ஆப்ரஹாம் லிங்கன்





1. “பிறருக்கு விடுதலை அளிக்க மறுப்பவர் எவரும் தமது விடுதலை அனுபவிக்கத் தகுதியற்றவர்”ஆப்ரஹாம் லிங்கன்

2. “அடிமைகளுக்கு விடுதலை அளிக்கும் போது, பாதுகாப்போடு உரிமையும் மதிப்பும் பெற்ற பிற மாந்தருக்கு இணையாக நாம் அவர்களுக்கும் உறுதிப்படுத்துகிறோம்.”
ஆப்ரஹாம் லிங்கன்

3. “உன்னத மனிதர் ஒவ்வொருவருக்கும் பின்னால் இருக்கிறாள் ஒரு மாது என்று என் பெயர் வரலாற்றில் பொறிக்கப் பட வேண்டும் ! உயர்ந்த மானிடர் ஒருவருடன் வாழ்ந்தேன் என்று வரலாறு என்னைப் போற்ற வேண்டும் ! அவர் எத்தகைய உன்னத மனிதர் என்று எனக்குத்தான் மற்றவரை விட நன்றாகத் தெரியும் ! இப்படிச் சொல்லும் போது எனக்குப் புல்லரிப்பு உண்டாகுது !”மேரி டாட் லிங்கன்

4.  எனது அதிமுக்கிய பணி அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பது; அடிமைத்தனத்தை ஒழிப்பதோ அல்லது விட்டுவிடுவதோ அல்ல ! அடிமைகளை விடுவிக்க முடியாமல் போய் அமெரிக்க ஐக்கியத்தை மட்டும் காப்பாற்ற முடிந்தால் அதைச் செய்து முடிப்பேன். அடிமைகள் அனைவருக்கும் விடுதலை கிடைத்து ஐக்கியத்தைக் காப்பாற்ற முடிந்தாலும் அதைச் செய்து முடிப்பேன். சில அடிமைகள் மட்டும் விடுவிப்பாகி மற்றவர் விடப்பட்டு ஐக்கியத்தைக் காக்க முடிந்தாலும் அப்படியே செய்து முடிப்பேன். அடிமைத்தனத்தை நீக்கிக் கறுப்பருக்கு விடுவிப்புக் கிடைக்க முனைவது, அமெரிக்க ஐக்கியத்தைப் பாதுகாக்க எனக்குதவும் என்று நான் நம்புகிறேன். எதைத் தவிர்க்க வேண்டுமோ அதை நான் தவிர்ப்பேன், காரணம் அது அமெரிக்க ஐக்கியத்தைப் பாதுகாக்காது. நான் முனைந்து புரிபவை என் குறிக்கோளைப் பாதித்தால், என் போராட்டத்தைக் குறைப்பேன் ! நான் துணிந்து செய்பவை என் குறிக்கோளுக்கு உதவி செய்தால் என் போராட்டத்தைத் தீவிரமாகத் தொடர்வேன் !ஆப்ரஹாம் லிங்கன்

5. “கடவுள் நன்னெறிப் பக்கத்தில்தான் எப்போதும் இருப்பார் என்பதை நான் அறிந்தவன். எனது தேசமும் நானும் கடவுள் பக்கம் தான் சார்ந்திருக்க வேண்டும் என்பது என் தொடர்ந்த மனப் போராட்டமும் பிரார்த்தனையும் ஆகும்.”
6. “நான் அடிமையாக வாழ விரும்பாதவன். அதைப்போல் அடிமைகளுக்கு அதிகாரியாக இருக்கவும் நான் விரும்பாதவன்.”
7. “எல்லா மனிதரும் சுதந்திரமாகவும், சமமாகவும் படைக்கப் பட்டவர் என்பதில் எவருக்கும் ஐயம் இல்லாத காலம் வரும்வரை, விடுதலை ஒளிவிளக்கு உங்கள் இதயத்தில் எரியட்டும் என்ற நம்பிக்கையில் உங்களை விட்டு நீங்குகிறேன் !”
8. “நேர்மையான வினைகளைத் தவறான வழியில் செய்யக் கூடாது ! அமெரிக்க ஐக்கிய இணைப்புப் போராட்டத்தில், அப்படிச் செய்வதும் தவறான வினைபோல் குற்றமானது !”ஆப்ரஹாம் லிங்கன்

9.  “எண்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையத் தந்தையர்கள் இந்தக் கண்டத்திலே ஒரு புதிய தேசத்தை நிலைநாட்டிச் சுதந்திர வாழ்வைச் சிந்தித்து எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப் பட்டவர் என்னும் முன்மொழி வாசகத்தை நமக்கு ஒப்படைத்தார்கள்.”ஆப்ரஹாம் லிங்கன் (கெட்டிஸ்பர்க் பேருரை) (நவம்பர் 19, 1863)

