Mark Zuckerberg-Facebook

கனவு காணுங்கள்,
சற்று பெரியதாகவே!


பேஸ்புக் மார்க் ஜூகெர் பெர்க்கின் வெற்றி ............................

சுமார் 150 கோடி பயனீட்டாளர்களை கொண்டு இன்று உலகையே ஆண்டு கொண்டிருக்கும் சமூக வலைத் தளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூகெர் பெர்க்கின் பிறந்த நாள் இன்று. பேஸ்புக்கின் பயன்பாடு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை அத்துணை பேரும் இதனை பயன்படுத்துகின்றனர். ஒரு நாளைக்கு பேஸ்புக்கின் வழியாக படங்கள் மட்டும் 250 மில்லியன் (1 மில்லியன் = 10 லட்சம்) ஏற்றப்படுகிறது தெரியுமா?
பேஸ்புக் ஒரு நாள் வேலை செய்யவில்லை என்றால் கூட உலகம் முழுதும் கோடிக்கணக்கான மக்கள் மன ரீதியாக பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள் என்றால் அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளுங்களேன்.
பயனற்ற விஷயங்களில், விவாதங்களில், மலிவான ரசனைகளில், வீண் அரட்டைகளில் ஈடுபட்டு பேஸ்புக்கில் தங்கள் பொன்னான நேரத்தை கரைத்து தங்கள் வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருப்பவர்கள் ஒருபுறம் இருக்க, பேஸ்புக் என்னும் இந்த அற்புத தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி தங்கள் வாழ்வின் முன்னேற்றத்தில் அதை ஒரு அங்கமாக்கிகொள்ளும் சாமர்த்தியசாலிகளும் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும். (நம் வாசகர்கள் நிச்சயம் இரண்டாம் வகையினரே என்று நம்புகிறேன்!)
இத்தகைய சிறப்பு வாய்ந்த பேஸ்புக்கை நிறுவிய  மார்க் ஜூகெர் பெர்க்க்கிற்கு தற்போது வயது என்ன தெரியுமா? 26!
கடந்த 2004-ம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தனது சக மாணவர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்த போது  இதை கண்டுபிடித்தார் மார்க். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டாக நண்பர்களுடன் மார்க் ஜூகெர் பெர்க் துவக்கிய தளத்தில் இன்று (2013 ல்) தினமும் குறைந்த பட்சம் நான்கு இலட்சம் பேர் புதிதாக இணைகிறார்கள் என்றால் இதன் வளர்ச்சியை பார்த்துக்கொள்ளுங்களேன்.
இன்று விரல் விட்டு எண்ணக்கூடிய உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் மார்க் ஜூகெர் பெர்க்கிற்கு எப்படி இந்த வெற்றி சாத்தியமாயிற்று என்று பார்ப்போமா?
எப்படி இந்த வெற்றி சாத்தியமாயிற்று?
தான் என்ன செய்கிறோமோ அதை திடமாக நம்பினார்
வெற்றிகரமான மனிதராகவேண்டுமெனில் அதற்கு அபரிமிதமான அர்பணிப்பு உணர்வு வேண்டும். பேஸ்புக்கை கண்டு பிடித்த காலத்தில், மார்க்கின் நண்பர்கள் மாலை வேளைகளில் ஜாலியாக ஊர் சுற்ற கிளம்பிவிட மார்க் மட்டும்  விடுதியில் தனது அறையில் கம்ப்யூட்டரில் கோடிங் செய்து கொண்டிருப்பார். சில சமயம் விடிய விடிய அவர் அப்படி இருந்ததுண்டு. தான் செய்யும் பணியை ஒருவர் மிக தீவிரமாக நேசித்திருக்காவிட்டால் பேஸ்புக்கை இப்படி ஒரு மிகப் பெரிய நிறுவனமாக அவர் மாற்றியிருக்க முடியாது.
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம்
உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தளமாக உயர்ந்த பேஸ்புக், அதன் வளர்ச்சியின் இடையே மிகப் பெரும் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது என்பதை எவரும் மறக்கக்கூடாது. பேஸ்புக் எங்களுடையது என்று அதற்கு உரிமை கோரியவர்கள் முதல், தங்கள் தகவல்கள் பகிரங்கப் படுத்தப்பட்டு தங்கள் தனித் தன்மை பாதிக்கப்படுவதாக வழக்கு தொடுத்தவர்கள் வரை பலரை பேஸ்புக் சந்தித்துள்ளது. பல நாடுகளில் இன்றும் பேஸ்புக் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த எதிர்ப்புக்களை எல்லாம் கண்டு மார்க்கோ அவரது குழுவோ சோர்ந்துவிடவில்லை. தடைகளுக்கிடையேயும் தங்கள் பயணத்தை தொடர்ந்து இன்று அதை அத்தியாவசியமாக்கிவிட்டார்கள்.
கனவு காணுங்கள்… சற்று பெரியதாகவே!
தங்கள் காலேஜ் ஹாஸ்டல் அறையில் விளையாட்டாய் ஆரம்பித்த ஒரு ப்ராஜெக்ட் நாளை உலகையே ஆளப்போகிறது என்று சொன்னால் எவரும் நம்பியிருக்கமாட்டார்கள். பேஸ்புக் ஆரம்பித்த அன்றே அது நூறு கோடி உறுப்பினர்களை ஒரு நாள் அடையும் என்று மார்க் எதிர்பார்க்கவில்லை தான். இருந்தாலும் தனது ப்ராஜக்ட் குறித்தும் தனது நிறுவனம் குறித்தும் அவருக்கு மிகப் பெரும் கனவுகள் இருந்தது.
ரிஸ்க் எடுப்பது குறித்து அவர் துளியும் அச்சப்படவில்லை
“தோல்வியடைவதற்கான மிகப் பெரிய வழி எது தெரியுமா? ரிஸ்க் எடுக்காமல் இருப்பது” என்பதை திடமாக நம்பியவர் மார்க். பேஸ்புக்கிற்காக நிதி திரட்டும்போது மார்க் மிகப் பெரிய ரிஸ்க்குகளை அனாயசமாக எடுத்தார். மார்கெட்டில் தனது கம்பெனிக்கு டிமாண்டை கூட்டுவதன் பொருட்டு மிகப் பெரும் முதலீட்டார்களை தவிர்த்தார். மீட்டிங்குகளை கான்சல் செய்தார். முக்கிய போன் கால்களை கண்டுகொள்ளவில்லை.
ஆனால் கடைசீயாக 12 மிகப் பெரிய முதலீட்டு நிறுவனங்கள் தனக்கு நிதியுதவி அளிக்க வாசலில் நிற்பதை பார்த்தார். வேறு யாராவது அவர்கள் இடத்தில் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் இது போன்ற வாய்ப்புக்களை தவறவிட மாட்டார்கள். ஆனால் மார்கிற்கும் அவரது டீமிற்குற்கும் அவரது ப்ராடக்டின் மேல் நம்பிக்கை இருந்தது.
பிசினஸ்களில் ரிஸ்க் எடுக்காமல் இருப்பதே ஒரு ரிஸ்க் தான் என்று கூறுவார்கள். ஆனால் ஒரு பொருளை நீங்கள் அரும்பாடுபட்டு உருவாக்கும்போது ரிஸ்க் எடுப்பது என்பது அத்தனை சாதாரணம் அல்ல. ஆனால் ‘அச்சம்’ என்கிற விஷயம் உங்களது முடிவை பாதிக்காதவாறு பார்த்துக்கொண்டால் உங்கள் பொருளிற்கு மிகப் பெரிய சந்தையை நீங்கள் அடையமுடியும் என்பதை நிரூபித்தவர் மார்க்.
தனித்திரு….
பேஸ்புக் துவக்கப்பட்ட காலகட்டத்தில் முன்னணி அமெரிக்க கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள், ஹார்வார்ட், யேல் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் ஆகியற்றில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே தன் கதவை திறந்தது. மற்ற கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் இதில் இணைய விரும்பினார்கள். மிகப் பெரும் முதலீட்டாளர்கள் இதை பற்றி கேள்விப்பட்டு இதில் இணைய விரும்பியபோது உடனடியாக இதில் இணைய முடியவில்லை. காரணம் இதில் இணையவேண்டுமெனில் அவர்களுக்கு கண்டிப்பாக .edu என்கிற மெயில் ஐ.டி. மூலம் ரெஜிஸ்ட்ரேஷன் அவசியம் தேவை. இதன் மூலம் தனது ப்ராடக்டுக்கு கிராக்கி இருக்குமாறு அவர் பார்த்துக்கொண்டார். (supply was never larger than demand).
போட்டியை பார்த்து கலங்கவில்லை
மார்க் ஜூகெர் பெர்க் பேஸ்புக்கை அறிமுகப்படுத்தியபோது அதே போன்று கிட்டத்தட்ட 20 சமூக தளங்கள் இருந்தன. ஒவ்வொன்றும் பேஸ்புக்கை விட ஒரு வகையில் சிறப்பாக இருந்தன. My Space 50 லட்சம் வாடிக்கையாளர்களையும், Friendster $13.00 மில்லியன் முதலீட்டையும், ஆர்குட் கூகுளின் சப்போர்த்டையும் பெற்றிருந்தன.
வேறு யாராவது இருந்தால் ‘இப்படி ஒரு கடினமான போட்டியில் நாம் வெற்றிபெறுவதாவது? அது நடக்கிற காரியமா?” என்று துண்டை உதறி தோளில் போட்டுவிட்டு போயிருப்பார்கள். ஆனால் மார்க் மனம் தளரவில்லை. அவரது விடாமுயற்சிக்கு அவர் எதிர்பார்த்ததைவிட அதிக பலன் கிடைத்தது.
தனது குறிக்கோளில் உறுதியாக இருந்தமை
“இந்த உலகை இன்னும் இணைக்கவேண்டும். புதிய புதிய கதவுகளை திறக்கவேண்டும்” என்று ஒரு முறை மார்க் சொன்னார். இதோ தற்போது பேஸ்புக், காணாமல் போன உறவுகளை இணைக்கிறது, ஒன்றாக படித்த நண்பர்களை கண்டுபிடித்து தருகிறது, பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்ட இடங்களில் கருத்து சுதந்திரத்தை வழங்குகிறது, அடக்குமுறைகளுக்கு எதிராக மக்களை கிளர்ந்தெழச் செய்கிறது… இப்படி பலப் பல. எகிப்து புரட்சிக்கும் முக்கிய காரணம், அண்மையில் ஈழப் பிரச்னையில் மாணவர்கள் ஒருங்கினையவும் காரணம் பேஸ்புக் தான்.
“உங்களுடைய முக்கிய குறிக்கோள் என்ன என்பதில் மட்டும் கவனம் கொள்ளவேண்டும். தேவையற்ற பயனற்ற விஷயங்களில் உங்கள் சக்தியை வீணடிக்க கூடாது.” இது தான் வெற்றிக்கான ஒரே வழி.
மார்க் ஜூகெர் பெர்க் பெற்றிருக்கும் வெற்றி அதிர்ஷ்டத்தினால் வந்தது அல்ல. கடின உழைப்பு, ஆர்வம், பெரிதாக கனவு காணும் துணிவு இது தான் அவரின் வெற்றிக்கு காரணம். ரிஸ்க் எடுப்பதில் இருந்து விலகி ஓடாமல், போட்டிகளை கண்டு புறமுதுகிடாமல் துணிவுடன் அவர் வைத்தது போல அடியெடுத்து வைத்தால் எந்த ஒரு தொழில் முனைவோரும் வெற்றிபெறலாம்.
எல்லாவற்றுக்கும் மேல், சம்பாதிக்கும் பணத்தில் குவிக்கும் சொத்தில் ஒரு பெரும் பகுதியை அறப்பணிகளுக்கு நன்கொடை கொடுத்து வருகிறார் மார்க் ஜூகெர் பெர்க். 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பின் தங்கிய பள்ளிக்கூடங்களின் வளர்ச்சிக்காக $100 மில்லியன் வழங்கினார். Silicon Valley Community Foundation க்கு இந்த ஆண்டு சுமார் $500 மில்லியன் வழங்கியுள்ளார் மார்க் ஜூகெர் பெர்க்.
மனசுக்கேத்த வரவு + வாழ்வு என்றால் அதற்கு உதாரணம் திரு. மார்க் ஜூகெர் பெர்க் தான்.  

No comments:

Post a Comment