பயண அதிபதி ரிக் ஹஸ்பென்ட் [Commander Rick Husband] பறக்கும் விண்கப்பல் ‘சுற்றுவீதி முறிவு ‘ [Deorbit] செய்ய, ராக்கெட் எஞ்சிகளை ஒரு நிமிடம் இயக்கினார்! கொலம்பியா ஃபிளாரிடா தளத்தைத் தொட இன்னும் அரை மணி நேரம் ஆகும்.
விண்கப்பல் சுற்றுவீதி முறிவு: உயரம்: 170 மைல், வேகம்: 15900 mph, ஃபிளாரிடா தொடுதளம்: 12520 மைல் தூரம். பயண இடம்: இந்து மகாக் கடல்.
பூமண்டல மீட்சி [Re-entry]: விண்கப்பல் 180 டிகிரி திசை திரும்பி, முனை மூக்கு மேல் நோக்க, வெப்பம் தாங்கும் வயிற்றைக் காட்டி உராய்வுக் காற்றை எதிர்கொண்டு, பூமண்டல ‘மீட்சிக்கு ‘ [Re-entry] விண்கப்பல் முற்பட்டது. விண்கப்பல் 25 நிமிடங்கள் இருள்மயச் [Blackout] சூழலில் இறங்கியது! உயரம்: 48 மைல்; வேகம்: 16125 mph. ஃபிளாரிடா தொடுதளத் தூரம்: 3275 மைல்!
உச்சநிலை வெப்பத்தில் விண்கப்பல்: உயரம்: 42 மைல், வெப்ப நிலை: 20 நிமிடங்கள், வேகம்: 14520 mph. ஃபிளாரிடா தொடுதளம் : 1720 மைல் தூரம்.
பூமிக்கு மேல் 39 மைல் உயரத்தில் கொலம்பியா பயணம் செய்யும் போதுதான் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன! கொலம்பியா விண்கப்பல் 8-59 மணிக்கு [EST], ஃபிளாரிடா தொடுதளத்தில் இறங்குவதற்கு 16 நிமிடங்களுக்கு முன்பு டெக்ஸஸ் மாநிலத்தின் மீது வெடித்துச் சிதறியது!
விண்கப்பல் சிதைந்து போனதற்குக் காரணங்கள் என்ன ?
கொலம்பியா விண்கப்பலில் சுமார் 2.5 மில்லியன் உறுப்புகள் [Components] உள்ளன! அவற்றின் ‘உறுதிப்பாடு நிலை ‘ [Reliability Level] 99.9% என்று வைத்துக் கொண்டாலும், வலுவற்ற 2500 உறுப்புகளில் சில கோளாறாகி விண்கப்பல் விபத்துள்ளாக வாய்ப்புகள் எழலாம்! 2003 பிப்ரவரி முதல் தேதி விண்கப்பலின் மீட்சியின் போது, முதலில் இடது இறக்கையில் இருந்த ‘உஷ்ண உளவிகள் ‘ [Temperature Sensors] பழுதாகி, உஷ்ண அளவுகள் குறிப்பயண ஆட்சி மையத்துக்கு [Mission Control Centre] அனுப்பப் படாது சமிக்கை அறிவிப்புகள் தடைப்பட்டன! கொலம்பியா கனாவரல் முனை ஏவுதளத்தில் 2003 ஜனவரி 16 ஆம் தேதி ராக்கெட்டுகள் எறியத் துவங்கி, விண்கப்பல் செங்குத்தாக ஏறும் போது, எரிபொருள் புறக்கலனிலிருந்து விலகிக் கீழே விழுந்த ஓர் நுரைக் கவசம் [Foam Insulation] இடது இறக்கை மீது பட்டது! ஆனால் நாஸா பயண ஆணையாளர்கள் நுரைக் கவசத்தால் ஏற்பட்ட இறக்கை உடைசல், விண்கப்பல் சிதைவுக்குக் காரணமாக இருக்கவே முடியாது என்று உறுதியாக அறிவித்தனர்!
கொலம்பியாவின் 70% உடம்பில் சுமார் 27,000 செராமிக் வெப்பக் கவச ஓடுகள் [Ceramic Heat Shield Tiles] மனிதக் கரங்களால் ஒட்டப் பட்டுள்ளன! அவைதான் விண்கப்பல் மீட்சியின் போது [During Re-entry] பூமண்டலக் காற்று உராய்வில், கனல் பற்றி எறியும் வெப்பத்தைத் தாங்கி, விண்கப்பலைப் பாதுகாக்கின்றன! கவச ஓடுகள் யாவும் சிலிகா நார்களால் [Silica Fibres] ஆக்கப் பட்டு, செராமிக் பிசினால் [Glue] பிணைக்கப் பட்டவை. கீழே விண்கப்பல் வயிற்றுப் பகுதியில் மட்டும் 20,000 கவச ஓடுகள் [அளவு: 6 'x6 ', தடிமன்: 0.5 '-3.5 '] கைகளால் ஒட்டப் பட்டுள்ளன! விண்கப்பலின் மேலுடம்பு முதுகுப் பகுதியில் 7000 கவச ஓடுகள் மூடியுள்ளன. கவச ஓடுகள் யாவும் மிக நலிந்த பளுவைக் கொண்டவை! அவை வெப்பக் கனலை வெகு விரைவில் எதிரொளித்து அகற்றுபவை! 1260 C உஷ்ணத்தில் உள்ள கவச ஓடைத் தணல் அடுப்பிலிருந்து வெளியே எடுத்துக் கையில் தொட்டாலும் காயம் எதுவும் ஏற்படாது! விண்கப்பல் மூக்கிலும், இறக்கைகளின் பறப்பு முனைகளிலும் கவச ஓடுகள் கிடையா! அவற்றுக்குப் பதிலாக, உறுதி செய்யப்பட்ட கரிக்கட்டிகளால் [Reinforced Carbon] அவை மூடப்பட்டுள்ளன.
வெப்பம் மிகையாகத் தாக்கப் படும் பாகங்கள் மட்டும் தடித்த கவச ஓடுகளால் மூடப்படும்! விண்கப்பல் பயணத்தின் போது ஏற்படும் அதிர்வு, வெப்பம், குளிர்ச்சி ஆகிய வேறுபாடுகளால் சில கவச ஓடுகள் கழன்று விழுவதும் உண்டு! அவ்விதம் இடது இறக்கையின் கீழிருந்த சில கவச ஓடுகள் விலகி விழுந்து, வெப்பம் சூடேறியதால் உஷ்ண உளவிகள் பழுதடைந் திருக்கலாம்! கவச ஓடுகள் அற்றுப் போன இடங்கள் தீயால் எரிந்து போய், முதலில் இடப்பாகங்கள் உடைந்து, விண்கப்பலின் நேர்முகச் சீர்நிலைப்பாடு தடுமாறிக் கப்பல் பறப்புக் கட்டுப்பாடு முறிந்திருக்கலாம் என்று ஒரு கருத்து உலவி வருகிறது! அல்லது அண்டவெளிக் கற்கள், குப்பைகள் இடது இறக்கையைத் தாக்கி உடைத்திருக்கலாம்! வாயு சீரோட்டப் பறப்புக் கட்டுப்பாடு [Aerodynamic Flight Control] முறியவே, கப்பல் ஆட்டி அசைக்கப் பட்டு, கப்பலின் பல உறுப்புகள் உடைந்து சிதறிப் போகக் காரண மாயிருக்கலாம்!
இறுதியில் மிஞ்சிய விண்கப்பலும் வெடித்து முழுவதுமே சின்னா பின்னமாய்ப் போனது! பல இடங்களில், பல மாநிலங்களில் சிதறிய, கப்பலின் பாகங்களைச் சேர்த்து வைத்துக் கொலம்பியா விபத்தின் காரணத்தை உளவறிய, ஆய்வாளர் களுக்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம்!
விண்வெளி மீள்கப்பலில் பயணம் செய்த தீர விமானிகள்
கொலம்பியா விண்கப்பல் ஆளுநர் ரிக் ஹஸ்பென்ட் அமெரிக்க விமானப்படை கெர்னல் [Air Force Colonel]. இருமுறை விண்கப்பலில் பயணம் செய்து அனுபவம் பெற்றவர். 1999 இல் அகில நாட்டு விண்ணிலைத்தின் [International Space Station] துணை விமானியாகப் பணியாற்றி முதன் முதல் சுற்று வீதியில் நகரும் விண்சிமிழுடன் இணைப்பு செய்து [Docking with Orbiting Outpost] காட்டியவர்! அவரது அண்டவெளிக் குழுவினர் ஆறு ஆண்டுகளுக்குப் பின் முதன் முதலாக 16 நாட்கள் நீண்ட விஞ்ஞானச் சோதனைகளை வெற்றிகரமாக முடித்தனர்! திருமண மாகி மனைவியும், இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
வில்லியம் மெக்கூல் கொலம்பியாவின் அடுத்த விமானி. அமெரிக்கக் கடற்படை ஆளுநர், மற்றும் கடற் படையின் ஒரு விமானி [U.S. Navy Aviator]. திருமண மானவர். அவருக்கு மனைவியும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
Husband, Ramon, McCool
இரண்டு பெண் விமானிகளில் ஒருவரான, லாரல் கிளார்க் அமெரிக்க கடற்படை ஆளுநர், மற்றும் கீழ்க்கடல் மருத்துவ டாக்டர் [U.S. Navy Undersea Medical Officer], கடற்படை விமான அறுவை நிபுணர் [Flight Surgeon]. கணவரும் ஓய்வெடுத்த கடற்படை விமான அறுவை நிபுணர் டாக்டர், நாஸாவில் பதவி வகிப்பவர். லாரலுக்கு கொலம்பியா அனுபவம் முதல் பயணம்! மேலும் முடிவாகப் போன இறுதிப் பயணம்! அவர்களுக்கு ஒரு புதல்வன் உண்டு!
கொலம்பியா பளுதாங்கி நிர்வாகி [Payload Commander], மைக்கேல் ஆன்டர்ஸன் அமெரிக்க விமானப்படை லெஃப்டினென்ட் கெர்னல். 80 விண்வெளி விஞ்ஞானச் சோதனைகள் நடத்த எல்லா வித ஏற்பாடுகளும் செய்ய வேண்டியது அவரது பணி.
விண்வெளிச் சிறப்புநர் டேவிட் பிரெளன் ஓர் அமெரிக்கக் கடற்படை விமான அறுவை மருத்துவர். கொலம்பியா அவரது முதல் பயணம்.
Brown & Anderson
இலான் ராமோன் இஸ்ரேலிலிருந்து வந்து கொலம்பியாவில் பங்கெடுத்த முதல் விண்வெளி விமானி. இஸ்ரேல் விமனப்படை கெர்னல். அவருக்கு மனைவி, மூன்று புதல்வர், ஒரு புதல்வி உள்ளனர்.
பாரதத்தில் பிறந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை
நாற்பத்தி ஒன்று வயதான கல்பனா சாவ்லா ஓர் பறப்பியல் எஞ்சினியர் [Flight Engineer]. பாரதத்தில் பிறந்து, அமெரிக்கக் குடிமகள் ஆன கல்பனா நாஸா விண்வெளி விமானியாகி, அண்டவெளித் தேடலில் உயிரைத் தியாகம் செய்தவர்! முதல் இந்திய விண்வெளி விமானி ராகேஷ் ஷர்மா [Rakesh Sharma] ரஷ்ய விண்சிமிழில் பயணம் செய்த பின், முதல் பெண் விண்வெளி விமானி என்று பெயர் பெற்றவர், கல்பனா! இரண்டாவது இந்திய விண்வெளி விமானி எனினும், அமெரிக்க விண்கப்பலில் இரண்டு முறை அண்டவெளியைச் சுற்றி வந்த முதல் விண்வெளித் தீர நங்கை என்று புகழடைந்தவர்!
Dr. Clark
‘முதன் முதல் இந்தியத் தபால் பயண விமானத்தை செலுத்திய ஜே.ஆர்.டி. டாடா [J.R.D. Tata] அவர்களே என்னைக் கவர்ந்தவர். நான் பறப்பியலைப் பின்பற்ற அவரே காரண கர்த்தா ‘ என்று கல்பனா சாவ்லா ஒரு முறைக் கூறியுள்ளார். கல்பனா இந்திய தேசத்தின் விண்வெளி வீராங்கனை! டில்லிக்கு வடக்கே 75 மைல் தூரத்தில் உள்ள கர்நல் [Karnal] என்னும் ஊரில் 1962 இல் கல்பனா பிறந்தார். தாகூர் பல் நிகேதன் பள்ளியில் [Tagore Bal Niketan School] கல்பனா கல்வி பயின்றார். கல்பனா சிறு வயதில் சைக்கிள் போட்டியில் சகோதரனுக்கு இணையாக ஓட்டிக் காட்டியவர்! இருவரும் வெகு தூரம் சைக்கிளில் போய் முடிவில் ஓர் விமானப் பயிற்சிக் கூடத்தின் அருகே வந்து நிற்பார்கள்! விமானங்கள் ஏறுவதையும் இறங்குவதையும் பல தடவை வேடிக்கை பார்த்துப் பிறகு அந்த வேட்கையே கல்பனாவை விமானத்துறைப் பொறியியல் பயிலத் தூண்டி விட்டதாக, அவர் ஒரு சமயம் கூறி யிருக்கிறார்! உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே, தானொரு விண்வெளி எஞ்சினியராக [Aerospace Engineer] வேண்டும் என்ற மன உறுதியில் இருந்தார்!
Kalpana Chawla
1982 இல் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் விமானவியல் எஞ்சினியரிங் படித்த ஆடவர் மத்தியில் பயின்ற ஒரே ஒரு பெண் மாணவராய், B.Sc. [Aeronautical Engineering] பட்டத்தைப் பெற்றார். அதற்குப் பிறகு அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து டெக்ஸஸ் பல்கலைக் கழகத்தில் [University of Texas] சேர்ந்து, 1984 ஆம் ஆண்டு M.Sc. [Aerospace Engineering] பட்டத்தைப் பெற்றார். அப்போது அமெரிக்கக் குடியினர் [U.S. Citizen] தகுதியும் கல்பனாவுக்குக் கிடைத்தது. பிறகு 1988 இல் கொலொராடோ பல்கலைக் கழகத்தில் [University of Colorado] மேற்படிப்பைத் தொடர்ந்து, தனது 26 ஆம் வயதில் ஆர்வமோடு படித்து Ph.D. [Aerospace Engineering] பட்டத்தையும் அடைந்தார்! கல்பனா ஓர் அமெரிக்கரைத் திருமணம் செய்து கொண்டார்! அவரது கணவர் ஜீன் பியர் ஹாரிஸன் [Jean-Pierre Harrison] ஒரு விமானப் பயிற்சியாளர் [Flying Instructor].
முதலில் காலிஃபோர்னியாவில் உள்ள நாஸாவின் அமெஸ் ஆய்வு மையத்தில் [Ames Research Center, Moffit Field] காற்றடிப்பில் ‘உயர் வினைபுரியும் விமானம் ‘ [Air Flows around High Performance Aircraft] எப்படி இயங்கும் என்று சோதனைகள் செய்தார். 1994 டிசம்பரில் நாஸாவின் விண்வெளி மீள்கப்பல் குறிப்பணிப் [Space Shuttle Mission] பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்பயிற்சிக்குப் பின் கல்பனா விண்வெளிக் கப்பல் பயணங்களில் சிறப்பநராகப் [Mission Specialist] பணி புரிய வேண்டும். 1997 இல் திட்ட மிட்ட அவரது முதல் கொலம்பியா விண்வெளிக் குறிப்பணி STS-87 [Space Mission STS-87]. STS-87 குறிப்பணி நாஸா நான்காவது முறை செய்யும், நுண்ணீர்ப்பியல் பளுதூக்கிப் பயணம் [Microgravity Payload Flight]. அப்பணியில் கல்பனா ‘சுய நகர்ச்சிக் கரம் ‘ இயக்குநராக [Robotic Arm Operator] வேலை செய்து, 376 மணி நேரங்கள் [சுமார் 15 நாட்கள்] அண்டவெளி அனுபவம் பெற்றுள்ளார். முதல் பயணத்தில், விஞ்ஞானத் துணைக்கோள் [Science Satellite] ஒன்று கட்டு மீறிக் கடந்து செல்லக் கைத்தவறு செய்ததால், கல்பனா பழிக்கப் பட்டார். உடனே அருகில் இருந்த மற்ற விமானிகள் அண்டவெளி நீச்சல் அடித்து [Space Walk], விலகிச் செல்லும் துணைக் கோளைக் கைப்பற்றினார்!
1997 முதல் கொலம்பியா பயணம் முடிந்த பின்பு, கல்பனா இமய மலைத் தொடர்களைக் கீழே பார்த்ததாகவும், கங்கை நதி கம்பீரமாகப் போவதைக் கண்டு களிப்படைந்த தாகவும் ஓர் இந்தியச் செய்தி நிருபரிடம் கூறினார்! ஆஃப்ரிக்கா பாலைவன மாகத் தோன்றுவதாகவும், அதில் நைல் நதி ஓர் நரம்பு போல் தெரிவதாகவும் நிருபரிடம் சொல்லி யிருக்கிறார்!
2003 ஜனவரி 16 ஆம் தேதி அவரது இறுதிப் பயணம் கனாவரல் முனை ஏவுதளத்தில் தயாராக இருந்த கொலம்பியா விண்வெளிக் கப்பலில் துவங்கியது! விபத்துக் குள்ளான கொலம்பியாவின் 28 ஆவது முடிவுக் குறிப்பணி STS-107 [Space Mission STS-107]! அதன் விமான ஆளுநர் ரிக் ஹஸ்பன்ட் [Commander Rick Husband] குழுவினருள் ஒரு குறிப்பணி சிறப்புநராகப் [Mission Specialist] பணி புரிந்தார்!
கொலம்பியா பயணத்தில் கல்பனா புரிய வேண்டிய பணிகள்
1. விண்கப்பலின் ‘பளுதாங்கி முற்றத்தில் ‘ [Payload Bay] பலவித அண்டவெளிச் சோதனைகள் புரியச் சாதனங்களை அமைக்க வேண்டியது.
2. விண்வெளியில் நுண் ஜீவிகள் வளர்ச்சிச் சோதனை [Astroculture (Bacteria)]
3. முற்போக்கு புரோடான் படிகச் சாதன ஆய்வு [Advanced Protein Crystal Facility]
4. வாணிபப் புரோடான் வளர்ச்சிச் சோதனை [Commercial Protein Growth]
5. உயிர்ப் பொறியியல் காட்சி முறை ஏற்பாடு [Biotechnology Demonstration System]
6. எட்டு உயிர்த்தொகுப்புச் சோதனைகள் [Biopack ESA, Eight Experiments]
7. சீர் போக்குப் புகைத் தணல் அடுப்புச் சோதனை [Combustion Module with Laminar Soot Processes]
8. ஆவிநீர் தீ அணைப்பு ஆராய்ச்சி [Water Mist Fire Suppression]
9. கீழ் லூயிஸ் எண்ணில் தீக்கோள அமைப்புச் சோதனைகள் [Structures of Flame Balls Experiments at Low Lewis-number]
10. தானியம் ஒத்த பண்டங்களின் யந்திரவியல் [Mechanics of Granular Materials]
11. விண்வெளியில் அழுத்த வாயுவின் ரசாயன வடியல் முறைச் சோதனைகள் [Vapour Compression Distillation Flight Experiments]
12. ஸியோலைட் படிக வளர்ச்சி உலை ஆய்வு [Zeolite Crystal Growth Furnace]
விண்வெளி மீள்கப்பல்களின் பிரச்சனைகள், எதிர்காலப் பயணங்கள்
1960-1972 ஆண்டுகளில் நாஸா வெற்றிகரமாக சந்திர மண்டலப் பயணங்களை நிகழ்த்திய அபொல்லோ திட்டங்கள் யாவும் ஓய்ந்த பின்பு, இரண்டாவது கட்ட விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] திட்டம் 1977 இல் உருவாகி 1981 ஆம் ஆண்டிலிருந்து பறப்பியல் படலம் ஆரம்பமானது!
விண்வெளி மீள்கப்பல் திட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே டிசைன் தவறுகள், நிதிச் செலவு மீறல் [Cost Overruns], தயாரிப்புத் தாமதங்கள், கள்ளத்தனம் [Fraud], நிர்வாகக் கோளாறுகள், இப்படி பல இடையூறுகள் ஏற்பட்டு, முதல் பயிற்சிப் பயணம் தொடங்கவே சுமார் பத்தாண்டுகள் ஓடிவிட்டன! ஒவ்வொரு விண்வெளி மீள்கப்பல் பயணத்துக்கும் [ஏவுதல், பறப்புக் கண்காணிப்பு, இறங்குதல்] சுமார் 250 மில்லியன் டாலர் செலவாகும் என்று அறியப்படுகிறது! ஐந்து விண்வெளிக் கப்பல்கள் உள்ள போது, ஆண்டுக்கு 60 அண்டவெளிப் பறப்புகளைத் நாஸா முதலில் திட்டமிட்டி ருந்தது! ஆனால் சராசரியாக நடந்தது, ஆண்டுக்கு 5 அல்லது 6 பயணங்களே! எஞ்சிய மூன்று விண்கப்பலில் இனிப் பயணங்கள் தொடருமாகில், அவற்றுக்கு ஒப்பியவாறு குறைந்து ஆண்டுக்கு 2 அல்லது 3 ஆகச் சிறுத்து விடலாம்!
1986 இல் ஏற்பட்ட சாலஞ்சர் விபத்தின் காரணத்தை உளவு செய்த போது, நாஸா அமெரிக்கக் காங்கிரஸிடம் மறைத்த, திரித்துக் கூறிய பல செய்திகள் தெரிய வந்தன! விண்கப்பல் பயணத்தின் மெய்யான செலவு கணக்குகள், திட்டங்களின் நிகழ்ச்சி நிரல்கள், தீவிரத் தகவல்கள் ஆகியவை மறைக்கப் பட்டிருப்பதுடன், பல பில்லியன் டாலர் விரயமாகி யிருப்பதும், நூற்றுக் கணக்கான விதி மீறல்கள் [Federal Code Violations] விண்கப்பல் அமைப்பாடில் விளைந்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டன!
சென்ற 16 ஆண்டுகள் [1986-2002] விண்கப்பல்களின் குறிப்பணிகள் சிறப்பாகவும், பொறுப்பாகவும் பலமுறை நிறைவேறி யுள்ளதை மெச்சத்தான் வேண்டும்! புதிய ஆய்வுத் துணைக்கோள் ஏவுதல், செயலற்ற துணைக் கோள்களைக் கைப்பற்றல், விண்வெளி நிலையங்களைச் செப்பமிடல், ஹப்பிள் தொலைநோக்கி ஏவியது, பலமுறைப் புதுப்பித்தது, செப்பமிட்டது, வியாழன், வெள்ளி, சூரியன் போன்ற அண்டக் கோள்களுக்கு விண்ணாய்வுச் சிமிழ்களை அனுப்பியது யாவும் விண்வெளி வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய நிகழ்ச்சிகளாகும்! அண்டவெளியில் உருவாகி, மூன்று விமானிகளோடு பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்ணிலையத்துடன் தொடர்பு கொள்ளவும், அடுத்து இனி முடிக்க வேண்டிய பல விண்பணிகளைத் துவங்கவும் விண்கப்பல் பயணங்களை மீண்டும் ஆரம்பிக்கத்தான் வேண்டும்! விண்கப்பல் குறிப்பணிகளில் பல தளங்களில் வேலை செய்து வரும் 12,000 அமெரிக்க நபர்களின் வேலைகளைப் பாதுகாப்புக் காகவும், மிஞ்சிய மூன்று விண்கப்பல்கள் மீண்டும் உயிர்த்து எழுந்து பறக்கத்தான் வேண்டும்!
கொலம்பியா இழப்பு போன்று 1986 இல் கென்னடி விண்வெளி மையத்தில் ஏவிய போது வெடித்த சாலஞ்சர் விண்கப்பல் ஏற்கனவே, ஏழு உயிர்களையும், 25 பில்லியன் டாலரையும் விழுங்கி யிருக்கிறது! 100 குறிப்பணிப் பயணங்களுக்கு டிசைன் செய்யப் பட்ட கொலம்பியா, 28 ஆவது பயணத்தை முடிக்காமலே, மூச்சு நின்று போனது, உலக விஞ்ஞானிகளுக்கும், எஞ்சினியர்களுக்கும் பெரு வியப்பை மூட்டுகிறது! 2003 இல் நிகழ்ந்த கொலம்பியா விண்கப்பல் சிதைவில் ஏழு மாந்தர் உயிரிழந்ததுடன், 100 விண்வெளிச் சோதனை விளைவுகள் மாய்ந்துபோய், 25 பில்லியன் டாலர் தயாரிப்புத் தொகையும் மறைந்து போனது! எல்லா இழப்புகளையும் விட, இறந்து போன ஏழு உன்னத மனித உயிர்களுக்கு ஈடான தொகை எத்தனை, எத்தனை பில்லியன் டாலர் என்பது கற்பனையில் கூட கணிக்க முடியாத அளவுத் தொகையாகும்!
No comments:
Post a Comment