10. “கடவுளுக்குக் கீழ் ஒரு புதிய விடுதலை மறுமலர்ச்சி உருவாகி இந்தத் தேசம் மக்களுடைய அரசாங்கம், மக்களுக்கான அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்பது நிலைப்படப் போரில் செத்து மாய்ந்தவர் உயிர் அர்ப்பணம் வீணாகப் போகாது நாமெல்லாம் இங்கே உறுதியாகத் தீர்மானம் செய்வோம்.ஆப்ரஹாம் லிங்கன் (கெட்டிஸ்பர்க் பேருரை) (நவம்பர் 19, 1863)

11.  “ஒருபோதும் அதற்கு முரண்பாடாக நான் எதுவும் கூறவில்லை. “சுதந்திரப் பேருரையில்” (Declaration of Independence) விளக்கியபடி, வாழும் தகுதி, விடுதலை உணர்ச்சி, இன்பத்தை நாடும் வேட்கை போன்ற எல்லா வித இயற்கை உரிமைகள் பெறுவதற்கு ஒரு நீக்ரோவுக்கு அருகதை கிடையா தென்பதற்கு எந்தக் காரணமும் இருக்க வில்லை. வெள்ளை மனிதனைப் போல் அவற்றை அனுபவிக்கக் கறுப்பு மனிதனுக்கும் எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. பல முறைகளில் கறுப்பன் எனக்கு நிகரானவன் இல்லை என்று நீதிபதி டக்லஸ் கூறுவதை நான் ஒப்புக் கொள்கிறேன். நிச்சயமாக நிறத்தில் இல்லை. ஒருவேளை ஒழுக்க நெறியிலும், கல்வி அறிவிலும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தான் விரும்பும் உணவைத் தன் கையால் எடுத்து உண்ணும் தகுதியில் எனக்குச் சமமானவன். நீதிபதி டக்ளஸ¤க்கும் சமமானவன்; உயிர்வாழும் மற்ற எல்லா மனிதருக்கும் சமமானவன்.”ஆப்ரஹாம் லிங்கன்

12.  “நாம் பகைவர் அல்லர். நாம் நண்பர்களே. நாம் பகைவராக மாறிவிடக் கூடாது. உணர்ச்சி ஆவேசத்தில் நமக்குள் மனமுறிவு ஏற்பட்டாலும் நமது பாசமும் பந்தமும் அறுந்துவிடக் கூடாது. புதிரான நினைவு அம்புகள் ஒவ்வொரு போர்க் களத்திலிருந்தும் தேசீய இடுகாட்டிலிருந்தும் நீண்டு, இந்த அகண்ட நிலத்தில் உயிருடன் வாழும் ஓர் இதயத்தையும் தொடும். அந்தத் தடத்தை மனிதப் பண்பாட்டின் தெய்வீகம் மறுபடியும் தொடும் போது அமெரிக்க ஐக்கியக் கூட்டு முழக்கத்தை ஓங்கி உயர்த்தி வலுப்படுத்தும்.ஆப்ரஹாம் லிங்கன், முதல் பதவி ஏற்புப் பேருரை (மார்ச் 2, 1861)

13.  “நாமெல்லாம் சுதந்திரம் வேண்டும் என்று முழக்கி வருகிறோம். அந்தச் சொல்லை நாமெல்லாம் பயன்படுத்தும் போது ஒரே பொருளை மனதில் எண்ணுவது இல்லை. விடுதலை என்றால் தாம் விரும்பியபடி தமக்கும் தமது ஊழியத்துக்கும் செய்து கொள்ளலாம் என்று நினைப்பவர் சிலர். மற்றும் சிலர் பிறரையும் பிறரது ஊழியத்தையும் தாம் விரும்பியபடி நடத்திக் கொள்ளலாம் என்று எண்ணுபவர். இவை இரண்டு சுதந்திரமும் வேறானவை மட்டுமல்ல. விடுதலை என்னும் ஒரே பெயரில் நிலவும் முரண்பாடான வெவ்வேறு செயல்கள். அவை விடுதலை என்னும் பெயரில் நடைபெறும் அடக்குமுறை என்பது எனது குறிப்பீடு.”ஆப்ரஹாம் லிங்கன் (ஏப்ரல் 18, 1864)

14.  மனத் திருப்தியற்ற என் தேச மக்களே ! தற்போதைய உள்நாட்டுப் போர்ப் பிரச்சனையைத் தீர்ப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. என் கைகளில் இல்லை ! அரசாங்கம் உங்களைத் தண்டிக்கப் போவதில்லை. நேரடிராகத் தாக்குவோராய் நீங்கள் எண்ணப் படுவதற்கு உங்களிடம் முரண்பாடுகள் இல்லாமல் இல்லை. அரசாங்கத்தைச் சிதைப்பைத் தடுக்க நீங்கள் மேலுலகில் உறுதிமொழி எடுத்துப் பதிவு செய்யப்பட வில்லை. ஆனால் அரசாங்கப் பாதுகாப்புக்கும், அதன் நீடித்த நிலைப்புக்கும், அதற்காகப் போராடவும் நான் எல்லாருக்கும் மேலான உறுதிமொழியை எடுத்திருக்கிறேன்.ஆப்ரஹாம் லிங்கன், [முதல் பதவி ஏற்புப் பேருரை (மார்ச் 2, 1861)]

எங்களால் முடிந்தவரை சம்டர் கோட்டையின் (Fort Sumter) முற்றுகை தொடரும் ! அதன் விளைவு என்ன வென்று எனக்கு நன்றாகத் தெரியும் ! அதை நிறுத்தச் சொல்லி என்னை ஏன் வற்புறுத்துகிறீர் ? அமெரிக்காவைத் துண்டாக்குவது உமது உரிமை என்று சொல்வது பிரிவினைக்கு அடிபோடுவது அல்லவா ? அந்த உரிமையை ஏன் வலியுறுத்துகிறீர் ? காரணம் நாங்கள் அடிமைத்தனக் கொடுமையை நீடிக்க விடப் போவதில்லை ! ஒருநாள் நாங்கள் அதை முற்றிலும் ஒழித்து விடுவோம் ! அந்த அச்சம் உமக்கு உள்ளதல்லவா ? நீவீர் அதை இப்போது மறுக்க முடியாது.ஆப்ரஹாம் லிங்கன் (1862)

“வரம்புமீறிய அரக்கத்தனம் (The Demon of Intemperence) மேதைகளின் குருதியையும், பெருந்தன்மையையும் உறிஞ்சுவதில் பேருவகை பெறுவதாகத் தெரிகிறது.”ஆப்ரஹாம் லிங்கன் (பிப்ரவரி 22, 1842)

“கடவுளின் நியதியே (Will of God) மேலோங்கி நிற்கும். (அடிமைத்தன ஒழிப்பு) போட்டியில் ஒவ்வொரு கட்சியும் கடவுளின் நியதிப்படி நடப்பதாய் வாதாடுகிறது. இருதரப்பார் கருத்தும் தவறாக இருக்கலாம். ஆயினும் இரண்டில் ஒரு கட்சி நிச்சயம் தவறாக இருக்க வேண்டும். கடவுள் ஒரே சமயத்தில் ஒரே கருத்துக்கு ஆதரவாகவும், அதற்கு எதிர்ப்பாகவும் இருக்க முடியாது. இப்போதைய உள்நாட்டுப் போரில் கடவுளின் குறிநோக்கம் (Purpose) எந்த ஒரு கட்சியின் வினைப் போக்குக்கு வேறுபட்டு இருக்கலாம். ஆயினும் மனம்போல் செய்யும் மக்களின் நேரடிப் பங்கீடுகள் மட்டுமே கடவுளின் நியதியைப் பின்பற்றப் பயன்படுகின்றன.”ஆப்ரஹாம் லிங்கன், (செப்டம்பர் 2, 1862)

“போர் ஒன்று வருமானால் அது அடிமைத்தனத்தை முன்னிட்டு இருக்காது ! தென்னகத்துக்கு அமெரிக்க ஐக்கியத்தின் மீது தேசப்பற்று இருக்குமானால் அடிமைத்தன ஒழிப்புச் சட்டத்தைத் தவிர்க்க அரசியல் முறையில் தர்க்கமிட்டு முடிவு காணலாம். அவ்விதமின்றி நாட்டைத் துண்டாக்கும் உரிமையைத் தென்னகம் மேற்கொண்டால் போரைத் தவிர வேறு வழியில்லை. நாட்டுப் பிரிவினையைத் தடுத்து நாமதைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு மாநிலமும் ஐக்கியத்தை ஒப்புக்கொண்டு நமது பிதாக்கள் உறுதி கூறியதை நிலைநாட்டவும், அமெரிக்க யூனியன் நிச்சயம் போரைத் துவக்கும். நாங்கள் நாட்டைப் பிரிக்க விட மாட்டோம். நாம் இருவரும் பகைவர் அல்லர். நாம் நண்பர்களே ! நாம் பகைவராய் மாறக் கூடாது ! உணர்ச்சி வசப்பட்டு மனமுறிவு ஏற்பட்டாலும் நமக்குள் இருக்கும் பந்த பாசம் முறியக் கூடாது !”ஆப்ரஹாம் லிங்கன்

“பண்டைப் பண்பியல் (Conservatism) என்றால் என்ன ? அது புதுமைக்கும், முயலாததற்கும் எதிராகப் பண்டைத்தனத்தையும், முயன்றதையும் மட்டும் எடுத்துக் காட்டுவதா ?”ஆப்ரஹாம் லிங்கன் (கூப்பர் கல்வியகப் பேருரை, பிப்ரவரி 27, 1860)

“என்னால் இந்த மாபெரும் வெள்ளை மாளிகையைத் தற்காலிகமாக ஆக்கிரமித்துக் கொள்ள முடிந்திருக்கிறது. உங்களுடைய எந்தக் குழந்தையும் என் தந்தையின் புதல்வனைப் போல் வந்திட நீங்கள் எதிர்பார்க்கலாம் என்பதற்கு நானே ஒரு வாழும் சான்று.”ஆப்ரஹாம் லிங்கன் (ஆகஸ்டு 22, 1864)

“நமது போராட்டத்தில் ஒருவேளை நாம் தோற்றுவிடலாம் என்று நிகழக்கூடிய ஒரு நினைப்பில், நியாயமென்று நாம் உறுதியாய் நம்பும் ஒரு குறிக்கோளை நிறைவேற்றுவதிலிருந்து நாம் பின்வாங்கக் கூடாது. அது அச்சமூட்டி என்னை வலிவிழக்க வைக்காது.”ஆப்ரஹாம் லிங்கன், (டிசம்பர் 26, 1839)

“நமது பழைய நற் கப்பலான அமெரிக்க யூனியனை, இந்தப் பயணத்தில் நாமெல்லாம் ஒன்று சேர்ந்து காப்பாற்ற வில்லை யானால், அடுத்ததோர் பயணத்தில் வேறெவருக்கும் முன்னின்று இயக்க ஒரு வாய்ப்புக் கிடைக்காது.”ஆப்ரஹாம் லிங்கன் (பிப்ரவரி 15, 1861)

“மாஸ்ஸசுசெட்ஸ் ஜெனரலின் இடத்தில் பணிபுரியும் அதிகாரி தயாரித்த ஓர் அரசாங்கப் போர் அறிக்கையை எனக்குக் காட்டினார். போர்க்களத்தில் புகழோடு உயிரைப் பலி கொடுத்த ஐந்து புதல்வரின் அன்னை நீதான் என்பதை அந்த அறிக்கையில் நான் கண்டேன். இந்தப் பேரிழப்பின் சோகத்திலிருக்கும் உனக்கு நான் ஆறுதல் கூற முயலும் வார்த்தைகள் எப்படி வலுவிழந்து பலனற்றதாய் நேர்மையின்றி இருக்கும் என்பதை நான் உணர்கிறேன். ஆனால் உயிர் கொடுத்துப் பாதுகாத்த நமது குடியரசின் நன்றியைப் பரிவோடு உனக்குக் கூறாமல் என்னால் சும்மா இருக்க இயலாது. நமது மேலுலகப் பிதாவிடம் உனது பேரழப்பு வேதனையைக் குறைக்க நான் பிரார்த்திக்கிறேன். விடுதலைப் பலி பீடத்தில் நேசப் புதல்வரை உன்னதத் தியாகம் செய்த பெருமையை நீ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.”ஆப்ரஹாம் லிங்கன் (நவம்பர் 21, 1864)

நான் அறியாதவன் அல்லன். அது நிச்சயம். எப்படி நியாயம் இருக்க முடியும் ? நீக்ரோக்களை அடிமையாய் வைத்திருப்பதை வெறுக்கும் ஒருவன் எப்படி வெள்ளை மாந்தருக்குள் கீழ் வகுப்பு இனத்தார் இருக்க உடன்படுவான் ? நமது சீர்குலைவு சீக்கிரமாய் முன்னேற்றம் அடைவதாகத் தெரிகிறது ! “எல்லா மனிதரும் சமமாகப் படைப்பானவர்” என்று முழக்கி ஒரு தேசத்தை நாம் உருவாக்க ஆரம்பித்தோம். இப்போது நாம் அதை மெய்யாக வாசிப்பது இப்படி: “எல்லாரும் சமமாகப் படைக்கப்பட்டவர், நீக்ரோக்களைத் தவிர !ஆப்ரஹாம் லிங்கன் (ஆகஸ்டு 24, 1855)

அறியாதவன் என்று சொல்லப்படும் நான் ஆட்சியைக் கட்டுப்படுத்தும் போது மேற்கூறப்பட்ட அந்த வாசகம் இப்படி வாசிக்கபடும் : “எல்லாரும் சமமாகப் படைக்கப்பட்டவர் நீக்ரோக்களைத் தவிர, அன்னியரைத் தவிர, காத்தலிக் மதத்தாரைத் தவிர !” அந்த நிலை வந்தால் சுதந்திரத்தைப் பாசாங்கு இல்லாமல் வழிபடும் வேறெந்த நாட்டுக்காவது நான் புலம்பெயர்ந்து போய்விடுவேன். உதாரணமாக வஞ்சகக் கலப்பின்றிச் சுத்தமான ஏதேட்சை அதிகாரம் அரசாளும் ரஷ்யாவுக்கு போகலாம்;ஆப்ரஹாம் லிங்கன் (ஆகஸ்டு 24, 1855)

என்னுடைய சித்தாந்த நியதியில் திடீர் நிகழ்ச்சிகள் (Accidents) எனப்படுபவை எவையும் கிடையா ! ஒவ்வொரு விளைவுக்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்க வேண்டும். நிகழ்கால விளைவுக்குக் காரணம் கடந்த காலம் ! அதுபோல் எதிர்கால விளைவுக்குக் காரணம் நிகழ்காலமாக இருக்கும். இவையெல்லாம் முடிவற்ற ஒரு தொடர்ச் சங்கிலியாக எல்லைக் குட்பட்ட நிலையிலிருந்து முடிவில்லா நிலைக்கு நீளும்.ஆப்ரஹாம் லிங்கன்

“என் மீது விழுந்த தாக்குதலுக்குப் பதில் தராது படிக்க மட்டும் நேர்ந்தால் இந்தக் கடையை மூடிவிட்டு வேறு பணிக்குப் போய்விடலாம். என்னால் கூடுமான வரை உன்னதப் பணியைச் செய்ய நான் முற்படுவேன். நான் மடிந்து போகும்வரை அப்படியே பணியாற்றி வருவேன். என் பணியின் விளைவுகள் பயனுள்ளதாயின், என் மீது தூற்றியவை புறக்கணிப்படும். ஆனால் அந்த விளைவுகள் தவறாக முடிந்தால், “நான் செய்தவை எல்லாம் ஒப்பற்றவை என்று பத்து தேவதைகள் பாராட்டினாலும் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.”ஆப்ரஹாம் லிங்கன்

“அடிமைகளுக்கு விடுதலை அளிக்கும் போது, அவருக்குக் கொடுப்பதிலும் அவர்களைப் பாதுகாப்பதிலும் நேர்மையாக நடந்து உரிமை உள்ளவருக்குச் சுதந்திரத்தை உறுதிப் படுத்துகிறோம். நாமந்த முயற்சியில் நேர்மையைக் காப்பாற்றலாம் அல்லது அவமதிக்கப்பட்டு உலகின் உன்னத நன்னம்பிக்கையை இழந்து போய்விடலாம். வேறு வழிமுறைகளால் வெற்றி அடையலாம். ஆனால் நமது குறிக்கோள் தோல்வி அடையக் கூடாது. நமது பாதை வெளிப்படையானது, அமைதியானது, பரிவு பந்தமுள்ளது. இம்முறையைப் பின்பற்றினால் உலகம் கைதட்டி நம்மை வரவேற்கும். கடவுள் நம்மை நிரந்தரமாய் ஆசீர்வதிப்பார்.”ஆப்ரஹாம் லிங்கன், (Second Annual Message to Congress, Dec 1, 1862)

“இரு தரப்பாளரும் போர் மீது வெறுப்பைக் காட்டுகிறார். ஆனால் அவர்களில் ஒரு தரப்பாளர் தேசம் துண்டாகாமல் நீடிக்கப் போரிட முற்படுகிறார். அடுத்தவர் தேசம் நாசமாகட்டும் என்று போரை வரவேற்றுக் கொள்கிறார். ஆம் அந்தப் போரும் வந்தது.”ஆப்ரஹாம் லிங்கன் (Second Inaugural Address, March 4, 1865)

“தனக்குள் எதிராகப் பிளவு பட்ட ஓர் அரசாங்க மன்றம் நிலைத்து நிற்காது. இந்த அரசாங்கம் பாதி விடுதலையிலும் பாதி அடிமைத்தனத்திலும் இயங்கிக் கொண்டு நிரந்தரமாக நிலைக்காது என்பது என் நம்பிக்கை ! நமது அமெரிக்க ஐக்கியம் முறிந்து போகும் என்று நான் எதிர்பார்க்க வில்லை ! நமது அரசவை மன்றம் வீழ்ச்சி அடைந்திடும் என்றும் நான் எதிர்பார்க்க வில்லை ! ஆனால் அது துண்டாவது தடுக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒன்று எல்லா மாநிலங்களும் சேர்ந்து விடுதலையை ஏற்கும் அல்லது மாறாக (அடிமைத்தனம் நிலவும்) மாநிலங்களாய் எல்லாம் வேறுபடும் !ஆப்ரஹாம் லிங்கன் [ஸ்பிரிங்ஃபீல்டு பேருரை, இல்லினாய்ஸ் ஜூன் 16, 1858]

“எனது பதவி ஏற்புரை ஆற்றிய மாதத்தின் ஆரம்பத்தில் நான் கூறினேன் : எனக்கு அளிக்கப்பட்டுள்ள ஆதிக்க உரிமை அரசாங்கத்துக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமித்துக் கைக்கொள்வதற்கும், சுங்கவரி, வருமான வரி வசூலிக்கவும் பயன்படுத்தப்படும். நமது கோட்டைகளை முடிந்த அளவு எந்த முறையிலும் வலுப்படுத்த வேண்டும் என்று நான் உடனே ஜெனரல் ஸ்காட்டுக்கு ஆணை இட்டது மேலும் உங்கள் பூரண சம்மதத்தை அப்போது பெற்றது. அதற்கு முற்றிலும் விதிவிலக்காக நீங்கள் இப்போது என்னை வற்புறுத்துவது : சம்டர் கோட்டை முற்றுகையை விட்டு நாம் விலக வேண்டும் என்பது !”ஆப்ரஹாம் லிங்கன் (ஏப்ரல் 1, 1861)

“யார் மீதும் தீய எண்ணமின்றி, எல்லோருக்கும் நியாய நெறியோடு, கடவுள் நமக்குப் புலப்படும்படி அளித்திருக்கும் நேர்மையைக் கடைப்பிடித்து நாம் மேற்கொண்ட பணியை முடிக்க முயற்சி செய்வோம். அப்போதுதான் தேசத்தின் காயங்களுக்கு நாம் கட்டுப்போட முடியும். உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர் விதவைகளுக்கும், அனாதைக் குழந்தைக்கும் நாம் கவனமுடன் கண்காணிப்பு செய்வோம். நமக்குள்ளேயும் மற்றும் அனைத்து தேசங்களுக் குள்ளேயும் நியாயமான நிரந்தர அமைதியை நிலைநாட்ட அது ஏதுவாகும்.”|ஆப்ரஹாம் லிங்கன் (இரண்டாம் முறை ஜனாதிபதி பதவி ஏற்பு உரை) (1865)

கோமான்களே ! நான்தான் இந்த அமெரிக்கா தேசத்துக்குப் பொருத்தமான உன்னத மனிதன் என்று கூற உடன்பட மாட்டேன் ! ஆனால் இப்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது : டச் நாட்டுக் கிராமத்தான் ஒருவன் தன் தோழனிடம் ஒரு சமயம் சொன்னானாம். “ஆற்றைக் கடந்து கொண்டிருக்கும் போது வண்டியில் குதிரையை மாற்றக் கூடாது” என்று.ஆப்ரஹாம் லிங்கன் [இரண்டாம் தடவை ஜனாதிபதித் தேர்தலின் போது (ஜூன் 9, 1864)]

கடந்த காலக் கொள்கைகள் யாவும் நிகழ்காலக் கொந்தளிப்புப் பிரச்சனைக்குத் தகுதியுள்ளவை அல்ல. இந்தத் தருணம் நமக்குப் பேரளவு தொல்லை கொடுத்து வருகிறது. நாமும் அந்த அளவுக்கு உயர்ந்து ஓங்கி நிற்க வேண்டும். இந்த நமக்குப் பிரச்சனை புதியது. நாமும் புதிய முறையில் சிந்திக்க வேண்டும். புதிய முறையில் போராட வேண்டும். நம்மை நாமே விடுவித்துக் கொண்டு பிரிவினையிலிருந்து நமது நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.ஆப்ரஹாம் லிங்கன் [இரண்டாம் ஆண்டு காங்கிரஸ் தகவலுரை (டிசம்பர் 1, 1862)]

நேர்மையே நமக்கு உறுதி அளிப்பது என்பதில் நாம் நம்பிக்கை வைப்போம். அந்த நம்பிக்கையில் இறுதிவரை நமக்குப் புரிந்த அளவு நமது கடமைகளைத் தீவிரமாய் நாம் செய்து முடிக்க வேண்டும்.ஆப்ரஹாம் லிங்கன் (பிப்ரவரி 1860)

“எந்த விதத்திலும் வெள்ளை இனத்துக்கும் கறுப்பு இனத்துக்கும் இடையே சமூக அரசியல் சமத்துவம் கொண்டு வருவதை நான் ஆதரிக்க வில்லை. கறுப்பர்களுக்கு வாக்குரிமை வழங்குவது, ஜூரராய் நியமிப்பது, உயர்ந்த பதவி அளிப்பது, வெள்ளையரைக் கலப்பு மணம் புரிவது ஆகியவற்றையும் நான் ஆதரிக்க வில்லை. இந்த இரண்டு இனங்களும் சமூக அரசியல் சமத்துவமோடு ஒருமைப்பாடுடன் வாழ முடியாதபடித் தடுக்கும் வேறுபாடுகள் பல உள்ளன. அப்படி அவர்கள் சேர்ந்திருக்க இயலாத நிலையில் வாழ நேர்ந்தால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் அமைப்பாட்டில்தான் வசிக்க முடியும் என்பது என் எண்ணம். வெள்ளை இனத்துக்குத்தான் உயர்ந்த நிலை அளிக்க வேண்டும் என்று நினைக்கும் மற்றவர் கருத்துக்கு நானும் ஆதரவு அளிக்கிறேன். ஆனால் வெள்ளைக்காரனுக்கு உயர்ந்த நிலை அளிக்கப்படுவதால், நீக்ரோக்களின் உரிமைகள் அனைத்தையும் மறுக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.”ஆப்ரஹாம் லிங்கன் (Fourth Debate with Stephen A Douglas at Charleston, Illinois) PP 145-146 [September 18, 1858]

“ஏறக்குறைய எண்பது ஆண்டுகளுக்கு முன்பு (சுதந்திர அறிவிப்பின் போது) எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப் பட்டவர் என்று முழக்கினோம் ! ஆனால் இப்போது நாம் வேறொரு அறிவிப்பை ஆரம்பித்திருக்கிறோம் : அதாவது சில மனிதர் மற்றவரை அடிமையாக வைத்துக் கொள்வது சுய ஆட்சி அரசாங்கத்தின் புனித உரிமை என்று !”ஆப்ரஹாம் லிங்கன்

“வடக்கரான அவர் (Stephen Douglas) இன வேறுபாட்டுக் கொள்கையில் தென்னவர்தான் ! சட்ட வாக்கெடுப்பில் அடிமைத்தன ஒழிப்பு வீழ்ந்தாலும் சரி அல்லது வென்றாலும் சரி அவர் கவலைப் படமாட்டார் ! ஆனால் பெரும்பான்மை யான வடக்கர் அடிமைத்தன முறையை ஆதரிக்க வில்லை. ஆப்ரஹாம் லிங்கனும் பெரும்பான்மையான வடக்கரும் அடிமைத்தன ஒழிப்புக்குப் பாதை வகுத்து அதையே ஓர் புனிதக் குறிக்கோளாகவும் கடைப்பிடித்தார்.”
ஆப்ரஹாம் லிங்கனைப் பற்றி ·பிங்கில்மன் (Finkleman)
(ஸ்டீஃபன் டக்லஸ் இல்லினாய்ஸ் டெமாகிராடிக் கட்சி -ஜனாதிபதிப் போட்டி அரசியல்வாதி)

“கடவுள் உங்களைப் படைத்ததே அடிமைத்தனத்தை ஒழிக்கத்தானே ! உங்கள் பிறவிப் பயனை கறுப்பராகிய நாங்கள் அனுபவிப்போம் ! எங்களை விடுவிக்கப் போரில் உங்கள் மனிதர் மடிகிறார் ! தென்னக நரகத்தை விட்டு நாங்கள் வெளியே வந்து என்ன செய்யப் போகிறோம் ? எப்படி வாழப் போகிறோம் ? எங்க இனத்துக்கு அறிவில்லை ! படிப்பில்லை ! பணமில்லை ! தனியே வாழக் குடிசை இல்லை ! எப்படி வாழ்வோம் இனிமேல் ? அடிமையாய் உள்ள போது குடியிருக்க ஒரு குடிசையாவது இருந்தது ! உண்ண உணவாவது கிடைத்தது ! அங்கே அடிமையாய் வேலை செய்து பிழைத்தோம் ! இனி எங்கே வேலை செய்வோம் ? என்ன வேலை செய்வோம் ? தென்னகத்திலே நாங்கள் எப்படி வெள்ளையர் வீட்டருகே வாழ முடியும் ? அடிமையாய்ப் பிறந்தேன் ! அடிமையாய் வளர்ந்தேன் ! இனி விடுதலை மனிதனாய் எப்படி வாழ்வேன் ?”
வில்லியம் கர்டிஸ் (லிங்கனிடம் உரையாடிய 72 வயது நீக்ரோ)

“அமெரிக்கத் தேச அரசியல் அமைப்பு நியதிப்படி (National Constitution) முதல் ஜனாதிபதி பதவி பெற்று ஏற்புரை நிகழ்த்தி 72 ஆண்டுகள் ஆகிவிட்டன.  அந்த ஆண்டுகளில் 15 பல்வேறு புகழ்பெற்ற உன்னதக் குடிமாந்தர் அடுத்தடுத்துப் பதவி ஏற்று அரசாங்கத்தை ஆட்சி செய்தார்.  அநேக தேச இன்னல்களில் அவர்கள் கடந்து சென்று முடிவில் பெரு வெற்றி பெற்றார்.  நான் இப்போது அதே பணியை விசித்திரமான பேரிடர்களுக்கு இடையில் அரசியல் நியதிப்படி நான்கு ஆண்டுகளுக்குச்  செய்ய நுழைகிறேன்.  முன்பே இருக்கும் ஒரு தவறைப் பின்பற்றி இப்போது நம் தேசத்தின் ஐக்கியத்தைத் தகர்க்கச் சிலர் இங்கு தீவிரமாக முயன்று வருகிறார்கள்.”
ஆப்ரஹாம் லிங்கன் (முதல் பதவி ஏற்புரை) (மார்ச் 4, 1861)

“அமெரிக்க இராணுவப் படையில் 200,000 கறுப்பர்களைத் தேர்ந்தெடுக்க நான் முடிவு செய்திருக்கிறேன்.  அறிவு மிக்க அமெரிக்க நீக்ரோக்களுக்கும் படைவீரராக நமக்குப் பணிபுரிவோருக்கும் வாக்குரிமை அளிக்க விரும்புகிறேன்.  அவர்களைத் தவிர மற்ற எல்லாக் கறுப்பரும் வாக்குரிமை பெறத் தகுதி பெற்றவரே !  இவ்விதம் நான் லூயூசியானாவில் கூறியிருப்பது மற்ற மாநிலங்களுக்கும் ஏற்புடையதாகும்.”
ஆப்ரஹாம் லிங்கன் (சாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் உள்நாட்டுப் போர் வெற்றியைப் பாராட்டிப் பேசியது) (ஏப்ரல் 11, 1865)

“மிஸ்டர் லிங்கன் ஆற்றிய உரையில் இப்படிக் கூறினார் : ‘முதலில் இந்த அரசாங்கம் நமது மூதாதையப் பிதாக்கள் விட்டுச் சென்றபடி விடுதலை மாநிலங்களாகவும் அடிமை மாநிலங்களாகவும் நிரந்தரமாக இருப்பதைப் பொறுத்துக் கொள்ளாது ! ஒன்று எல்லா மாநிலங்களும் அடிமைத் தனத்தை விடுவிக்க வேண்டும். அல்லது எல்லா மாநிலங்களும் அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்த அமெரிக்க ஐக்கியம் நீடித்திருக்காது.”
ஸ்டீ·பென் டக்லஸ் டெமாகிராட் போட்டியாளர் (அக்டோபர் 15, 1858)

“நமது மூதாதையப் பிதாக்கள் இந்த அரசாங்கத்தைப் பாதி விடுதலையாகவும் பாதி அடிமைத்தனமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று கருதியதாக ஸ்டீ·பென் டக்லஸ் அனுமானிப்பது உண்மை இல்லை. அடிமைத்தன வைப்புச் செம்மை யானது என்றும் அதை அரசியல் ஆட்சி நியதி முன் மொழிகிறது என்று டக்லஸ் அனுமானிப்பதாகத் தெரிகிறது. உண்மை என்ன வென்றால் நம்மிடையே இருந்து வந்த அரசியல் நியதியை அப்படியே அவர்கள் விட்டுவிட்டனர் என்பதுதான். அவ்விதம் விட்டுச் சென்றாலும் அநேக இடங்களில் உடன்பாடில்லாது இருந்ததை அவர்கள் தெளிவாகக் காட்டி இருக்கிறார்.”
ஆப்ரஹாம் லிங்கன் (ஸ்டீஃபென் டக்லஸ் தர்க்கப் பதிலுரை) (அக்டோபர் 15, 1858)


1 comment: