கேள்வி பதில்




கே: யாராவது நம்மைத் வேண்டுமென்றே தூண்டும் போது, அவர்களுக்குப் பாடம் கற்பிக்கலாமா அல்லது விட்டு விடலாமா? நாம் ஒன்றும் செய்யாமலிருந்தால் நாம் பலவீனமானவர்கள் என்று அவர்கள் நினைப்பார்கள். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க ஏதாவது செய்தால், நாம் ஆன்மீகத்தில் முன்னேற்றமடையவில்லை என்பார்கள்!

குருதேவர்: ஒருவருக்குப் பாடம் கற்பிக்க நீ அமைதியாக இருக்க வேண்டும். நீ கோபத்தில் இருக்கும் போது, மனம் சஞ்சலமடைந்திருக்கும் போது, மற்றவருக்குப் பாடம் கற்பிக்க முடியாது. அதே சமயம் எப்போதும் மற்றொரு கன்னத்தைக் காண்பித்து அறை வாங்கத் தேவையில்லை. கருணையோடு அவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடு. அது உன்னை பலசாலி ஆக்கும். அவர்கள் உன்னைத் தூண்டுவதற்கு என்ன காரணம் என்று அறிந்து கொண்டால், அமைதியாக, சஞ்சலமற்ற மனத்தோடு அவர்களிடம் நடந்து கொள்ள முடியும்.

கே: எப்போதும் எதிர்மறையான எண்ணங்களுடன் செயல் படுபவர்களை, எதிர்மறையான எண்ணங்களைப் பரப்புபவர்களை எப்படிச் சமாளிப்பது?

குருதேவர்: ஒருவரால் எல்லா சமயங்களிலும் எதிர்மறையாகச் செயல் பட இயலாது என்பதை அறிந்து கொள். இரண்டாவது அவர்களை சாமர்த்தியமாகச் சமாளிக்கக் கற்றுக் கொள். மூன்றாவது அவர்களை ஒரு பொருட்டாக எண்ணாமல் ஒதுங்கி விடு.

கே: என்னுடைய இந்த சூழ்நிலையில் நான் எப்படி நடப்பது என்று தயவு செய்து விளக்கமுடியுமா? நான் ஒருவர் மீது எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்துகிறேன். அந்த மனிதரோ என்னை உதாசீனம் செய்கிறார். அந்த வலியை எப்படித் தாங்கிக் கொள்வேன்?

குருதேவர்: ஓ! அப்படியா? அவர் உன்னை கிள்ளுகீரையாக நினைக்கிறார். உன் மீது அன்பு செலுத்துவதில்லை. தன் அன்பை உன்னிடம் வெளிப்படுத்துவதில்லை. அது தானே உன் பிரச்சினை? நல்லது அவருடைய அன்பை கேள்விக்குறியாக்காதே. அவர் உன் மீது அன்பு செலுத்துவதில்லை என்று எண்ணினால், அவரைக் குறை சொல்வதை விட்டு, “நீ என் மீது அன்பு செலுத்துவதில்லை” என்று சொல்லாமல் “நீ என்மீது ஏன் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாய்?” என்று கேள்.

யாராவது உன்னைக் குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தால்,நீ அவரிடம் அன்பாய் இருப்பதில்லை என்று சொன்னால்,உன்னால் அவரோடு சந்தோஷமாக இருக்க முடியாது. நட்போடு இருக்க முடியாது. உனக்கு எப்படியிருக்கும்?

பதில்: திரும்பத் திரும்ப குற்றம் சொல்கிறார்கள் என்று வெறுப்பு வரும்.

குருதேவர்: இப்போது உனக்குப் புரிகிறதா? நீ அவருக்கு என்ன செய்கிறாய் என்று.யாருமே எப்போதும் குறை சொல்பவர்களிடம் நட்புக் கொள்ள விரும்ப மாட்டார்கள். யாராவது உங்களைப் பற்றிக் குறை சொல்பவர்களிடம் நட்புக் கொள்ள விரும்புவீர்களா? யாருக்கு உன் அன்பின் மீது சந்தேகமோ, யாரிடம் உன் அன்பை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறதோ, யாரிடம் உன் அன்புக்கு அத்தாட்சி கொடுத்து விளக்க வேண்டுமோ அப்படிப் பட்டவரை விரும்ப முடியுமா?

உன் ஆத்மாவை உயர்த்துபவரே உன் நட்புக்கு உகந்தவர். நீ வருந்தும் போது, உன்னைத் தேற்றி, வா இதை விட்டு மேலே சொல்வோம் என்று உற்சாகப்படுத்துபவரே உன் அன்புக்கு உகந்தவர்.
எப்போதும் உற்சாகத்தோடு உன் முன்னேற்றத்துக்குக் காரணமாக இருப்பவரே நல்ல நண்பர். அன்பை சந்தேகிப்பவர், அன்புக்கு விளக்கம் கேட்பவர் நல்ல நண்பர் அல்ல. எனவே மற்றவரின் அன்பை சந்தேகப் படாதே. அதைப் பற்றிக் குறை சொல்லாதே. மேலே செல்.

கே: யோகா மற்றும் தியானத்தைக் கற்பிக்க வாழும் கலையும்,,மற்றும் பல நிறுவனங்களும் இந்தியாவில் இருக்கின்றன. எல்லோரும் ஒரே நோக்கத்துக்காக, மனித நேயத்துக்காக, அமைதிக்காக வேலை செய்யும் பல் று அமைப்புகளுக்கு என்ன அவசியம்? அவைகள் ஏன் வேறு வேறு முறையில் செயல் படுகின்றன?

குருதேவர்: ஒரே நோக்கத்தோடு செயல்படுபவர்கள் எப்போதும் ஒன்றாக இருப்பார்கள். அவர்களின் செயல்முறை வேறு வேறாக இருந்தாலும், ஒன்றோடு ஒன்று முரண்பாடு உள்ளவை அல்ல.ஆத்மா வேற்றுமையை விரும்புகிறது.

நான் பாகிஸ்தான் சென்ற போது, இந்தியாவில் ஏன் இத்தனை கடவுள்களை வணங்குகிறோம்? என்று கேட்டார்கள். இறைவன் ஒருவனே என்றாலும் இத்தனை ரூபங்கள் ஏன்?

நான் கேட்டேன். கோதுமை ஒன்றாக இருந்த போதிலும் அதில் பல விதமான தின்பண்டங்கள் செய்கிறோம். கடவுள் பல வகையான காய்கறிகளைப் படைத்திருக்கிறார். அவர் ஒரே ஒரு கத்தரிக்காய் செடி ஒன்றை மட்டும் ஏன் படைக்க வில்லை.கத்தரிக்காயே சாப்பிடு என்று ஏன் சொல்லவில்லை.இறைவன் எத்தனை விதமான காய்கள்,பழங்களை  நமக்காகப் படைத்திருக்கிறார்? அதேபோல் தான் இந்தியாவில் இறைவனை பல ரூபங்களில் வணங்குகிறோம். ஆனால் ஒரே பரமாத்மா தான் என்று நம்புகிறோம். ஒரு இறைவன் பல ரூபங்களில் வணங்கப் படுகிறார். அது ஒரு கொண்டாட்டம் தான்.

பாருங்கள். எத்தனை விதமான நிறங்களில் நாம் ஆடை அணிந்திருக்கிறோம். எல்லோரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்திருந்தால், இது ஒரு ராணுவ முகாம் போலிருக்கும். இயற்கையின் நானாவிதமான ரூபங்கள் மிகவும் அழகானது. அதை நாம் மதிக்க வேண்டும். இந்த விளக்கம் அவர்களுக்கு மிகவும் பிடித்தது. “இது வரையில் யாரும் இப்படி ஒரு விளக்கம் அளித்ததில்லை” என்றார்கள்.

கே: ஒருவர் இறைவன் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆனால் ஏமாற்று வேலை, திருட்டுத் தனம் செய்கிறார். மற்றவருக்கு இறைவன் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால் எப்போதும் யாரையும் ஏமாற்றுவதில்லை. யார் சரியானவர்?

குருதேவர்: நீ உன் கேள்விக்கு, ஏற்கனவே பதில் கொடுத்து விட்டாய். இது எப்படி என்றால். ஒரு தட்டில் நிலக் கரியையும், மற்றொரு தட்டில் வெண்ணெயும் வைத்து நீ எதை விரும்புகிறாய் என்று கேட்பது போல. இது தெளிவானது.

இறைவன் மீது நம்பிக்கை வைத்திருப்பவர் எப்படி மற்றவரை ஏமாற்ற முடியும்? எனக்கு இது விளங்கவில்லை. அப்படி இருந்தால், அவருடைய (மனசாட்சி) மற்றவர்களை ஏமாற்றுவதற்காக, எப்போதும் அவரை கடுமையாகக் குத்திக் கொண்டிருக்கும். அவர் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருப்பார். ஏமாற்றும் மனிதன் அஞ்ஞானத்தில் உழல்கிறான். அவனுக்கு பரந்த மனப்பான்மை கிடையாது. எங்கேயோ ஒரு பயம் இருந்து கொண்டேயிருக்கும். அதனால் தான் அவன் அப்படிச் செய்கிறான்.

கே: என் நண்பன் பைத்தியமாகி விட்டான். அவன் 24X7 வேலை செய்து கொண்டிருக்கிறான். அவன் பெற்றோர்களும் செய்வதறியாதிருக்கிறார்கள். நானும் என்ன செய்வது என்று புரியவில்லை.

குருதேவர்: தற்சமயம் பலர் அவ்வாறிருப்பதைப் பார்க்கிறேன். நிறைய மன அழுத்தம் இருக்கிறது. நண்பர்களுடன் போட்டி, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கான மன அழுத்தம் அவர்களை இரவும் பகலும் படிக்க வைக்கிறது. ஒரு இளைஞன் என்னிடம் வந்து, தன் மேஜையின் மீது நான்கு விளக்குகளை வைத்துக் கொண்டு, இரவும் பகலுமாகப் படிப்பதாகச் சொன்னான். நம் மூளையைப் பாதுகாக்க வேண்டும். மூளைக்கு அதிக வேலை கொடுக்கக் கூடாது. திடீரென்று ஏதாவது ஏற்பட்டு ப்யூஸ் போவது போல் மூளை குழம்பி விடும். யோகா, தியானம் முதலியவைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். எப்போதாவது செய்தால் போதாது. இது போன்ற பிரச்சினைகளை எஸ்+ மேஜையில் கொண்டு வரவேண்டும்.

No comments:

Post a Comment