தேர்வு முடிவுகள் வெளிவரும் காலம். பெற்றோர்களும் பிள்ளைகளும் திருப்புமுனைகளை சந்திக்கும் நேரம். கல்லூரிகளும் பள்ளிகளும் கல்வி விழாக்கள் நடத்தும் முக்கியமான தருணத்தில் உங்களுடன் சில பகிர்தல்கள்.
கல்வி உலகம் மிகப் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது பிரபஞ்சத்தைப் போல. அதில் தாம் எங்கு எப்படி பயணம் செய்வது தம் வாழ்வை எங்கிருந்து துவக்குவது எப்படி வாழ்வது என இளந்தளிர்கள் புரியாமல் புரிபடாமல் இரண்டுங்கெட்டான் வயதில் வலம் வந்து கொண்டு பெற்றோர் வழிகாட்டலில், நட்பின் சார்தலில், சுற்றுப்புற பாதிப்புகளில், சகோதர சகோதரிகளின் அழுத்தத்தில் ஒரு பாடப் பிரிவை தேர்வு செய்துவிட்டு அதன் பிறகு இந்தப் பாடப் பிரிவை எடுத்ததால் எனது வாழ்வே பாழாகிவிட்டதே என அங்கலாய்த்துப் பலனில்லை.

ஒரு கல்லூரி வளாகம் அருமையான கொன்றை மர சிவப்பு பூக்களுடன் செடி கொடிகளுடன் இயற்கை கொஞ்ச அழகு கொலுவீற்றிருந்தது கண்ட மாணவன் ஒருவன் படித்தால் இந்தக் கல்லூரியில் தான் படிப்பது என்றெல்லாம் முடிவெடுத்திருக்கிறார்கள். தமது முதிய மாணவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவர்கள் நல்லபடியாகத் தான் வழிகாட்டுவார்கள் என்று எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தவர்களும், கல்லூரியில் புதுப் பாடப் பிரிவு ஒன்று புகுத்தப்பட்டுள்ளது அதற்கு ஆள் சேர்க்கவேண்டும் அந்த படிப்பு எமது கல்லூரியில் தான் உள்ளது என அந்த பாடப் பிரிவை தக்கவைத்துக்கொள்ள கல்லூரி நிர்வாகமும் ஆசிரியர் குழாமும் மாணவர்களை அதில் சேர்க்கவைத்த முடிவுகளும் உண்டு.

மூத்த சகோதரர்கள், பெற்றோர்கள் தமது காலத்தில் அந்தப் படிப்பை படிக்க வாய்ப்பு கிடைக்காத பழங்கனவுகளுடன் தமது குடும்பத்திலும் ஒரு பொறியாளர், ஒரு மருத்துவர், ஒரு அரசு அலுவலர் உருவாகவேண்டும் அதற்கு இந்த பாடம்தான் அந்தப் பிரிவில் படித்தால் நல்லது என முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம்.

இப்படி எந்தப் பக்கம் போவது எனத் தெரியாமல் இருக்கும் புதுமனிதர்களுக்கு ஆயிரக்கணக்கான வழிகாட்டுதல்கள். அத்தனையும் ஒரு காலத்தில் தப்பிப் போகலாம். மாணவருக்கு எதில் ஆர்வம் அதிகம், எந்த பாடப் பிரிவை எடுத்தால் அவர் சுலபமாக பிரகாசிப்பார், எதிர்காலத்தில் தமது வாழ்வை சாதனையாக்கிக் கொள்வார் என்ற காரணிகள் அவருக்கு நன்கு விளக்கப்பட்டு அவரையே அவர் முடிவை எடுக்க நாம் உதவுவதுதான் சரியான வளம் தரும் முடிவைத் தரும். அல்லாமல் நம்து முடிவை அவர்பால் திணிப்பது என்பதில் தான் ஏற்படும் எதிர்காலச் சிக்கல்கள், விடுதி தற்கொலைகள் சமூகச் சீரழிவுகள் எல்லாமே.
இந்த ஒரு விஷியத்தில் யார் சொல்லும் முடிவையுமே இந்த இளையோர் ஏற்கக் கூடாது உளமார தம்மால் முடிவதை, தமக்கு ஆர்வம் தரும் படிப்பை, எதிகால ஒளிமயமான வாழ்வை நம்பி தன்னம்பிக்கையுடன் எடுக்க வேண்டும். அப்படித்தான் வெங்கி இராமகிருஷ்ணன் எடுத்து நோபெல் வரை சென்றிருக்கிறார். அவர் தந்தையின் விருப்பப்படி படித்திருந்தால் அவர் யாராலும் அடையாளம் காணப்படாத ஒரு பொறியாளராகவே இருந்திருப்பார்.
சில வேளைகளில் அப்துல் கலாமுக்கு விமானப்படைப் பிரிவில் பணியில் சேர வாய்ப்பு கிடைக்காதது போல வாய்ப்புகள் கிடைக்காமல் கூட (விரும்பியபடி) போகலாம் அதற்காக மனம் சோர்வடையாமல் அடுத்துள்ள அல்லது தாம் தமக்கு கிடைத்த பாடத்தில் எப்படி எவ்வளவு அதிகபட்சம் முயற்சி செய்வதன்றி விட்டுவிடக் கூடாது.

சில கல்லூரிகளில் நல்ல பாடப் பிரிவுகளே கிடைத்தால் கூடப் பயனில்லை. சில நல்ல கல்லூரிகளில் மோசமான பாடப் பிரிவு என்று நினைத்திருப்பதைப் படித்தாலும் நல்ல வரவேற்பிருப்பதைக் காணமுடிகிறது. கட்டுமானவியல் ஒரு காலத்தில் சரிந்திருந்த பாடப்பிரிவு இன்று வரவேற்புள்ள பாடப் பிரிவாக மாறியுள்ளதை காணமுடிகிறது.

நிறைய படிப்பின் வழிப்போக்குகள் இதழ் இதழ்களாக விரிய ஆரம்பித்துள்ளன. முதலில் மருத்துவம் என்றால் அலோபதி, ஹோமியோபதி,சித்தா, அக்குபஞ்சர்,மூலிகை வைத்தியம் என்று மட்டுமே சொல்வார்கள் இன்றோ அலோபதியில் மட்டுமே ஆயிரக் கணக்கான உட்பிரிவுகள் அதல்லாமல் எத்தனையோ நவீனத்வங்கள் ஆஞ்சியோ பிளாஸ்ட், அப்படி இப்படி என வாயில் நுழையாத துறைகள் ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் ஒரு பிரிவு என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதே போலத்தான், பொறியியல், விண்ணியல், மண்ணியல், கடல் சார்ந்த படிப்பு, கனிமையல், பறவை விலங்கியல் , கணினி இப்படி எல்லாவற்றையும் பற்றி சொல்வது இந்தக் கருத்துக் கோர்வையை திசை திருப்பி விடும். எனவே : நானறிந்த ஒரு நண்பர் ஒரு துறையில் சேர்ந்து படிக்க முடியாது விலகி (அவர் நல்ல அறிவாளிதான்) அதன் பிறகு அடிப்படைமுதல் படித்து இன்று பலரும் வியக்கும் நீதியரசராக விளங்குகிறார். மற்ற நண்பர் ஒருவர் தமது படிப்பை முடிக்காமலேயே தொழில் அதிபராகி இருக்கிறார். ஏன் நான் அறிந்த் பெரியவர் ஒருவர் 4 வது கூட படிக்காதவர் கறவை மாடு வாங்கி பால் ஊற்றி, சைக்கிள் கடை வைத்து, லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி இரசாயன ஆலை நிறுவி பெரும் பணச் செல்வந்தராகி ஆங்கிலத்தில் உரையாடி தனது வணிகத்தை நடத்துபவர்.
நிறைய கனவான்கள்: ஆல்ப்ரட் ஐன்ஸ்டீன், மைக்கேல் ஸ்டீவ் ஜாப் போன்றோர் யாவரும் கல்வி நிறுவனத்திலிருந்து பாதியில் வெளியேறியவர்தான். ஏன் நமது கொங்குநாட்டு G.D.நாயுடு கூட கல்வி நிறுவனம் வழியே படிக்காதவர்தானே. எனவே அறிவுக்கும் படிப்புக்கும் நிறைய தொடர்பிருப்பதாக தோன்றினாலும் கட்டாயமாக படிப்பது என்பது எல்லாம் ஆர்வமில்லாத துறைகளில் அறிஞர்களாலும் ஆகாத காரியம்.

எனவே வாழ்வு எங்கிருந்து வேண்டுமானாலும் துவங்கும். சிலருக்கு முடிவிலிருந்தும் கூட துவங்கலாம். ஆனால் என்ன கெட்டவழிக்குத்தான் செல்லக் கூடாது. அந்த தீயவை அவர் வாழ்வையும் அவர் உடலையும் நிர்மூலப்படுத்திவிடும் என்பதால். எந்தக் காரணம் கொண்டும் தன்ன்ம்பிக்கை ஒன்றை மட்டும் கை விட்டு விடக் கூடாது.

நானறிந்த ஒரு இளைஞர் வெறும் டிப்ளமோ படித்தவர்தான். நன்கு படிக்க வேண்டியவயதில் தீ விபத்தில் சிக்கிய இவரின் தந்தைக்காக பெரும் தொகை செலவிட வேண்டி நேர்ந்ததால் தந்தையிடம் போதுமப்பா இந்த டிப்ளமோவை வைத்தே நான் வாழமுடியும் என இன்று சிங்கப்பூரில் 1,20,000 ரூபாய் சம்பளம் பெற்று பிழைப்பதுடன் தமது உறவினர் ஒருவரையும் பணிக்கு அழைத்து பணி பெற்று தந்துள்ளார். இப்போது இந்திய மாணவர்களுக்கு ஆண்டுக்கு பல கோடி கொடுக்குமளவு கம்பெனிகள் தயாராக உள்ளன. ஆனால் சமயமறிந்து முடிவு செய்து உயர்வோர்க்கு மட்டுமே இது சாத்தியம். முன் சொன்ன டிப்ளமோ இளைஞர் தமது 2 ஆண்டில் தமது பாடப் பிரிவை மாற்றக் கோரினார். அந்தக் கல்லூரியில் முன்னால் முடியாது என்றார்கள். அந்த இளைஞரின் தந்தையும் உடன் சென்று மாற்ற முடிந்தால் செய்யுங்கள் இல்லாவிட்டால் என் பையனின் மாறுதல் சான்றிதழ் கொடுங்கள் வேறு கல்வி நிறுவனத்தில் சேர்ந்து கொள்கிறோம் எனக் கேட்டபின் பையனின் மதிப்பெண் பற்றி பார்த்த பின் அவன் கல்லூரியில் முதல் மாணவன் என்றறிந்து அவன் கேட்ட பாடப்பிரிவை அந்தக் கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாகம் வழங்கியதாக அந்த மாணவனின் தந்தை பெருமை பொங்க கூறுகிறார். ஆடு மேய்க்கும் அவன் தாயார் அவனுடன் ஒரு ஆண்டு சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கிறார். இப்படி கணக்கில் அடங்கா வாழ்வின் உண்மைகள்.

இதெல்லாம் சொல்வது என்னவெனில் : ஆர்வம் இருக்கும் துறை தேர்வு செய்யப்பட வேண்டும், ஆட்டு மந்தைக் கூட்ட்மாக அனைவரும் ஒரே வழிப்பாதையில் செல்வதாக இருக்கக் கூடாது . சமயோசிதமாக முடிவு எடுக்கும் திறன் நிறைய வாய்ப்புகள் வழங்கும் அதன் பின் அவரது திறனும், விடாமுயற்சியும், என்றும் அவர் சார்ந்து துறையில் அவரை சாதனையாளாரக மாற்றிக் காட்டும். தேவையெல்லாம் உண்மை சார்ந்த கடின உழைப்பே. கல்பனாவின் கனவும் அப்துல் கலாமின் நினைவும் தெரஸாவின் தெய்வீகப் பணியும் எமது இளையோர்க்கு முன் மாதிரியாக வேண்டும்.
வாழ்த்துக்கள்.


நன்றி:
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment