தேர்வு நாளன்று....

நீங்கள் தேர்விற்குத் தயார் செய்வதோடு, அறிவை மேம்படுத்துவதற்கும் ஒரு வருடமாக உழைத்திருக்கிறீர்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பல மாணவர்கள் தேர்விற்காக மட்டுமே படிக்கிறார்கள். தங்கள் அறிவை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால், தேர்வு நடத்துவதின் நோக்கம் தான் என்ன? ஒரு மாணவரின் அறிவு எந்த அளவு பாடங்களில் மேம்பட்டிருக்கிறது என்பதை மதிப்பிடுவதற்குத் தானே!
How to Prepare For Exams? - Child Care Tips and Informations in Tamilஅதே சமயம், திறமைமிக்க எந்த ஒரு மாணவரும் தேர்வு நாளன்று எப்படி செயல்புரிகிறார் என்பதைப் பொறுத்தே அவர் மதிப்பெண்களும், எதிர்காலமும் நிர்ணயிக்கப்படுகின்றன. மதிப்பீட்டாளர் உங்கள் அறிவிற்கு மதிப்பெண்கள் வழங்குவதில்லை. ஆனால், அந்த அறிவை எப்படிச் சரியாகத் தேர்வில் வெளிப்படுத்துகிறீர்களோ அதற்கே மதிப்பெண்கள் அளிக்கிறார்.
எனவே, சிறந்த மதிப்பெண்களை பெறுவதற்கு நீங்கள் சகலகலா வல்லவனாக முன்னேற வேண்டும். இந்த பகுதியில் கூறப்பட்டிருக்கும் செய்திகளை கவனத்தில் கொண்டு பின்பற்றவும்.
1. தூக்கம்
தேர்வு நேரத்தில், உங்கள் தூக்கத்தின் அளவு 8.00 மணி நேரத்திற்குக் குறையாமல் இருக்க வேண்டும். தூங்குவதற்கு உகந்த நேரம் இரவு 9.00 - 9.30 மணியிலிருந்நு காலை 5.00 - 5.30 வரை.
2. தியானம்
தேர்வு நாளன்று சிறிது நேரம் தியானம் செய்யவும். அதனால் உங்கள் மனம் புத்துணர்ச்சிப் பெற்று, தேர்வினை சிறப்பாக எழுத முடியும். தேர்வு நேரத்தில் தியானத்திற்காக 15-30 நிமிடங்கள் செலவு செய்து விட்டால், தேர்வு என்னாவது என்று சிலர் நினைக்கலாம். ஆனால், உண்மையில் தியானமே, உங்களை தேர்வில் மிகச் சிறப்பாக செயல்பட வைக்கும். கூர்மைபடுத்தப்பட்ட கோடாரியால் தான் அதிக மரங்களை வெட்ட முடிவதை போல, தியானத்தால் மனம் அமைதியாகவும், கூர்மையாகவும், விழிப்புணர்வுடனும் இருந்தால் மிகச்சிறப்பாக எழுத முடியும்.
3. கையெழுத்துப் பயிற்சி
நீங்கள் தேர்வு எழுதுவதற்கு வீட்டை விட்டு செல்வதற்கு முன், உங்கள் பாடப்பகுதியை 5 நிமிடம் எழுதி பயிற்சி செய்யவும். அந்த பயிற்சியின் போது, தேர்விற்குப் பயன்படுத்தும் அதே பேனாவையே பயன்படுத்த வேண்டும்.
மேலும், மணிக்கட்டுப் பயிற்சி 2 நிமிடம் செய்யவும். அதாவது, உங்கள் வலது மணிக்கட்டினை (வலது கை பழக்கம் உடையவர்க்கு) இடது கையால் பிடித்துக்கொண்டு மணிக்கட்டினை வலது புறமும், இடது புறமும் 2-3 முறைகள் மாற்றி மாற்றி சுழற்றவும். மேலும், 5-6 முறைகள் கைவிரல்களை மடக்கியும், நீட்டியும் செய்யவும். இது கை மணிக்கட்டிற்கும் விரல்களுக்கும் வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகப்படுத்தி தேர்வு முழுவதும் நன்றாக எழுதத் துணைபுரியும்.
முக்கியக் குறிப்பு
மணிக்கட்டு மற்றும் விரல்களுக்கான பயிற்சி, வருடம் முழுவதும் அடிக்கடி செய்து கொண்டிருக்க வேண்டும். அப்போது தான், தேர்வு நேரத்திலும் அந்த பயிற்சியை செய்ய இயலும். இல்லையேல் செய்ய வேண்டாம். கை பிசகிக் (சுளுக்கிக்)கொள்ள வாய்ப்பிருக்கிறது.
4. காலைச் சிற்றுண்டி
மாணவர்கள் யாரும் காலை உணவை பொருட்படுத்துவதே இல்லை. ஏதோ ஒன்றை சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். ஆனால், தவறாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலை உணவு, தேர்வில் உங்கள் செயல்திறனை பாதிக்கும் என்பதை அறிவீர்களா?
தேர்வின்போது மூளை முழுவீச்சுடன் செயல்படவும் அதன் முழு பங்கினையும் அளிக்கவும், வயிறு நிறைய உண்ணக்கூடாது. வயிறு காலியாக இருக்கவும் கூடாது. வயிறு காலியாக இருக்கும் போது பசி உண்டாகும். பசியினால் அட்ரினலின் ஹார்மோன் இரத்தத்தினுள் அதிகமாகச் சேர்ந்து உங்களை பொறுமை இழக்கச் செய்யும். பொறுமையின்றி, நீங்கள் தேர்வை எழுதும்போது பதிலை முழுமையாக எழுத இயலாமல் மதிப்பெண்கள் குறையும் நிலை ஏற்படுகிறது.
மற்றொரு புறம், நீங்கள் வயிறு நிறைய சாப்பிட்டால், உணவை செரிப்பதற்காக மூளையிலிருந்து நிறைய இரத்தம் வயிற்றுக்குச் செலுத்தப்படும். அதனால் மந்தமான நிலை ஏற்படும். எனவே, தேர்வு நாளன்று காலை உணவு மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இல்லாமல் அளவுடன் உண்பது நலம்.
பரிந்துரைக்கப்படும் சிற்றுண்டிகள்:
காய்கறி கலந்த-இட்லி
காய்கறி கலந்த-அரிசி பொங்கல்
காய்கறி கலந்த-இடியாப்பம்
பிரெட், வெண்ணெய், ஜாம்
சுவையூட்டும் இயற்கை உணவுக் கலவை
நாம் பிரெட் ஜாமுடன் வெண்ணெய் சேர்த்துக் கொண்டால் செரிமானம் சற்றே மெதுவாக நடைபெறும். காய்கறிகள் செரிமானத்தைத் தாமதப்படுத்துவதுடன் சக்தியையும், சுவையையும் கூட்டுகிறது.
சுவையூட்டும் இயற்கை உணவுக் கலவை:
பழங்கள், காய்கறிகள், முளைக்கட்டிய தானியங்கள், பேரீச்சம்பழம், கொட்டைகள் (Nuts), உலர் திராட்சை மற்றும் தேன் ஆகியவற்றின் கலவையே இயற்கை உணவுக் கலவை. இதில், பழங்கள் காய்கறிகள் அதிகமாகவும் கொட்டை வகைகளை சிறிதளவு மட்டுமே சேர்க்க வேண்டும். இது போன்ற உணவே ஊக்கத்தை அளிக்கும் சமச்சீரான காலை உணவு.
தவிர்க்க வேண்டிய காலைச் சிற்றுண்டி:
தோசை, பூரி, சப்பாத்தி, இனிப்புகள், புலாவ், பிரியாணி, முட்டை ஆம்லட், பீட்சா போன்ற உணவுகளில் உள்ள எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருட்கள் செரிமானத்தின் வேகத்தை மிகவும் தாமதமாக்கி உண்ட மயக்கம் ஏற்படுத்தும். காலைச் சிற்றுண்டி எதுவாகினும், வயிறு நிறைய உண்ண வேண்டாம். நான்கு மணிநேரப் பசியை தாங்கினால் போதும்.
5. ஆடை அணிதல்
இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்கவும். தளர்வான ஆடைகள் உங்கள் கவனத்திற்கு எந்த இடையூறும் செய்யாது. காலில் ஷூ அணிவதை வற்புறுத்தினாலன்றி தவிர்க்கவும். கால் சட்டைக்குள் சட்டையை திணித்து இறுக்கிக்கொள்ள வேண்டாம். தேர்வு எழுதும் பொழுது, உங்கள் காலணிகளை கழற்றி பாதங்களைத் தளர்த்திக்கொள்ளவும்.
6. தேர்விற்கான தேவைகள்
* இரண்டு போனா (மையால் எழுதும் பேனாக்களாயிருப்பின், நீங்கள் பயன்படுத்தி பழகியவையாக இருக்க வேண்டும்)
* பென்சில்
* ரப்பர்
* ஷார்ப்னர்
* ஸ்கெட்ச் பேனாக்கள்
* தண்­ணீர்
* கைக்கடிகாரம்
* எழுதுவதற்கான அட்டை (அனுமதிக்கப்பட்டால்)
* நுழைவுச்சீட்டு (பொதுத் தேர்வுகளின் போது)
* கைக்குட்டை
மேற்கூறியவற்றில் அனுமதிக்கப்பட்ட அனைத்தையும் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
7. உரையாடலைத் தவிர்க்கவும்
தேர்வு அறையினும் பல மாணவர்கள் பாடத்தில் உள்ள குறிப்புகளை உரையாடி, விவாதித்துக் குழப்பிக்கொள்வார்கள். கடைசி நேர உரையாடல் யாவும், ஏற்கனவே படித்தவற்றில் தேவையற்ற செய்திகள், உங்களைக் குழப்பவே செய்யும், அவற்றைத் தவிர்க்கவும்.
20 நிமிடம் முன்னதாக தேர்வு அறையினுள் சென்று பதற்றமில்லாமல், நண்பர்களிடம் ஹலோ மட்டுமே சொல்லி உங்கள் இருக்கையில் அமரவும்.
8. தேர்வு பயத்தை முறியடிப்பது எப்படி?
பெரும்பாலான மாணவர்களைத் தேர்வு பயம் துன்புறுத்துகிறது. தேர்வறையில் பல சமயங்களிலும் பதிலை அவர்களால் நினைவுபடுத்த முடியவில்லை என்று பயப்படுகின்றனர். சில சமயங்களில் எதுவுமே நினைவுக்கு வராமல் வெறுமையாக உணர்வார்கள். அவர்கள் படித்தவை ஆழ்மனதில் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். நீங்கள் அதை ஒரு சாவியால் திறக்காதவரை அதை நினைவிலிருந்து வெளியில் எடுக்க முடியாது. தேர்வு அறையில், உங்கள் கவனமே அந்த சாவி. இருப்பினும், உஙகள் தேர்வு பயத்தைப் போக்க மூச்சை ஆழமாகவும், வேகமாகவும் பலமுறை இழுத்துவிடவும். இப்படி செய்வதனால் நீங்கள் தேர்வு பயத்திலிருந்து உடனே மீள முடியும்.
9. தேர்வு எழுதும் பொழுது உங்களின் மனநிலை
தேர்வு எழுதும் பொழுது உள்ள நிலைமையே வேறானது. உங்கள் மனம் பாடத்தை நினைவுப்படுத்துவதற்கு அமைதி நிலையிலும், சரியான நேரத்திற்குள் தேர்வு எழுதி முடிப்பதற்கு சுறுசுறுப்பான நிலையிலும் இருக்க வேண்டும். இங்கே இரண்டு நிலைகளான கலவையும் தேவைப்படுகிறது. அதாவது அமைதி நிலைக்கும், விறுவிறுப்பான நிலைக்கும் இடைப்பட்ட நிலையே மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
பொதுவாக, ஆல்ஃபா சுவாசத்தின் பொழுது, சுறுசுறுப்பான நிலையிலிருந்து அமைதி நிலைக்கு வருவதற்கு 3-4 நிமிடங்கள் ஆகிறதென்றால், பின்னர் ஆல்ஃபா சுவாசத்தின் அளவை 2 நிமிடமாக குறைத்துக்கொள்ளவும். இதுவே தேர்வு எழுதுவதற்கு மனதை தயார் செய்யும் சிறந்த முறையாகும்.
10. தேர்வு நாள் பழக்க முறை
* காலையில் 5.30 மணிக்கு எழுதல் (8 மணி நேர தூக்கத்திற்கு பின்)
* தேர்வை சிறப்பாக செய்வதற்கு சுய மனோவசியம் செய்துகொள்ளவும்.
* காலை கடமைகள்
* உடற்பயிற்சி
* குளியல்
* ஒரு கப் நீர் அல்லது 1/2 கப் பழச்சாறு
* தியானம்
* படிப்பு (கவனக் குறிப்புகள், நினைவுபடுத்தும் வரைபடங்கள் மட்டும்)
* காலைச் சிற்றுண்டி
* கையெழுத்துப் பயிற்சி
* தேர்விற்கு வேண்டிய பொருள்களை எடுத்துக்கொள்ளல்
* முன்னதாகவே பள்ளிக்கு புறப்பட வேண்டும். (தேர்வறையில் 20 நிமிடம் முன்னதாக இருக்க வேண்டும்).
முக்கிய குறிப்பு:
படிக்கும்போது, முதலில், முதல் நாள் இரவு படித்த பாடப் பகுதியை திருப்புதல் செய்யவும். தேர்விற்கு 1 மணிநேரம் முன்னதாகவே படிப்பதை நிறுத்திவிட வேண்டும்.
11. தேர்வு அறை இரகசியங்கள்
* 20 நிமிடம் முன்னதாக தேர்வறைக்குச் செல்லவும் (மிகவும் முன்னதாக போய் அமர்ந்துகொள்வதை தவிர்க்கவும்.)
* மேசையின் மீது 2-3 நிமிடம், இடது புறமாக சாய்ந்து கொண்டு இடது மூளையை ஊக்குவிக்கவும்.
* ஆல்ஃபா சுவாசம் 2 நிமிடம் மட்டுமே செய்யவும். அதனால் மனம் ஆல்ஃபா மற்றும் பீட்டா ஆகிய இரண்டு நிலை சுவாசத்திலும் ஊக்குவிக்கப்படும். மேலும் உங்கள் சுவாசத்தை கவனிக்கவும்.
* மூச்சை ஆழமாகவும், வேகமாகவும் இழுத்து விடவும்.
* தண்ணீ­ர் குடிக்கவும்.
* சிறப்பாக தேர்வு எழுத மனதில் உறுதி ஏற்கவும். விளைவுகளை கடவுளிடம் சமர்ப்பித்து, தேர்வினை தொடங்கவும்.
* விடைத்தாளில், உங்கள் பதிவு எண்ணை முதலிலும் மற்ற விவரங்களை பிறகும் எழுதவும்.
* வினாத்தாளை கவனமாகப் படிக்கவும்.
* தேர்வு செய்யும் கேள்விகளை பென்சிலில் மெல்லியதாக குறித்துக்கொள்ளவும். (தேர்வாளர்கள் அனுமதித்தால்)
* ஒவ்வொரு கேள்விக்கும், 10-15 வினாடிகள் திட்டமிட்ட பின் எழுதவும்.
* இப்பொழுது எழுதத் தொடங்கவும்.
* எழுதும்போது, விடைகளை விரிவாக எழுதவும். அதே நேரத்தில், சரியான நேரத்திற்குள் முடிக்கவும்.
* விடையளித்தபின், கேள்வி எண்ணை வட்டமிட்டு குறித்துக்கொள்ளவும்.
* நீங்கள் முன்னதாகவே விடைகளை எழுதி முடித்து விட்டாலும், தேர்வறையை விட்டுப்போகாமல், விடைகளை மீண்டும் படித்து சரிபார்க்கவும்.
12. தேர்விற்குப் பின்
தேர்வு முடிந்த பின்னர் எந்த ஒரு பதிலையும் சரிபார்க்க வேண்டாம். நண்பர்களிடம் உரையாடவும் வேண்டாம். அது பள்ளி / கல்லூரி இடைத்தேர்வுகளாக இருந்தால், அனைத்துத் தேர்வுகளையும் முடித்த பின்னர் உங்கள் சந்தேகங்களை தெரிந்துகொள்ளுங்கள். அது முழு ஆண்டு அல்லது பொதுத் தேர்வாக இருந்தால், தேர்வு முடிவு வரும் வரை விடைகளை சரி பார்க்கக்கூடாது. ஒரு தேர்வு முடிந்தவுடன் பதில்களை சரிபார்க்கும் பொழுது, ஒரு வேளை ஏதேனும் நீங்கள் தவறாக எழுதியிருந்தால், அது ஏமாற்றத்தை அளிக்கும். இதனால் அடுத்த தேர்விற்கான தயாரிப்பு பாதிக்கப்படும்; எனவே இதை தவிர்க்கவும்.
தேர்வு முடித்து வீட்டிற்கு வந்தவுடன், மதிய உணவுக்குப் பின், ஒன்றரை மணி நேரம் நன்றாகத் தூங்கவும். இதனால் தேர்வில் எழுதிய செய்திகள் நினைவிலிருந்து பின் தள்ளப்படும். தூங்கி எழுந்தவுடன், புத்துணர்வுடன் அடுத்த தேர்விற்கான தயாரிப்பைத் தொடங்கவும்.

No comments:

Post a Comment