படிக்காத மேதை, ஏழை பங்காளன், கர்ம வீர்ர், பாரத ரத்னா, கிங் மேக்கர் என்று எல்லோராலும் புகழப்படுகின்ற கர்மவீரர் காமராஜர் பல்வேறு தொண்டுகள் ஆற்றி மக்களின்மனதில் நீங்காத இடம் பெற்றவர். தமிழக முதலமைச்சராக, அகில இந்திய காங்கிரஸின் தலைவராக, சிறப்பாகப் பணியாற்றிய – அவரது ஆட்சிக்காலத்தில்தான் கல்விக்கூடங்கள் அதிகமாகத்திறக்கப்பட்டன.
இலவச சீருடை, மதிய உணவுத் திட்டம் போன்ற மகத்தான திட்டங்களை உருவாக்கி, அதனைச் செம்மையாகச் செயல்படுத்தியவர் நம் தலைவர் காமராஜர். அவரது எளிமையான, புனிதமான வாழ்க்கையை இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமைகிறது.
1. வாழ்க்கை நிகழ்வுகள்
பிறப்பு
இராமநாதபுரம் மாவட்டம் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 – ம்நாள் அழைக்கப்படும் நகரம் முன்பு விருதுபட்டி என்றே அழைக்கப்பட்டது.
காமராஜரின் தந்தை பெயர் குமாரசாமி நாடார். தாயார் சிவகாமி அம்மாள் ஆவார்.
முதலில் காமராஜருக்கு “காமாட்சி” என்று பெயரிட்டார்கள். காமாட்சி என்பது அவர்களின் குல தெய்வமான காமாட்சி அம்மனின் பெயராகும். சிவகாமி அம்மாள் காமராஜரை “ராஜா” என செல்லமாக அழைத்து வந்தார். பின்னர் காமாட்சி மற்றும் ராஜா ஆகிய பெயர்களை இணைத்து காமராஜர் என்றே அழைத்தார்கள்.
காமராஜரின் தந்தை விருதுப்பட்டியில் தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார்.
தாய் மாமன் கருப்பையா நாடார் ஜவுளிக்கடை வைத்திருந்தார். இன்னொரு தாய்மாமன் காசி நாராயண நாடார் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்த நடத்தி வந்தார்.
காமராஜர் தங்கை பெயர் நாகம்மாள். அவர் மீது காமராஜர் அதிக பாசம் வைத்திருந்தார்.
பள்ளிப்படிப்பு
5 வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். காமராஜர் ஏனாதி நாயனார் வித்யாலாயா ஆரம்ப몮பள்ளியிலும் பயின்றார். இளம் வயதில் கபடி விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டு காமராஜர் விளங்கினார்.
அரசியல் ஆர்வம்
இளம் பருவத்திலேயே காமராஜர் அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டார். தலைவர்களின் உரைகளைக் கேட்க அதிக ஆர்வமாக இருந்தார்.
படிப்புக்கு முற்றுப்புள்ளி
காமராஜருக்கு 6 வயது இருக்கும்போதே 1909 ஆம் ஆண்டு காமராஜரின் தந்தை குமாரசாமி நாடார் காலமாகிவிட்டார். தந்தையை இழந்த காமராஜர், சில ஆண்டுகளே பள்ளிக்குச் சென்றார். பின்னர் தனது 12 – வது வயதில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை உருவாகியது. அதன் பின்னர், ஒரு ஜவுளிக்கடையில் காமராஜர் வேலையைப் பார்த்தார். பின் அவரது தாய் மாமன் மூலம் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.
நாட்டுப் பற்று
இளம் வயதிலேயே நாட்டுபற்று கொண்ட காமராஜர், செய்தித் தாள்களைத் தினமும் படித்து அரசியல் பற்றி தெரிந்து கொண்டார்.
நாட்டின் விடுதலைக்காக மக்கள் அப்போது போராடி வந்தார்கள். விடுதலைக்காகப்போராடுபவர்களை வெள்ளையர்கள் சிறை பிடித்தார்கள். கொடுமைப்படுத்தினார்கள்.
இந்நிலையில்தான் 1920 ஆம் ஆண்டு அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சட்ட மறுப்பு இயக்கத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டார்.
திருமண ஏற்பாடு
திருமணம் செய்து வைத்தால் குடும்பத்தைக்கவனிப்பார், தொழிலிலும் அக்கரையுடன் இருப்பார். காமராஜருக்குப் பொறுப்பு உண்டாகும் என அவரது தாய் சிவகாமி அம்மாள் நினைத்தார். காமராஜரின் தாய், மாமனாருடன் சேர்ந்து திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தனர்.
இதனை அறிந்த காமராஜர் தனக்கு திருமணம் வேண்டாம் என மறுத்துவிட்டார். திருமணம் வேண்டாம் என்பதில் மிகவும் உறுதியாக இருந்ததால்தாயார் சிவகாமி அம்மாள் திருமணம் பற்றி பிறகு வற்புறுத்தாமல் விட்டுவிட்டார்.
சுதந்திர போராட்ட ஈடுபாடு
திருவனந்தபுரத்தில் மரக்கடை வியாபாரம் செய்யும் இன்னொரு தாய்மாமனாரான காசிநாடாரின் கடைக்கு அனுப்பினால் காமராஜரின் கவனம் தொழில் மீது பதியும் எனக் கருதிய தாய் சிவகாமி அம்மாள். காமராஜரைத் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார்.
காமராஜர் திருவனந்தபுரம் வந்த நேரத்தில் கேரளாவில் சாதிப் போராட்டங்கள் நடந்தன. இனவேற்றுமைக்கொடுமைகள் நீங்க ஈ.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தை நடத்தினார். காமராஜர் அந்தப் போராட்டத்தை நடத்தினார். காமராஜர் அந்தப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கேரளாவில் நடந்த எல்லா சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு நாட்டு விடுதலைக்காகப்போராடினார்.
இதனால் காமராஜரின் கவனம் திசை திரும்பியது. தாய் மாமனார் மனம் வருந்தினார். விருதுபட்டியில் தொழிலில் கவனம் இல்லையென்று திருவனந்த புரத்திற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் இங்கு இப்படி தொழிலில் கவனம் இல்லாமல் காமராஜ் இருக்கிறாரே என எண்ணி மீண்டும் காமராஜரை விருதுப்பட்டிக்கு அனுப்பி வைத்தார்.
அரசியல் போராட்டக் களங்கள்
தனது சொந்த ஊரான விருதுபட்டிக்கு மீண்டும் வந்தார் காமராஜர். காங்கிரஸ் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். 1923 ஆம் ஆண்டு நாகபுரி கொடிப்போராட்டத்தில் பங்கு கொண்டார். அதே ஆண்டு மதுரையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
பின்னர் 1925ஆம் ஆண்டு கடலூரிலிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் பணிக்காக 1926 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி – சீனிவாச அய்யங்கார் ஆகியோருடன் பணிபுரிந்தார் சென்னையில் 1927 ஆம் ஆண்டு கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தை நடத்த அண்ணல் காந்தியிடம் அனுமதிபெற்றார். போராட்டம் நடைபெறுவதற்குள் அரசாங்கமே நீல் சிலையை அகற்றிவிட்டது.
1930 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் இரண்டாமாண்டு அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1931 ஆம் ஆண்டு காந்தி – இர்வின் ஒப்பந்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.
இராமநாதபுரத்திலிருந்து சென்னை மாகாணக் காங்கிரஸ் செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1933ம் ஆண்டு காமராஜர் மீது விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் வெடி குண்டு வழக்கு பொய்யாக உருவாக்கப்பட்டது. இந்த வழக்கில் காமராஜர் சிறைக்கு அனுப்பப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்படாத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
காமராஜரின் உழைப்பால் 1934 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், பெருவாரியான வாக்குகளைப்பெற்று காங்கிரஸ் வென்றது. 1936 ஆம ஆண்டு காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டித் தேர்தலில் சத்தியமூர்த்தி தலைவராகவும், காமராஜர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1937 – ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் வேட்பாளராக இருந்து வெற்றி பெற்றார். 1940 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
1941 ஆம் ஆண்டு யுத்த நிதிக்கு எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த்தால், கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நகராட்சித் தலைவர்
விடுதலைப் போரட்டத்தில் தீவிரமாக்க் காமராஜர் ஈடுபட்டார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையி அடைக்கப்பட்டார். அந்த வேளையில் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராகத் தேரந்தெடுக்கப்பட்டார். சிறையிலிருக்கும் போதே நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் நகர் மன்றக் கூட்டங்களில் காமராஜர் கலந்து கொள்ளவில்லை. 1942ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் காமராஜ் விடுதலை ஆனார்.
1942 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி நகர் மன்றக்கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர், கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காமராஜர்-
“என்னை நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுத்தது குறித்து மகிழ்ச்சி, எனக்குப்பல முக்கிய பணிகள் இருப்பதால் நான் நகர் மன்றத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்” என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
1942 ஆகஸ்டு மாதம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். அமராவதி சிறைச்சாலையில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார். பின்னர் அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். 1945இல் காமராஜர் விடுதலை செய்யப்பட்டார். 1946 -ஆம் ஆண்டு மே மாதம் 16ம் நாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
பின்னர் அதே ஆண்டு சென்னை சட்ட மன்றத்திற்கும் காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம்நாள் இந்தியா விடுதலை பெற்றது. பண்டித நேருவின் தலைமையில் இடைக்கால அரசு உருவானது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார். 1948ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆனார். 1950 ஆம் ஆண்டு நான்காவது முறையாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆனார். 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் நாள் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார்.
காமராஜர்திட்டம் (கே பிளான்)
காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் சில பிரச்சனைகள் உருவாகின. எனவே காமராஜர் ஒவ்வொரு மாநிலத்திலுள்ள மூத்த தலைவர்களும் நீண்ட நாட்கள் பதவி வகிக்கின்றவர்களும், ஆட்சிப் பணியை விட்டு விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற் திட்டத்தை பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் கூறினார்.
இந்தத் திட்டத்தைப் பிரதமர் ஜவஹர்லால் நேரு வரவேற்று ஆதரித்தார்; மிகவும் பாராட்டினார்; உலகத்தில்லுள்ள நாளிதழ்களெல்லாம் பெருந்தலைவர் காமராஜரின் இந்தத் திட்டத்தைப் பாராட்டின. மூத்த தலைவர்கள் பதவி விலகும் திட்டத்தை “காமராஜர் திட்டம்” என்றே அழைத்தார்கள். இதனை ‘கே பிளான்’ என்றே கூறினார்கள்.
தான் கொண்டுவந்த திட்டத்தைச் செயல்படுத்த பெருந்தலைவர் காமராஜர் 1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
காமராஜரின் இந்த துணிச்சலான செயலைக் கண்டு உலகமே பாராட்டியது.
காலா காந்தி
1964 ஆம் ஆண்டு புவனேஸ்வரத்தில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு பின்பு காமராஜரை ‘காலாகாந்தி’ (கருப்புக் காந்தி) என்றே அழைத்தார்கள். காந்திஜியின் மறு அவதாரமாக்க் கருதினார்கள்.
ராஜதந்திரி
1965ஆம் ஆண்டு பிரதமர் பதிவியில் இருக்கும்போதே ஜவஹர்லால் நேரு காலமானார். அவருக்கப் பின் யாரைப் பிரதமராக்குவது என்று பல கேள்விகள் எழுந்தது. தனது அரசியல் ஞானத்தால் போட்டியின்றி பிரதமரை தேர்ந்தெடுக்கும் வகையில் லால்பகதூர் சாஸ்திரியை பாரதப் பிரதமராக தேர்ந்தெடுக்க வழி செய்தார். அதனால் இவரை ராஜதந்திரி என்றே அனைவரும் புகழ்ந்தார்கள்.
