அசாத்யம் யாவும் சாத்யமாகும் சத்தியம்: பிடல் காஸ்ட்ரோ – சே குவேரா- ஹிட்லர்- பிராணாப் முகர்ஜி- டாக்டர் அ.ப.ஜெ. அப்துல் கலாம் சில தனி மனித வராலாறுகளுள் புதைந்துள்ள வியப்புகள்.

எப்போதும் குறை சொல்லிக் கொண்டு பிறரை சாடிக் கொண்டே எழுதிக் கொண்டிருப்பதைவிட அவற்றுள் உள்ள நல்லவற்றையும் பார்க்க வேண்டி எழுதும் கருத்து சில உம் முன். ஆனால் எம் போன்றோர் சாடுவதும் கூட வன்முறையை தூண்டுவதற்காக அல்ல. திருத்த திருந்த ஏதாவது வாய்ப்பு ஏற்பட்டு அதனால் நாம் வாழும் பூமிக்கு நமது சமுதாயத்துக்கு ஏதேனும் நன்மை விளைந்திடாதா என்ற நல் எண்ணத்தில்தான் ஒரு நப்பாசையில்தான்.(அந்த எண்ணத்தில்தான் இன்று உங்களுடன் பகிர நினைத்தது: செய்திகளை பிந்தி தருவது பொதிகை தொலைக்காட்சி என்று எழுத நினைத்தவன் சாத்யமான அசாத்யத்தைப் பற்றி எழுதியபடி இருக்கிறேன்)

மரணம் என்பது நாம் நினைக்கும்போது வரவேண்டும் என நினைத்து மாய்ந்துபோகும் கோழைகளுக்கு இடையே மாமனிதர்கள் எத்தனையோ தலை போகும் உயிர் அபாயங்களை சந்தித்து மீண்டு சாதித்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது பிரபஞ்சத்தை விட மனித சக்தி அளப்பரியது என அடிக்கடி டாக்டர்.அ.ப.ஜெ. அப்துல் கலாம் சொல்வது போலவும் விவேகானந்தர் சொல்வது போலவும் எப்படி எல்லாம் சாதித்திருக்கிறார்கள் என்னும்போது ஏதோ ஒரு சக்தி மரணத்திற்கும் மனிதத்திற்கும் இடையே ஊடாடிக் கொண்டே தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

மகாத்மாவின் சுயசரிதை கணக்குப் படி அவருக்கு அவரின் உயிருக்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்தே குறி வைக்கப்பட்டு 8 ஆவது முயற்சியில் சுட்டுக் கொல்லப்படுகிறார் நாதுராம் கோட்ஸேவால்.

பிடல் காஸ்ட்ரோவை 638 வழிகளில் கொலை செய்ய சி.ஐ.ஏ முயற்சி செய்துள்ளதாக நூல்கள் குறிப்பிடுகின்றன. அவரே: “அதிகப்படியான கொலை முயற்சிகளுக்குப் பிறகும் உயிர் பிழைத்தவர்களுக்கான ஒலிம்பிக் போட்டி வைத்தால் நிச்சயமாக நான் தங்கம் வெல்வேன்”. எனக் குறிப்பிடுகிறார். அவருக்கு தற்போது 86 வயது. இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்பது மாபெரும் செய்தி. ஏன் எனில் அவருடைய வாழ்வில் 15 வயதிலிருந்தே போராடுகிறார். நாட்டுக்காக நாட்டு விடுதலைக்காக. மக்கள் நல்வாழ்வுக்காக. மயிரிழையில் நூல் இழையில் பல முறை மரணத்தின் பிடியிலிருந்து தமது போராட்டக் காலத்திலிருந்தே தப்பி வருகிறார். நித்ய கண்டம் பூரண ஆயுசு என்பது போல. நாட்டை மீட்டதுடன் அதன் நிர்வாகத்தை பொறுப்பை கையில் எடுத்து நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக நாட்டை முன் எடுத்துச் செல்வதுதான் அவரது வாழ்வின் வெற்றியும் அந்த கியூபா நாட்டின் வெற்றியுமாக விளங்குகிறது.

சீனாவின் மாவோவும், ரஷ்யாவின் லெனினும் இப்படிப்பட்ட பாக்ய சாலிகளாக விளங்கினார்கள். ஏன் ஹோசிமின் வியட்நாம் உட்பட அந்த வாய்ப்பைத்தான் இந்தியா பெற வில்லை. விடுதலைக்குப் பிறகு நேருதான் முயன்றிருக்கிறார். மகாத்மா சுடப்பட்டார். மேலும் இந்திய தேசம் கியூபா போன்று சிறியதாக இருந்திருந்தால் இது சாத்யமாய் இருக்குமோ எனத் தோன்றுவதை சீனாவும், ரஷ்யாவும் இந்தியாவை விட பரப்பளவில் பெரிதாக இருந்தபோதிலும் கூட அந்த தலைவர்களால் எப்படி பொருளாதார சீர்படுத்தலை மேற்கொள்ள முடிந்தது என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

சே குவேரா எனச் சொல்லப்படும் டி லா குவேரா (சே என்பது அடச் சே என்பது போன்ற ஒரு அர்த்தமுடையதான பொருள்பட்டதாம் கியூபா நாட்டில்) லத்தீன் நாடுகளில் புரட்சி விதைகளை விதைக்க புறப்பட்டு பொலிவியா காடுகளில் வாழ்வு முடிந்துபோனபோதும் இவர் கியூபாவின் மந்திரியாக முதலில் நிதிமந்திரியாக இருந்தபோதும் பிறகு அது ஒத்துவராது என தொழில் மந்திரியாக இருந்து பார்த்து அதுவும் ஒத்துவராமல் க்யூபாவின் குடி உரிமைகூட வேண்டாம் என தூக்கி எறிந்துவிட்டு புறப்படுகிறார். போர்புரியும், மருத்துவம் புரியும் இவரால் நிர்வாகம் புரிய முடியவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார். அந்த நாட்டின் ரூபாய்த் தாள்களில் கையொப்பமிடும் நிலையில் இருந்தபோதும் வேலை, சம்பளம், நிதி, நிர்வாகம் என்பதெல்லாம் இவருக்கு பிடித்தமானதாயில்லை. ஆனால் பிடல் காஸ்ட்ரோ 15 வயதுமுதல் நாட்டுக்காக போராட ஆரம்பித்து 32 வயதில் நாட்டின் தலைமை இடத்தை பிடித்து 45 ஆண்டுக்கும் மேலாக அந்த நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுத்தவராக சில ஆண்டுக்கும் முன் தான் தமது தம்பி ரால் காஸ்ட்ரோவுக்கு தமது இடத்தை அளித்து ஓய்வு பெற்றவராக முதிய 86 வயதுடன் வலம் வருகிறார். இவர் வாழ்வை பார்த்தால் வியக்காமல் இருக்க வழியில்லை.

அடுத்து சர்வாதிகாரி ஹிட்லருக்கு வருவோம்: இவர் கொடூரம் உலகெங்கும் பிரசித்தம். ஆனால் பதுங்கு குழிக்குள் ஈவாவை சாகும் முன் நாளில் மணந்து கொண்டு மறுநாளில் தற்கொலை செய்து கொள்கிற இவர் தாயை இழந்தவுடன் தட்டுத் தடுமாறி நகர்புறம் சென்று கிடைக்கும் வேலைகளை செய்து , தொழிற்சங்கம் சேர்ந்து, இராணுவத்தில் பணியாற்றி, அதன் பின் அதன் பிரதிநிதியாய் சில கூட்டங்களுக்கு சென்று கேள்வி கேட்க ஆரம்பித்து பின் பேச ஆரம்பித்து பிறகு 6அல்லது 7 நண்பர்களை வைத்துக் கொண்டு தேசிய சமத்துவ ஜெர்மன் தொழிலாளர் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து பல கூட்டங்களை மிகச் சொற்ப எண்ணிக்கையுள்ள பார்வையாளர்களுடனே அதாவது 7பேர் 9 பேர் இப்படி அது பின் பெருகி நூற்றுக் கணக்காகி ஆயிரக்கணக்காகி முதல் கட்சியின் கொள்கை அறிவுப்பு மாநாட்டில் 2000 பேருக்கும் மேல் பெருகி முதலில் 20 நிமிடம் மட்டுமே பேசி பின் 30 நிமிடம், 1 மணி நேரம் பிறகு 2 மணி நேரத்துக்கும் மேல் இப்படி சிறந்த பேச்சால் அனைவரையும் கட்டி நாட்டில் கொடி கட்டி பறந்திருக்கிறார். அதில் ஒரு கூட்டத்தில் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பயங்கர கூச்சலும் குழப்பமும் எதிர்ப்பும் கம்யூனிஸ்ட் கட்சியினரால் நடந்ததாகவும் அதை இவரின் ஆயுதம் தாங்கிய தோழர்கள் சமாளித்ததாகவும் அதன் பின் கூட்டம் பேச பேச கைதட்டல் ஆரவாரமாக மாறியதாகவும் அவரது மெய்ன் காம்ப்F ல் தெரிவிக்கிறார்.

ஹிட்லர் மற்றும் பிடல் காஸ்ட்ரோ இருவரின் வாழ்விலுமே இரு துருவங்களானாலும் இவர்கள் வைத்திருந்த பெரும் நம்பிக்கை, மலையினும் பெரிய நம்பிக்கை இவர்களை மாபெரும் மனிதர்களாக மாற்றியுள்ளதை இவர்களின் வாழ்வின் சரித்திரத்தை படிக்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது. காஸ்ட்ரோவும் சிறிய குழுவை வைத்துத்தான் ஆரம்பித்துள்ளார். படிப்படியாக பலமுறை பல முனைகளில் போராடி ஆய்தம் ஏந்தி கொரில்லா முறைகளில் சண்டையிட்டு கடைசியில் ஆட்சியைக் கைப்பற்றும் அளவு அந்த சிறு குழு வளர்கிறது அதிக எண்ணிக்கையுடன். அப்படித்தான் ஹிட்லர் கூட்டமும். ஏன் ஏசுநாதர் கூட தமது கறுப்பு ஆடு யூதாஸ் கரியாஸ் உட்பட 12 பேருடன் தான் உலக சீர்திருத்தம் செய்ய கிளம்பினார் என்கிறது விவிலியம்.
24 அரசு பாராளுமன்ற நிலைக் குழுக்களில் பிரணாப் முகர்ஜி தலைவராம். இவர் நிதி மந்திரி பொறுப்புடன் இவ்வளவு பொறுப்புகளுடன் இருந்தது மட்டுமல்லாமல் பாராளுமன்ற சபை முன்னவராகவும் இருந்து வருகிறார் என்பதெல்லாம் செய்தி. இவர் ஒரு சாலை விபத்தில் தலையில் அடிபட்டு மூளை நரம்பு வரை பாதிப்பில் இருந்த வயதான இந்த மேற்கு வங்க காங்கிரஸ்காரரை விட மறுக்கிறது காங்கிரஸ். உள் என்ன நீரோட்டம் ஓடுகிறதோ ஆனால் இவர்தானே காங்கிரஸ் குடியரசு தலைவர் வெட்பாளர் என்கிறது நாடு.

டாக்டர் கலாம். கல்லூரி கட்டணத்தை கட்டுவதற்கே தமது தமக்கையின் வளையல்களை அடகு வைத்ததாகவும்; செய்தித் தாள் போடும் சிறுவனாகவும் தமது வாழ்வை ஆரம்பித்துள்ளதாக சுய சரிதையில் குறிப்பிடுபவர் நாட்டின் முதல் குடிமகனான பெருமையை விட ஏவுகணை மனிதராக, பொக்ரான அணு விஞ்ஞானியாக இந்த நாட்டின் கோடான கோடி இளைஞர்களின், நல்ல ஒழுக்கமான சிறுவர் சிறுமிகளின் ஆதர்சமான முன்மாதிரியான (ரோல் மாடல்) மனிதராக உலக அறிவியாலாளர் வரிசையில் ஒரு உன்னத மனிதராக இவரின் பிறந்த நாளை உலக இளைஞர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையே அறிவிக்கும் வண்ணம் வளர்ந்தது இன்னும் பதவிக்காக நானல்ல எனக்காகத் தான் பதவியே என இமயமாகத் திகழ்வதும்

இந்த மாமனிதர்களின் அரிய பெரிய மாமலை போன்ற நம்பிக்கையின் அளவீட்டை காட்ட முடியாமல் எழுத்துக்கள் தோற்றுவிடுகின்றன. முகமது நபி கூட தமது வாழ்வில் இப்படித்தான் நம்பிக்கைத் தளராமல் போராடியதாக வரலாறு சொல்கிறது இப்படி எத்தனை எத்தனை மாமனிதர்கள் அலெக்ஸ் சான்டர் முதல் அப்துல் கலாம் வரை சில பெயர்கள் என்னால் இந்த கருத்தோட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அதன் தொகை மனிதப் பால்வெளியில் எண்ணிறந்தன.

இந்த அரிய மாமலைகளை பெரும் நம்பிக்கைகளை எல்லாம் காணும்போது தான் எவ்வளவு பெரிய அரிய கோட்டையை தவற விட்டிருக்கிறோம் என நம்மையே நாம் திரும்பிப் பார்த்துக் கொள்ளத் தோன்றுகிறது. நாம் நினைத்திருந்தால் கூட நாட்டைப் பிடித்திருக்கிலாமோ? வெறும் சோற்று வழிகளுக்காக வழி தெரியாமல் அல்லவா போய்விட்டோம்? பாதி வாழ்வை கழித்து கெட்டோம் எனத் தோன்றுகிறது. மாட மாளிகைகளும், மக்களை கொள்ளை அடித்து புத்தி சாதுரியத்தால் வாழ்வின் தந்திரத்தால் பள்ளி நுழைவாயிலில் உள்ள இரும்புக் கிராதிகளில் தமது பெயர்களை எழுதிக் கொள்ளும் பணவான்களும் கனவான்களும் நமக்கு ஒரு பொருட்டாக அல்லவா தோன்றுகிறது? நாம் எவ்வளவு சிறுத்துள்ளோம்? இன்னும் பெரிதாக வளரவேண்டும். காலம் சாய்க்கும் முன்.

நன்றி:
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment