நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் விஸ்வரூபம் திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளதாகக் கூறி இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து படத்தை வெளியிட தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றதை அடுத்து, தடைக்கான காரணம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வியாழக்கிழமை விளக்கம் அளித்தார்.
தமிழகம் முழுவதும் 524 திரையரங்குகளில் படம் வெளியாக இருந்ததால், அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கொடுப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று அவர் கூறினார்.
மேலும் படத்தை முழுமையாக தடை செய்ய நினைத்திருந்தால் பட ஒழுங்குமுறை சட்டம் 1955, பிரிவு 7-ன் படி நேரடியாக தடை செய்திருக்க முடியும் என்றும் ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு வேண்டும் என்றே தடை விதித்ததாக கூறப்படுவதை அவர் மறுத்தார். 144 தடை உத்தரவு என்பது 15 நாட்களுக்கான தற்காலிக தடை உத்தரவுதான் என்றும் அதற்குள் நிலைமை சரியாகும் என்ற எண்ணத்துடனேயே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
விஸ்வரூபம் படத்திற்கான தொலைக்காட்சி உரிமத்தை குறைந்த விலைக்கு ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்காததும், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் பேசியதுமே அரசின் தடை உத்தரவுக்கு காரணம் என்ற விமர்சிக்கப்படுவதை ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்தார்.
தமக்கோ, அதிமுகவுக்கோ, அந்த தொலைக்காட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்த ஜெயலலிதா, ப.சிதம்பரம் பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என்றார்.
கமல்ஹாசன் என்ற தனிப்பட்ட ஒருவர் மட்டுமே, பிரதமரை தேர்வு செய்துவிடமுடியாது என்பதால் அவரது பேச்சு குறித்து தாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
விக்ரம் திரைப்பட விவகாரத்தில் கமல்ஹாசனை விமர்சித்து அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியதாக கருணாநிதி குற்றம்சாட்டியிருந்தார்.
கருணாநிதியின் இந்த புகார், அபத்தமான கற்பனை என விளக்கமளித்த ஜெயலலிதா, இதுதொடர்பாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் கருணாநிதியின் குற்றச்சாட்டை வெளியிட்ட ஊடகங்கள் மீதும் வழக்கு தொடரப் போவதாக அவர் குறிப்பிட்டார்.
கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் திரைப்படங்களை தாம் தடை செய்யாத நிலையில் கமல்ஹாசன் படத்தை மட்டும் தாம் வேண்டுமென்றே தடை செய்ததாக கூறுவது தவறு என்றும் படத்தை வெளியிடுவது தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், கமல்ஹாசனும் ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்னைக்கு தீர்வு கண்டால், படம் வெளியாவதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றும் ஜெயலலிதா உறுதி அளித்தார்.