வேகமாகப் படிக்கவும் எழுதவும் பயிற்சிகள்!

நீங்கள் சிறப்பாகப் படிக்க வேண்டுமானால் கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது. அறிவுக்கூர்மையுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும். பாடங்களை உங்களால் வேகமாக படிக்க முடிந்தால், நேரத்தையும், ஆற்றலையும் அதிக அளவில் சேமிக்க முடியும். உங்களுடைய தற்போதைய படிக்கும் வேகத்தை முதலில் அறிந்துக் கொண்டபின்தான் அதை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.
Exam Preparation Tips: How to Study and Write Fast? - Child Care Tips and Informations in Tamilநீங்கள் படிக்கும் வேகத்தை அறிவது எப்படி?
நிமிடத்திற்கு 250 முதல் 300 வார்த்தைகளை படிக்கும் திறமை நல்ல வேகம் எனலாம். ஆனால், அந்த வேகத்தைக் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும்.
ஒரு புத்தகத்தில் உள்ள பக்கம் ஒன்றை எடுத்து அமைதியாகவும், வேகமாகவும் படிக்கவும். அதன் பொருளை புரிந்துகொள்ள அக்கறை காட்ட வேண்டாம். படிக்கத் தொடங்கும் முன் நேரத்தை குறித்துக்கொள்ளவும். 5 நிமிடங்கள் கழித்து நீங்கள் படித்திருக்கும் வார்த்தைகளை கூட்டிப் பார்க்கவும். அந்த எண்ணிக்கையை ஐந்தால் வகுத்தால் ஒரு நிமிடத்திற்கு நீங்கள் படிக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை கிடைக்கும். அதுவே உங்கள் தற்போதைய வேகம். உதாரணமாக, நீங்கள் 5 நிமிடத்தில் 1000 வார்த்தைகள் படித்தீர்களானால் உங்களுடைய படிக்கும் வேகம் நிமிடத்திற்கு 200 வார்த்தைகள் ஆகும்.
கீழேகொடுக்கப்பட்டிருக்கும் முறைகளின் மூலம் இந்த படிக்கும் வேகத்தை இரண்டு மடங்காக அதிகரிக்கலாம். இவை நல்ல பலன்களைத் தரும்.
* கண்ணாடி முறை (Mirror Technique)
* தலைகீழாகப் படிக்கும் முறை (Upside-down Technique)
* வார்த்தை ஓட்ட முறை (Run-through Technique)
1. கண்ணாடி முறை (Mirror Technique)
ஏதேனும் ஒரு பக்கத்தை எடுத்து வேகமாகப் படிக்கவும். அதை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. இப்போது அந்த பக்கத்தை கண்ணாடியில் காண்பிக்கவும். கண்ணாடியில் பிரதிபலிப்பதை படிக்கவும். அந்த பிரதிபலிக்கும் பக்கத்தை படிப்பதற்கு கடினமாக இருந்தாலும் உங்களால் அதை படிக்க முடியும். இந்த பயிற்சியை தினமும் காலையில் 10 நிமிடமும், மாலையில் 10 நிமிடமும் செய்யவும். ஐந்து முதல் ஆறே வாரங்களில் (கிட்டத்தட்ட 40 நாட்களில்) உங்கள் வேகம் நம்பமுடியாத அளவிற்கு அதிகரிக்கும்.
2. தலைகீழாகப் படிக்கும் முறை
வேகமாக ஒரு பக்கத்தை படிக்கவும். அதை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. பின் அந்த பக்கத்தைத் தலைகீழாக மாற்றி மீண்டும் அந்த வரிகளின் மேல் ஆள்காட்டி விரலை (Index finger) வைத்துப் படிக்கவும். இந்த முறையில் படிக்கும் போது காலையில் 10 நிமிடமும், மாலையில் 10 நிமிடமும் குறைந்தது 40 நாட்கள் படிக்கவும்.
இந்த இரண்டு முறைகளால் நீங்கள் படிக்கும் வேகம் ஒரு மாதத்திற்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
படிக்கும் வேகம் எப்படி அதிகரிக்கிறது?
கண்ணாடியில் பிரதிபலிக்கும் பக்கத்தை படிக்கும் போதும், தலைகீழாகப் படிக்கும் போதும், அது புது அனுபவம். மேலும், படிப்பதற்குக் கடினமாக இருப்பதால் அவற்றைப் படிக்கின்ற போது நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.
இப்படி 10 நிமிடங்கள் படித்த பின், அதிக கவனம் செலுத்தி படிக்க உங்கள் மனம் பழக்கமாகி விடும். அதன் மூலம் உங்களால் படிப்பில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும்.
பின்னர் அந்த பாடப்பகுதியை நீங்கள் நேராக படிக்கும் போது நன்றாகப் பழக்கப்பட்ட நிலையில் அமைந்திருப்பதால் படிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இதன் மூலம், உங்களால் அதிவேகமாகப் படிக்க முடியும்.
இம்முறைகளில் பயிற்சியெடுக்கும் போது, படிக்கும் வேகமே முக்கியம். அதை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், பாடத்தைப் புரிந்துகொள்ளாமல், படிக்கும் வேகம் அதிகரிக்கும் போது, நீங்கள் பாடத்தைப் புரிந்துகொண்டு படிக்கும் வேகமும் தானாகவே அதிகரிக்கும்.
3. வார்த்தை ஓட்ட முறை (Run-through Technique)
எளிமையான இப்பயிற்சியை சுலபமாக பின்பற்றலாம். இப்பயிற்சியை மேற்கொள்ளும் போது படிக்கும் பகுதியின் வார்த்தைகளை மட்டுமே வேகமாகப் படிக்க வேண்டுமெயொழிய அப்பகுதியின் அர்த்தத்தை புரிந்துகொள்ளத் தேவையில்லை. அதாவது, ஒவ்வொரு வார்த்தையை மட்டுமே பார்த்து அடையாளங்கண்டு பின் அடுத்த வார்த்தையைப் பார்க்க வேண்டும்.
இந்த பயிற்சி முறையில், நீங்கள் படிக்கும் பகுதியை சரியாகப் படிப்பதில்லை. ஆனால் உங்கள் விரைவான கண்ணோட்டத்தால் ஒவ்வொரு வார்த்தையையும் உடனடியாக அடையாளங்கண்டு அடுத்த வார்த்தைக்குச் செல்கிறீர்கள்.
இது எப்படி வேலை செய்கிறது!
நீங்கள் அடையாளம் காணும் வார்த்தைகள் உங்களுடைய மூளையில் காட்சியாகப் பதிவாகிறது. அதாவது, அந்த பாடப்பகுதியை படங்களாக படித்திருக்கிறீர்கள். அப்படி முறையாகப் பயிற்சி செய்யும்போது, ஒரு நிலையில் 'நீடுவாழ்கநிறைமகிழ்வெய்துக' போன்ற மிகப்பெரிய வார்த்தையையும் உங்களால் உடனடியாக அடையாளம் காண முடியும். இந்த திறமை இயல்பாகவே உங்களுடைய படிக்கும் ஆற்றலை மிகவும் அதிகரிக்கும்.
இப்பயிற்சிகள் ஆதாரபூர்வமானதா?
முன்பு விளக்கப்பட்டது போல், முதலில், உங்கள் படிக்கும் வேகத்தை கண்டுபிடிக்கவும். பின்னர் கண்ணாடி முறை, தலைகீழாகப் படிக்கும் முறை, மற்றும் வார்த்தை ஓட்டமுறை ஆகிய பயிற்சி முறைகள் ஒவ்வொன்றையும் 10 நிமிடங்கள் செய்யவும். இப்போது மீண்டும் உங்கள் படிக்கும் வேகத்தை கண்டுபிடிக்கவும். உங்களால் நம்பமுடியாத அளவு படிக்கும் வேகம் அதிகரித்திருக்கும். இதுவே நீங்கள் பயன் அடைந்ததற்கான ஆதாரம். இந்த பயிற்சி முறைகளுக்கு மிகமுக்கியத்துவம் கொடுத்து 40 நாட்கள் பயிற்சி செய்யவும். அதனால், உங்களுடைய நேரமும், சக்தியும் பெருமளவு மிச்சமாகும். தேர்வு நேரத்தில் ஏற்படும் பரபரப்பும், மன அழுத்தமும் நிச்சயமாகக் குறையும். மேலும், இரவும் பகலும் புத்தகங்களோடு போராட வேண்டிய அவசியமும் இருக்காது.
வேகமாக எழுதும் முறை:
ஒரு மாணவர் அறிவு கூர்மையுடன், தேர்வுக்குத் தன்னை நன்றாகத் தயார்படுத்தி இருக்கலாம். தேர்வில் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் நன்றாக தெரிந்தும் இருக்கலாம். ஆனாலும், வினாத்தாளில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் 2-3 மணிநேரத்திற்குள் விடைகளை வேகமாக எழுதி முடிக்கவில்லை என்றால், அவர் குறைந்த மதிப்பெண்களையே பெறுவார். எனவே, ஒரு மாணவருக்கு வேகமாக எழுதும் திறன் மிக அவசியமாகிறது.
இந்த பயிற்சியின் விளைவு!
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த பயிற்சி முறை மிகவும் பயனளிப்பதாகும். தேர்வு நாட்களுக்கு 2 முதல் 3 வாரங்களுக்கு முன் பயிற்சியை செய்யத் தொடங்கினால்கூட நல்ல பலன்களை காண முடியும். இருப்பினும், மிகச்சிறந்த பலன்களைப் பெற 40 நாட்கள் பயிற்சி செய்யுமாறு நான் பரிந்துரைக்கிறேன்.
பயிற்சி முறை:
இப்பயிற்சிக்கு ஏதாவது ஒரு பகுதியை உங்களுடைய இயல்பான வேகத்தில் 5 நிமிட நேரம் எழுதவும். அதே பகுதியை 4 நிமிடங்களுக்குள்ளும், மீண்டும் 3 நிமிடங்களுக்குள்ளும் எழுதவும். மொத்தமாக 12 நிமிடங்கள் எழுதியிருக்கிறீர்கள். இப்படி தினமும் இருமுறை எழுதிப் பயிற்சி செய்யவும். இவ்விதம் தேர்வுக்கு 40 நாட்கள் முன்பே பயிற்சி செய்தால், உறுதியாக பெரும் முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்.
இது எப்படி செயல்படுகிறது!
5 நிமிட நேரத்தில் எழுத வேண்டிய பகுதியை 4 நிமிடத்திற்குள் எழுதி முடிப்பது மிகவும் கடினமான ஒரு செயல் அல்ல. அதே பகுதியை 3 நிமிடத்திற்குள் முடிப்பது கொஞ்சம் சவாலானது. ஆனாலும், 3 நிமிடம் மட்டுமே என்பதால் உங்களால் அந்த நேரத்திற்குள் எழுதி முடிக்க முடியும். இப்படி பல நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, உங்களுடைய எழுதும் வேகம் படிப்படியாக அதிகரிக்கும்.

No comments:

Post a Comment