கிங் மேக்கர்
ரஷியாவிற்குச் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அங்கு காலமானதால் மீண்டும் பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. அந்தநிலையில் பிரதமர் இந்திரா காந்திக்கும், மொரார்ஜிதேசாய்க்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கப் பெரும் முயற்சி எடுத்தார் காமராஜர்.
போட்டியிலிருந்து விலக மொரார்ஜிதேசாய் மறுத்துவிட்டதால் இந்திரா காந்தியைப் பிரதமராக்க, கடுமையாக உழைத்தார். இந்திராகாந்தியைப் பிரதமராக்கிக் காட்டினார்.
இதனால் பெருந்தலைவர் காமராஜரை கிங் மேக்கர் (மன்னர்களை உருவாக்குபவர்) என்றே அழைத்தார்கள்.
தேர்தலும் விபத்தும்
1967-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விருது நகர் தொகுதியில் சட்டசபை வேட்பாளராக போட்டியிட்டார். தென்மாவட்டங்களில் பொது தேர்தலில் நின்ற மற்ற வேட்பாளர்களுக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் காயம் அடைந்ததால் தேர்தலில் பிரச்சாரம் செய்ய இயலவில்லை. தேர்தலில் பெருந்தலைவர் காமராஜர் வெற்றிபெற இயலாத நிலையும் உருவாகியது.
நாகர் கோவில் வெற்றி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு அமோக வெற்றி அடைந்து எம்.பி. ஆனார்.
சரித்திர நாயகன்
1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்.
பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி:
தனியே எனக்கோர் இடம் வேண்டும் – தலை
சாயும் வரை நான் அழ வேண்டும்.
வானகம் போய்வர வழி வேண்டும் – எங்கள்
மன்னனை நான் பார்த்து வரவேண்டும்
தாயே எனக்கொரு வரம் வேண்டும்- என்
தலைவனை மீண்டும் தர வேண்டும்.
தமிழே எனக்கொரு மொழி வேண்டும் – அவன்
தன்மையைச் சொல்லிநான் தொழவேண்டும்.
இருப்பேன் பலநாள் என்றானே – எம்மை
ஏய்த்தது போல் இன்று சென்றானே – அவன்
சிரிக்கும் அழகைப் பார்ப்பதற்கே – அந்தத்
தேவன் அருகினில் அழைத்தானோ?
பறக்கும் பறவைக் கூட்டங்களே – எங்கள்
பாரத வீரனைக் காண்பீரோ – இங்கு
துடிக்குங் கோடி உள்ளங்களை – அந்தத்
தூயவனிடம் கொண்டு சேர்ப்பீரோ!
என்ற கண்ணதாசனின் வரிகள் நம் அனைவர் கண்களிலும் நீர் த்தும்ப வைத்துவிடுகிறது அல்லவா?
2. முதலமைச்சர் காமராஜர்
1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை முதல்வராக பணியாற்றிய காமராஜர் எளிமையின் சின்னமாக விளங்கினார்.
வீண் விளம்பரங்களை வெறுத்த காமராஜர், கிராம மக்கள் நலனில் பெரிதும் அக்கரை காட்டினார். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் தானே சுற்றுப்பயணம் செய்து கிராம பிரச்சனைகளை நேரில் கண்டறிந்தார். அதனை நீக்க புத்தம் புதிய செயல் திட்டங்களை தீட்டினார்.
கல்விக்கண் கொடுத்தவர்
ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.
“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.
“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?
உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.
“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.
“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.
“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.
உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள்.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார். இதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.
அரசியல் பணி
மாநில முதல்வர் இருக்கும் தகுதி பெரும் பணக்கார்ர்களுக்கும் மிட்டாமிராசுதார்ர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் மட்டுமே உண்டு என்பதை பொய்யாக்கி சாமானியனும் மாநில முதலமைச்சர் ஆகலாம் என்பதை நிரூபித்துக் காட்டிய முதல் மனிதர் காமராஜர்தான். ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்குச் சாவு மணி அடித்தது அவரது மிகப் பெரியச் சாதனை.
பதவி ஆசை அற்றவரே பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காகவும்நேருவிற்குப் பிடிக்காதவர்களைப் பதவியிலிருந்து ஒழித்துக் கட்டவும் காமராஜர் பதவி விலகும் திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார். இது அவரது அரசியல் நுண்ணறிவுக்கு எடுத்துக்காட்டு ஆகும். நேருவுக்குப் பின் லால்பகதூரைப் பிரதமராக்கியது அவரது அரசியல் திறமைக்கு தக்கச்சான்று ஆகும்.
“இந்தியாவைக் காப்போம் – ஜனநாயகத்தைக் காப்போம்” என்பது விருதுநகர் வீர்ரின் வேத வாக்கு.
அணைக்கட்டுகள்
காமராஜர் ஆட்சிக்காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன். இந்தத் திட்டத்திற்காக சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் செலவானது.
மதுரையில் உள்ள வைகை அணையும் இரண்டரைக் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர்நிலம் பாசன வசதி பெற்றது.
சுமார் 3 கோடி செலவில் அமராவத அணை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் 47,000 ஏக்கர் பாசன வசதி பெற்றது.
நெல்லை மாவட்டம் தாரிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மணிமுத்தாறு அணை காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதி பெற்றது.
1,100 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் வாலையார் அணை 1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டது.
இரண்டு கோடி ரூபாய் செலவில் கிருஷ்ணகிரி அணையும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.
சுமார் 2 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானித் திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.
சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவில் புள்ளம்பாடி திட்டம் உருவாக்கப்பட்டதால் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.
சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தென்னாற்காடு மாவட்டம் கோமுகி ஆற்றுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 8,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.
இவை தவிர கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறை அணை, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணையும் கர்மவீர்ர் ஆட்சியில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தொழில் நிறுவனங்கள்
காமாரஜர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழிற் சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக சென்னை கிண்டியிலுள்ள தொழிற்பேட்டைகள், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேணன் ஆகியவை காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டவை.
இவை தவிர சிமென்ட் ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள், அலுமினிய உற்பத்தி ஆலைகள், மாக்னசைட், சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், உலைக்கூட ஆலைகள், ரப்பர் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும் பாதைகள் அமைக்கும் எஞ்சின்கள்,சைக்கிள்கள், தானியங்கி ஈரிருளிகள், தட்டச்சுப் பொறிகள், ஸ்விட்ச் கியர்கள், எலக்ட்ரிக் கேபிள்கள், மருத்துவ அறுவைச் சிகிச்சை கருவிகள், தொடர் வண்டிப் பெட்டிகள், பார உந்து வாகனங்கள் ஆகியன காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும்.
இவைதவிர எண்ணூர் அனல் மின்சார நிலையம், தூத்துக்குடி துறைமுகம் போன்ற மிகப்பெரிய தொழில் திட்டங்களும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன.
3. காமராஜர் சிந்தனைகள்
காமராஜரின் சீரிய சிந்தனைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெறியுடன் செம்மையாய் வாழ வழிவகுக்கும் வித்த்தில் அமைந்துள்ளன. அவரது சிந்தனையில் உதித்த சீரிய கருத்துக்களை இப்போது காண்போம்.
பொறுமையைக் கடைப்பிடியுங்கள்
இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் பலர் மக்களிடம் உங்களுக்கு நான் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று சொல்லி தேவையில்லாத வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.
தேவையான செயல்களைக்கூட செய்ய மறுக்கிறார்கள். அவசரப்பட்டு சில செயல்களைச்செய்து அவமானத்திலும் அமுங்கிப் போகிறார்கள். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலங்களாக சில அரசியல் தலைவர்கள் இருப்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.
“பதறும் காரியம் சிதறும்” என்பார்கள். திட்டமிடாமல் அவசரப்பட்டு செய்யப்படும் செயல்கள் முடிவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும், மேலும் அவமானங்களை உருவாக்கும்.
இதனை உணர்ந்த பெருந்தலைவர் காமராஜர் நிதானமாகச் செயல்படுவதற்கு எளிய வழியாக “ஆகட்டும் பார்க்கலாம்” என்னும் வார்த்தைகளை உபயோகித்து வந்தார்.
எந்தக் காலத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பெருந்தலைவரின் சிந்தனையாகும்.
காலம் தவறாமல் கடமை ஆற்றுங்கள்
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய முடியாமல் இருப்பவர்கள் பலர். பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி அரசியல் கூட்டங்களுக்குக் கூட சரியான நேரத்தில் வராத தலைவர்களும் உண்டு. கூட்டத்திற்கு தாமதமாக வந்தால்தான் பார்வையாளர்களின் கவனத்தையும் கவர்ந்து இழுக்க முடியும் என்ற எண்ணத்தோடு கூட்டத்திற்கு வருபவர்களும் உண்டு.
கூட்டத்திற்கு தாமதமாக வந்தால்தான் “பெருந்தலைவராகத் தம்மைக் கருதுவார்கள் என பல அரசியல் தலைவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் உணரும் வண்ணம் ஒரு நிகழ்ச்சி காமராஜர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் நடந்தது.
சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கர்மவீர்ர் கலந்து கொண்டார் கூட்டத்தில் கலந்து கொள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு வரவில்லை. மிகவும் தாமதமாக வந்தார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வந்தவுடன் ரசிகர்கள் கூட்டத்திலிருந்து கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
இதனை மேடையிலிருந்த காமராஜர் கவனித்தார். சிவாஜி கணேசனை அருகில் அழைத்தார். “நீங்கள் கூட்டத்திற்கு வருவதாக இருந்தால் முதலிலேயே வந்து விடுங்கள். அல்லது கூட்டம் முடிந்தபின் வாருங்கள்.”
“இப்படி இடையில் வருவதை நிறுத்திவிடுங்கள்” என்றார் பெருந்தலைவரின் சீரிய சிந்தனை கலந்த அறிவுரையை ஏற்ற நடிகர் திலகம் அதன் பிறகு எல்லாக் கூட்டத்திற்கும் நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல ஆரம்பித்தார்.
காலம் தவறாமல் கடமை செய்தால் உயர்வு அடையலாம் என்பது காமராஜர் வாக்கு.
வீண் வம்புக்கு விலகிவிடுங்கள்
நம்மீது குறை சொல்பவர்களைக் கண்டால் நமக்கு எரிச்சல் வரும். நம்மீது வேண்டுமென்றே குறை சொன்னால் எரிச்சலோடு கோபமும் சேர்ந்து வரும். சில வேளைகளில் மற்றவர்கள் வீண் வம்பு செய்து நம்மைச் சண்டைக்கு இழுப்பார்கள்.
இதனால் நிலைகுலைந்து நிதானம் இழந்து செயல்படவும் வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான காலகட்டங்களில் பிரச்சினை கொடுப்பவரை விட்டு விலகி இருப்பது விவேகமான செயல் ஆகும்.
வீணாக வம்புக்கு வந்தாலும் அவர்களோடு சண்டையிடாமல் ஒதுங்கிக் கொள்வது நல்லது.
இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் தமிழக இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்த நேரம் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் பலர் குமரிஅனந்தன் அவர்களுக்கு உரிய மரியாதை தர வில்லை. பல்வேறு வித்த்திலும் அவரைத் தொந்தரவு செய்தார்கள்.
குமரி அனந்தன் சமாளித்துப் பார்த்தார். முடியவில்லை. பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்ட குமரிஅனந்தன், முடிவில் பெருந்தலைவர் காமராஜரிடம் சொன்னார்: மூத்த தலைவர்கள் தனக்கு இடைஞ்சல் செய்கிறார்கள்” என்பதைச்சொன்னால் காமராஜர் கண்டிப்பாக அவர்களை அழைத்துக் கண்டித்து, திருத்துவார் என எதிர்பார்த்தார் குமரிஅனந்தன்.
காமராஜர் நீ போகிற இடத்தில் ஒரு பெரிய பாறை இருக்குதுன்னா என்ன செய்வே? அதை அசைத்து தள்ளி வச்சிட்டாப் போவே! இல்லைன்னா அதைச் சுற்றித்தானே போவாய். அதைப் போல் சுற்றிப்போயேன் என்று சொன்னார். பெருந்தலைவரின் சீரிய வழிகாட்டல் கேட்ட குமரி அனந்தன் அமைதியாகிவிட்டார்.
வீணாக வம்புச்சண்டைக்கு இழுப்பவர்களை விட்டு விலகிவிடு என்பது கர்மவீர்ர் காமராஜரின் அன்புக் கட்டளை ஆகும்.
படிக்கும் போது அரசியல் வேண்டாம்
அரசியல் என்பது அறிவுள்ளவர்களைக் கூட சில வேளைகளில் அழித்துவிடும். அதுவும் மாணவப் பருவத்தில் குறிப்பாக இளம்பருவத்தில் அரசியலில் மாணவர்கள் ஈடுபடும் போது உணர்ச்சிகள் மேலோங்கி இருப்பதால் படிப்பு பாழாக வாய்ப்புள்ளது. கவனம் சிதறிவிடுவதால் படிப்பில் அக்கறை இல்லாமல் கோஷ்டி சேர்ந்து படிப்பை நிறுத்திக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
மாணவர்கள் தம்மோடு இருந்தால் அரசியலில் தனிபலம் கிடைக்கும் என்று இளம் இரத்தங்ளைத் தனது கட்சியின் வளர்ச்சிக்காக உரமாக்கிச் செயல்படுபவர்களும் உண்டு. ஆனால் காமராஜர் அரசியல் தலைவராக இருந்தாலும் மாணவர்கள் எப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்பதைத்தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார்.
ஒருமுறை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டுப் பிரச்சனைகளைச் சந்தித்திருந்தனர். அவர்கள் அப்போது முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராசரைக் காண்ச் சென்னை சென்றார்கள். அவர்களிடம் காமராஜர்.
படிக்கும்போது மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம்; படிப்பை முடித்த பின்பு எந்த அரசியலில் வேண்டுமானாலும் ஈடுபடுங்கள் என அவர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் அவர்கள் பிரச்சனைக்குத்தீர்வு ஏற்பட உதவினார்.
படிக்கும்போது அரசியல் வேண்டாம் என்பது படிக்காத மேதையின் பண்புள்ள சிந்தனையாகும்.
எதிர்க்கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்
எதிர்க்கட்சியா? அல்லது எதிரிக் கட்சியா? என்று சில ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினரைப் பார்த்து அடிக்கடி கேட்பது உண்டு. ஏனென்றால் எடுத்ததுக் கெல்லாம் ஆளுங்கட்சியினரைக் குறைசொல்லும் போக்கு எதிர்க்கட்சிகளிடம் இருக்கிறது.
அதைப்போல ஆளுங்கட்சிக்காரர்களும் எதிர்க்கட்சிக்காரர்களை எவ்வாறு பிரச்சனைகளில் மாட்டி வைக்கலாம் என்று காத்து கிடப்பதும் உண்டு. ஆளும் கட்சியில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து வைத்திருந்தார்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தூய்மையான வாழ்க்கையை வாழ்ந்து எளிமையின் சின்னமாக விளங்கியவர். காமராஜர் முதலமைச்சராக இருந்த போது தனது தாயார் சிவகாமி அம்மையாரை விருதுநகரிலேயே தங்க வைத்திருந்தார்.
இதனைக் கவனித்த சில நண்பர்கள் “உங்கள் அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்து உங்களுடன் தங்க வைத்துக் கொள்ளலாமே” எனக் கேட்டார்கள். உடனே காமராஜர் “இது நல்ல யோசனைதான் ஆனால் என் அம்மா என்னுடன் இருந்தால் அவர்களைப் பார்க்க நிறைய உறவினர்கள் வருவார்கள். இதைப்பார்க்கும் எதிர்க்கட்சியினர் காரியம் செய்து கொடுப்பதாகச் சொல்வார்கள். “ஆட்சிக்கே களங்கம் கற்பிப்பார்கள்” என்றார் காமராஜர்.
எதிர் கட்சியினரிடம் அதிக்க் கவனமாக இருக்க வேண்டும். என்பதை மிகத் துல்லியமாகச் சுட்டிக்காட்டியவர் காமராஜர்.
எதிர்க்கட்சிகளிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது காமராஜரின் பொன் மொழியாகும்.
உழைத்து வாழ வேண்டும்
இப்போதெல்லாம் உழைக்காமல் பிழைக்க வேண்டும் என்பதைச் சிலர் மனதில் கொண்டு சும்மா இருக்கிறார்கள். உடலுழைப்பு செய்யவும் தயாராக இல்லை. மூளை உழைப்புக்கும் தயாராக இல்லை. எனவே சோம்பலுடன் திரியும் கூட்டம் அதிகமாகிவிட்டது. ஒருநாடு வளர்ச்சிப் பெற வேண்டுமானால் அந்த நாட்டின் மக்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.
ஒருமுறை ஆவடியில் காங்கிரஸ் மாநாடு சிறப்பாக நடந்தது. மாநாட்டில் ஜவஹர்லால் நேருவும், கலந்து கொண்டார். மாநாட்டில் கலந்து கொண்ட பெருந்தலைவர் காமராஜர் “கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும். சமதர்மச் சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை.
காந்திஜி காட்டிய வழியில் சமதர்மச் சமுதாயத்தை அமைப்போம்” எனப்பேசி மக்களின் மனதில் இடம்பெற்றார்.
உழைத்து வாழ வேண்டும் என்பது உத்தமர் காமராஜரின் சத்திய மொழியாகும்.
வீரமுடன் வாழுங்கள்
“நோயினால் மடிந்தவர்களைவிட பயத்தினால் இறந்தவர்களே அதிகம்” என்பார்கள். எதற்கெடுத்தாலும் நாளும் பயந்து வாழுகின்ற மக்கள் உண்டு.
“அஞ்சி அஞ்சி சாவார் – அவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே”
என பாட்டுக்கொரு புலவர் பாரதியார் தெளிவாக நாட்டு மக்களின் நிலையை அன்றேபடம் பிடித்துக் காட்டினார். “கோழையாய் வாழ்வதைவிட வீரனாகச் சாவதே மேல்” என்பது நாட்டுப்பற்று மிக்க நல்லவர்களின் கருத்தாகும்.
நம் நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச்செத்தவர்கள் ஏராளம். குண்டாந்தடியால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம். நாட்டுக்காக – விடுதலைக்காக, பாடுபட்ட நல்லவர்கள் வாழ்ந்த நம் நாட்டில், காமராஜர் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடந்தது.
1949ஆம் ஆண்டு திருச்சியில் ஒருபொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது சிலர் குழப்பம் உண்டாக்க வெடிகளை வீசினார்கள்.
மேடை அருகே வெடி வெடித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்தது.
உடனே காமராஜர் “கூட்டத்தில் குழப்பம் உண்டாக்க நினைப்பவர்கள் இது மாதிரி வெடிப்பதில் பலனில்லை. வீரமிருந்தால் என் நெஞ்சில் துப்பாக்கியால் சுடுங்கள். காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றான். அதனால் காந்தியடிகள் அமரரானார். அதைப் போலவே பெருமை எனக்கும் கிடைக்கட்டும். வீரப்பரம்பரையிலே வந்தவர்கள் வியாதியில் கஷ்டப்பட்டு இறந்தார்கள் என்பது பெருமை கிடையாது” என அஞ்சாது உரையாற்றினார். கூட்டம் அமைதியானது.
வீரமுடன் வாழ்வதே விவேகமான செயலாகும் என்பது “பாரதரத்னா” காமராஜரின் சீரிய சிந்தனையாகும்.
No comments:
Post a Comment