ஆப்ரஹாம் லிங்கன்




முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ

Fig 1 Image of Galileo
Galileo Galilei
(1564-1642)



“கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”


பாரத வீராங்கனை கல்பனா சாவ்லா

விண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா சாவ்லா 


Kapana Chawla
Kalpana Chawla Ph.D.
(1962-2003)



நேற்றைய தினத்தில் வாழ்ந்தவர் இன்றைய நாளில் உயிருடன் இல்லை என்னும் பெருமை யுடையது இவ்வுலகு!

திருவள்ளுவர் [நிலையாமை]



விண்வெளித் தீர மாது கல்பனாவின் மின்னல் போன்ற வாழ்வு!
2002 ஆம் ஆண்டு மே மாதம், ‘பெண் விண்வெளி வீராங்கனைகள் ‘ என்னும் புத்தகத்துக்குக் கல்பனா சாவ்லாவை நேர்முக வினாக்கள் கேட்ட கனடாவின் எழுத்தாளி, லாரா உட்மன்ஸீ [Laura Woodmansee] கூறியது: ‘கல்பனா விண்வெளித் தேர்வில் வேட்கை மிகுந்தவராகத் தோன்றினார்! துடிப்பாக வாலிபம் பொங்கி இனிப்புக் கடைமுன் நோக்கும் மதலை போல் ஆர்வத்துடன் நடமாடினார்! தான் செய்யும் வேலைகளில் பெரும் இறுமாப்புக் கொண்டு, பங்கு கொள்ளப் போகும் கொலம்பியா பயணப் பணியில் முற்றிலும் ஊறிப் போய், உள்ளொளி வீசக் காணப் பட்டார்! மெய்யாகவே அவர் எதிர்கால விண்வெளிக் கனவுகளில் மிதந்தார்! சந்திர மண்டலத்தில் ஆராய்ச்சிகள் செய்ய ‘விஞ்ஞான அரங்கு ‘ [Scientific Base] ஒன்றை நிறுவிப் பணி புரியத் தான் விரும்புவதாகக் கூறினார்! ‘ இவ்வாறு மேதை போல் பேசி, மங்கிடப் போகும் மாபெரும் ஓர் அறிவுச் சுடர் மகத்தான ஒளி வீசித் திடீரென மின்னல் போல் மறைந்தது!
Kalpana Chawla Group Astronauts


பாரத நாட்டில் யாரும் அறியாத பாமரக் குடும்பத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பின் போது விமானப் பொறியியலில் வேட்கை கொண்டு, பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் 20 வயதில் விமானத்துறைப் பொறியியல் பட்டம் பெற்று, அதற்குப் பிறகு அமெரிக்கா நோக்கிச் சென்று, அங்கே 22 ஆவது வயதில் டெக்ஸஸ் பல்கலைக் கழகத்தில் M.Sc. [Aerospace Engineering] பட்டமும், அடுத்து 26 வயதில் கொலொராடோ பல்கலைக் கழகத்தில் விண்வெளி எஞ்சினியரிங்கில் Ph.D. [Aerospace Engineering] பட்டத்தையும் பெற்று, நாஸாவில் 32 ஆவது வயதில் விண்வெளி வீராங்கனை ஆகிய கல்பனாசாவ்லாவைப் போன்ற வேறோர் வனிதாமணி உலகத்தில் இதுவரை வாழ்ந்திருக்கிறாரா ?



எட்டாண்டுகள் அமெரிக்க அண்டவெளி விமானியாகத் திகழ்ந்து, இரண்டு முறை விண்வெளி மீள்கப்பலில் வெற்றிகரமாய்ச் சுற்றி, வானை நோக்கி விண்மீன்களின் கண்கொளாக் காட்சியில் கவர்ச்சி யுற்று, அந்த இனிய கதைகளை நமக்கு மீண்டும் சொல்லாமல் மறைந்த, மாதர் குல மாணிக்கத்தை மனித இனம் மறக்க முடியுமா ? ‘காரிருளில் விண்மீன்களைக் காண்பதும், பகலில் பூகோளம் வேகமாய் உருள்வதை நோக்குவதும் என் நெஞ்சில் புல்லரிப்பை உண்டு பண்ணுகிறது! இரண்டாம் தடவையாக அவற்றைக் காண்பது ஓர் வாழும் கனவு! இனிய கனவு! அதுவும் மற்றும் ஒரு முறை! ‘ கொலம்பியா விண்கப்பலில் ஏறும் முன்பு இவ்வாறுக் கூறிச் சென்ற கல்பனா மெய்க்கனவிலிருந்து விடுபட்டு மீண்டும் விழிக்கவே வில்லை!



பாரதப் பிரதமர் அடல் பெஹாரி வாச்பையி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு வருந்தல் தந்தி அனுப்பினார்: ‘இந்த துக்க நாளில் நாங்களும் உங்களுடன் இணைந்து வருந்துகிறோம். விண்வெளிக் கப்பலில் பணியாற்றிய உன்னத வாலிப ஆடவர், மாதர் அனைவர் சார்பிலும் எங்கள் இதயங்கள் நோகுகின்றன. மரணமானவர்களில் ஒருவர் பாரதத்தில் பிறந்தவர் ஆனாதால், இந்தியாவில் எங்களுக்கு இந்த பரிதாபமான விபத்து, பெருந்துயரை உண்டாக்கி யிருக்கிறது! ‘


|

மீள்கப்பல் பயணத்தில் மீளாது போன ஏழு விண்வெளித் தீரர்கள்!
கொலம்பியா மீள்கப்பல் இருபதாம் நூற்றாண்டு உருவாக்கிய ஓர் நூதனப் பறக்கும் பூத வாகனம்! அது ஏவுகணை போல் [Missile] ஏவப்பட்டு, அண்டவெளிச் சிமிழ்போல் [Spacecraft] சுழல்வீதியில் [Orbit] சுற்றி வந்து, இறக்கை முளைத்த ஜெட் விமானம் போல் [Aircraft], தரைதொட்டு இறங்கும் முத்திறம் உடைய, ஓர் ஒப்பில்லா பொறி நுணுக்க யந்திரம்! 1986 இல் நிகழ்ந்த விண்கப்பல் சாலஞ்சர் விபத்துக்குப் பின்பு கடந்த 16 ஆண்டுகளாக, நான்கு விண்வெளிக் கப்பல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பயணங்களை வெற்றிகரமாக முடித்திருக்கின்றன! தொலைக்காட்சி சாதனத்தில் விண்கப்பல் செங்குத்தாக ஏறுவதும், பயணத்தை முடித்துக் குடை விரித்திழுக்க தொடுதளத்தில் விரைந்து, அது வந்து நிற்பதும் கண்கவர்க் காட்சியே! அக்காட்சிகளை ஆயிரக் கணக்கான மாந்தர்கள் தூரத்தில் நின்று ஏவுதளத்து அருகிலும், இறங்கு தளத்து அருகிலும் கண்டு புளதாங்கிதம் அடைகிறார்கள்!
Kalpana Chawla in Training


ஆனால் 2003 பிப்ரவரி முதல் தேதி யன்று ஃபிளாரிடா தொடுதளத்தை நோக்கி இறங்கிய கொலம்பியா விண்கப்பல் 16 நிமிடங்களுக்கு முன்பு, காலிஃபோர்னியா டெக்ஸஸ் வானிலே பிளவடைந்து சிதறிப் போவதை நேராகவும் தொலைக்காட்சி மூலமாகவும் கண்ட உலக மக்கள், அடைந்த வேதனையை எவ்விதம் விவரிப்பது ? விண்கப்பலில் பறந்த ஏழு விண்வெளி வீரர்களை மகிழ்ச்சியோடு வரவேற்க வந்த தாய், தந்தையர், கணவர், மனைவிமார், சின்னஞ் சிறு பிள்ளைகள் ஆகியோர் மனமுடைந்து மயக்க முற்றதை எப்படி வார்த்தைகளில் எழுதுவது ?

நியூயார்க் நகரில் 2001 செப்டம்பர் 11 தேதிக் காலை வேளை, இரட்டைக் கோபுர மாளிகைகளில் நிகழ்ந்த கோரக் காட்சியை மக்கள் நேராகவும், தொலைக் காட்சியிலும் கண்டு துடிப்புற்ற பின்பு, மறுபடியும் அதுபோல் ஒரு கோர மரணச் சம்பவம் நிகழ்வதைப் பார்த்துத் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்ந்தனர்! பாரத நாட்டில் பிறந்து அமெரிக்க விண்வெளி விமானியான, கல்பனா சாவ்லா  விண்கப்பலில் வந்து இறங்குவதைக் கண்டு வாழ்த்த, இந்தியாவில் அவர் படித்த தாகூர் பால் நிகேதன் பள்ளி நண்பர்கள் ஆடிப் பாடி ஆரவாரம் செய்து கொண்டிருந்த அனைவரும் அப்படியே கல்லாய் நின்றனர்!
Kalpana Chawla inside the Space shuttle


கொலம்பியா பயண ஆளுநர் ரிக் ஹஸ்பன்ட் [Rick Husband 45], பயண விமானி, வில்லியம் மெக்கூல் [William McCool 41], பயணச் சிறப்புநர் மைக்கேல் ஆன்டர்ஸன் [Michael Anderson 43], பயணச் சிறப்புநர், டேவிட் பிரெளன் [David Brown 46], பயணச் சிறப்புநர் இலான் ராமோன் [Ilan Ramon 47], பயணச் சிறப்புநர், மருத்துவ டாக்டர் லாரல் கிளார்க் [Dr. Laurel Clark 41], பயணச் சிறப்புநர், பறப்பியல் டாக்டர் கல்பனா சாவ்லா [Kalpana Chawl 41] ஆக மொத்தம் ஏழு பேர் [ஐந்து ஆடவர், இரு மாதர்] விபத்தில் மாண்டனர்! ஏழு பேரில் இலான் ராமோன் இஸ்ரேலிலிருந்து பங்கெடுத்த முதல் விண்வெளி விமானி! மற்ற ஆறு பேரும் அமெரிக்கர்! இந்தியாவில் பிறந்து முதல் அமெரிக்க விண்வெளி விமானியான கல்பனா சாவ்லா  இரண்டாம் முறையாக விண்கப்பலில் பயணம் செய்தவர்!



விண்வெளி மீள்கப்பல் இறங்கும் போது வானில் வெடித்தது!

1986 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி விண்வெளி மீள்கப்பல் ‘சாலஞ்சர் ‘ [Space Shuttle, Challenger] ஃபிளாரிடா கனாவரல் முனை [Cape Canaveral, Florida] ஏவுதளத்திலிருந்து செங்குத்தாக எழுந்து, ஒரு நிமிடம் இயங்கி 50,000 அடி உயரத்தில் [சுமார் 10 மைல்] செல்லும் போது, திடாரென பழுது ஏற்பட்டு வானத்தில் வெடித்தது! விண்கப்பல் சுக்கு நூறாகப் போனதுடன், பயணம் செய்த ஏழு அண்டவெளி விமானிகள் [ஐந்து ஆடவர், இரு மாதர்] ஒருங்கே உயிரிழந்தனர்! பதினேழு ஆண்டுகளுக்குப் பின்பு மற்றுமோர் விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா [Space Shuttle Columbia] ஏவுதளம் நோக்கி இறங்கும் போது, எதிர்பாராது பயங்கர விபத்துக் குள்ளானது! சாலஞ்சர் மீள்கப்பலைப் போன்று, கொலம்பியா விண்கப்பலில் இறந்தவர், நால்வர் ஆடவர், இருவர் மாதர். முன்னது ஏவப்படும் போது ஒரு நொடியில் வெடித்தது! பின்னது தரைக்கு இறங்கும் போது சிறிது, சிறிதாய்ச் சிதைந்து, முடிவில் வெடித்தது!
ஐந்து விண்வெளிக் கப்பல்களில் சாலஞ்சர் வெடித்த பின் நான்காகி, இப்போது கொலம்பியா சிதைந்து மூன்று மீள்கப்பல்களாய் குறைந்து விட்டன! பிழைத்தி ருக்கும் மூன்று விண்கப்பல்களின் தலைவிதியும், எதிர்கால விண்கப்பல் பயணங்களின் பணிவிதியும், விபத்தின் காரணங்களை அறிந்த பிறகுதான் நிர்ணய மாகும். இதுவரை நான்கு மீள்கப்பல்களின் 111 விண்வெளிப் பயணங்களைச் சுமார் 21 ஆண்டுகள் நாஸா திட்டப்படித் திறம்படச் செய்து காட்டியுள்ளது! கொலம்பியா விண்கப்பல்தான் முதலில் கட்டப்பட்டுத் தயாரானது. 1981 ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகள் சீராய்ப் பணியாற்றிய விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா! அது 27 தடவை விண்வெளியில் ஏவப்பட்டு, விண்ணாய்வுகளை செவ்வனே முடித்து, வெற்றிகரமாகப் பூமியில் இறங்கி யுள்ளது. இருபத்தி எட்டாவது முறை ஏவிய போது, திட்டப்படி அண்டவெளியில் புகுந்து, 16 நாட்கள் விண்வெளிப் பணிகளை முடித்து, பூமிக்கு மீளும் போதுதான் தீவிரப் பழுதுகள் ஏற்பட்டு விபத்துக் குள்ளாகி, இறுதி 16 நிமிடங்களில் அது சிதைய ஆரம்பித்தது!


காலை 8-15 மணிக்கு [EST], இந்து மகாக் கடலைக் கடக்கும் போது, பயண அதிபதி ரிக் ஹஸ்பென்ட் [Commander Rick Husband] பறக்கும் விண்கப்பல் ‘சுற்றுவீதி முறிவு ‘ [Deorbit] செய்ய, ராக்கெட் எஞ்சிகளை ஒரு நிமிடம் இயக்கினார்! கொலம்பியா ஃபிளாரிடா தளத்தைத் தொட இன்னும் அரை மணி நேரம் ஆகும்.

விண்கப்பல் சுற்றுவீதி முறிவு: உயரம்: 170 மைல், வேகம்: 15900 mph, ஃபிளாரிடா தொடுதளம்: 12520 மைல் தூரம். பயண இடம்: இந்து மகாக் கடல்.
பூமண்டல மீட்சி [Re-entry]: விண்கப்பல் 180 டிகிரி திசை திரும்பி, முனை மூக்கு மேல் நோக்க, வெப்பம் தாங்கும் வயிற்றைக் காட்டி உராய்வுக் காற்றை எதிர்கொண்டு, பூமண்டல ‘மீட்சிக்கு ‘ [Re-entry] விண்கப்பல் முற்பட்டது. விண்கப்பல் 25 நிமிடங்கள் இருள்மயச் [Blackout] சூழலில் இறங்கியது! உயரம்: 48 மைல்; வேகம்: 16125 mph. ஃபிளாரிடா தொடுதளத் தூரம்: 3275 மைல்!
உச்சநிலை வெப்பத்தில் விண்கப்பல்: உயரம்: 42 மைல், வெப்ப நிலை: 20 நிமிடங்கள், வேகம்: 14520 mph. ஃபிளாரிடா தொடுதளம் : 1720 மைல் தூரம்.
பூமிக்கு மேல் 39 மைல் உயரத்தில் கொலம்பியா பயணம் செய்யும் போதுதான் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன! கொலம்பியா விண்கப்பல் 8-59 மணிக்கு [EST], ஃபிளாரிடா தொடுதளத்தில் இறங்குவதற்கு 16 நிமிடங்களுக்கு முன்பு டெக்ஸஸ் மாநிலத்தின் மீது வெடித்துச் சிதறியது!
Kalpana chawla in the Control Console


விண்கப்பல் சிதைந்து போனதற்குக் காரணங்கள் என்ன ?

கொலம்பியா விண்கப்பலில் சுமார் 2.5 மில்லியன் உறுப்புகள் [Components] உள்ளன! அவற்றின் ‘உறுதிப்பாடு நிலை ‘ [Reliability Level] 99.9% என்று வைத்துக் கொண்டாலும், வலுவற்ற 2500 உறுப்புகளில் சில கோளாறாகி விண்கப்பல் விபத்துள்ளாக வாய்ப்புகள் எழலாம்! 2003 பிப்ரவரி முதல் தேதி விண்கப்பலின் மீட்சியின் போது, முதலில் இடது இறக்கையில் இருந்த ‘உஷ்ண உளவிகள் ‘ [Temperature Sensors] பழுதாகி, உஷ்ண அளவுகள் குறிப்பயண ஆட்சி மையத்துக்கு [Mission Control Centre] அனுப்பப் படாது சமிக்கை அறிவிப்புகள் தடைப்பட்டன! கொலம்பியா கனாவரல் முனை ஏவுதளத்தில் 2003 ஜனவரி 16 ஆம் தேதி ராக்கெட்டுகள் எறியத் துவங்கி, விண்கப்பல் செங்குத்தாக ஏறும் போது, எரிபொருள் புறக்கலனிலிருந்து விலகிக் கீழே விழுந்த ஓர் நுரைக் கவசம் [Foam Insulation] இடது இறக்கை மீது பட்டது! ஆனால் நாஸா பயண ஆணையாளர்கள் நுரைக் கவசத்தால் ஏற்பட்ட இறக்கை உடைசல், விண்கப்பல் சிதைவுக்குக் காரணமாக இருக்கவே முடியாது என்று உறுதியாக அறிவித்தனர்!


கொலம்பியாவின் 70% உடம்பில் சுமார் 27,000 செராமிக் வெப்பக் கவச ஓடுகள் [Ceramic Heat Shield Tiles] மனிதக் கரங்களால் ஒட்டப் பட்டுள்ளன! அவைதான் விண்கப்பல் மீட்சியின் போது [During Re-entry] பூமண்டலக் காற்று உராய்வில், கனல் பற்றி எறியும் வெப்பத்தைத் தாங்கி, விண்கப்பலைப் பாதுகாக்கின்றன! கவச ஓடுகள் யாவும் சிலிகா நார்களால் [Silica Fibres] ஆக்கப் பட்டு, செராமிக் பிசினால் [Glue] பிணைக்கப் பட்டவை. கீழே விண்கப்பல் வயிற்றுப் பகுதியில் மட்டும் 20,000 கவச ஓடுகள் [அளவு: 6 'x6 ', தடிமன்: 0.5 '-3.5 '] கைகளால் ஒட்டப் பட்டுள்ளன! விண்கப்பலின் மேலுடம்பு முதுகுப் பகுதியில் 7000 கவச ஓடுகள் மூடியுள்ளன. கவச ஓடுகள் யாவும் மிக நலிந்த பளுவைக் கொண்டவை! அவை வெப்பக் கனலை வெகு விரைவில் எதிரொளித்து அகற்றுபவை! 1260 C உஷ்ணத்தில் உள்ள கவச ஓடைத் தணல் அடுப்பிலிருந்து வெளியே எடுத்துக் கையில் தொட்டாலும் காயம் எதுவும் ஏற்படாது! விண்கப்பல் மூக்கிலும், இறக்கைகளின் பறப்பு முனைகளிலும் கவச ஓடுகள் கிடையா! அவற்றுக்குப் பதிலாக, உறுதி செய்யப்பட்ட கரிக்கட்டிகளால் [Reinforced Carbon] அவை மூடப்பட்டுள்ளன.



வெப்பம் மிகையாகத் தாக்கப் படும் பாகங்கள் மட்டும் தடித்த கவச ஓடுகளால் மூடப்படும்! விண்கப்பல் பயணத்தின் போது ஏற்படும் அதிர்வு, வெப்பம், குளிர்ச்சி ஆகிய வேறுபாடுகளால் சில கவச ஓடுகள் கழன்று விழுவதும் உண்டு! அவ்விதம் இடது இறக்கையின் கீழிருந்த சில கவச ஓடுகள் விலகி விழுந்து, வெப்பம் சூடேறியதால் உஷ்ண உளவிகள் பழுதடைந் திருக்கலாம்! கவச ஓடுகள் அற்றுப் போன இடங்கள் தீயால் எரிந்து போய், முதலில் இடப்பாகங்கள் உடைந்து, விண்கப்பலின் நேர்முகச் சீர்நிலைப்பாடு தடுமாறிக் கப்பல் பறப்புக் கட்டுப்பாடு முறிந்திருக்கலாம் என்று ஒரு கருத்து உலவி வருகிறது! அல்லது அண்டவெளிக் கற்கள், குப்பைகள் இடது இறக்கையைத் தாக்கி உடைத்திருக்கலாம்! வாயு சீரோட்டப் பறப்புக் கட்டுப்பாடு [Aerodynamic Flight Control] முறியவே, கப்பல் ஆட்டி அசைக்கப் பட்டு, கப்பலின் பல உறுப்புகள் உடைந்து சிதறிப் போகக் காரண மாயிருக்கலாம்!

இறுதியில் மிஞ்சிய விண்கப்பலும் வெடித்து முழுவதுமே சின்னா பின்னமாய்ப் போனது! பல இடங்களில், பல மாநிலங்களில் சிதறிய, கப்பலின் பாகங்களைச் சேர்த்து வைத்துக் கொலம்பியா விபத்தின் காரணத்தை உளவறிய, ஆய்வாளர் களுக்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம்!


விண்வெளி மீள்கப்பலில் பயணம் செய்த தீர விமானிகள்

கொலம்பியா விண்கப்பல் ஆளுநர் ரிக் ஹஸ்பென்ட் அமெரிக்க விமானப்படை கெர்னல் [Air Force Colonel]. இருமுறை விண்கப்பலில் பயணம் செய்து அனுபவம் பெற்றவர். 1999 இல் அகில நாட்டு விண்ணிலைத்தின் [International Space Station] துணை விமானியாகப் பணியாற்றி முதன் முதல் சுற்று வீதியில் நகரும் விண்சிமிழுடன் இணைப்பு செய்து [Docking with Orbiting Outpost] காட்டியவர்! அவரது அண்டவெளிக் குழுவினர் ஆறு ஆண்டுகளுக்குப் பின் முதன் முதலாக 16 நாட்கள் நீண்ட விஞ்ஞானச் சோதனைகளை வெற்றிகரமாக முடித்தனர்! திருமண மாகி மனைவியும், இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
வில்லியம் மெக்கூல் கொலம்பியாவின் அடுத்த விமானி. அமெரிக்கக் கடற்படை ஆளுநர், மற்றும் கடற் படையின் ஒரு விமானி [U.S. Navy Aviator]. திருமண மானவர். அவருக்கு மனைவியும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
Husband, Ramon, McCool


இரண்டு பெண் விமானிகளில் ஒருவரான, லாரல் கிளார்க் அமெரிக்க கடற்படை ஆளுநர், மற்றும் கீழ்க்கடல் மருத்துவ டாக்டர் [U.S. Navy Undersea Medical Officer], கடற்படை விமான அறுவை நிபுணர் [Flight Surgeon]. கணவரும் ஓய்வெடுத்த கடற்படை விமான அறுவை நிபுணர் டாக்டர், நாஸாவில் பதவி வகிப்பவர். லாரலுக்கு கொலம்பியா அனுபவம் முதல் பயணம்! மேலும் முடிவாகப் போன இறுதிப் பயணம்! அவர்களுக்கு ஒரு புதல்வன் உண்டு!

கொலம்பியா பளுதாங்கி நிர்வாகி [Payload Commander], மைக்கேல் ஆன்டர்ஸன் அமெரிக்க விமானப்படை லெஃப்டினென்ட் கெர்னல். 80 விண்வெளி விஞ்ஞானச் சோதனைகள் நடத்த எல்லா வித ஏற்பாடுகளும் செய்ய வேண்டியது அவரது பணி.
விண்வெளிச் சிறப்புநர் டேவிட் பிரெளன் ஓர் அமெரிக்கக் கடற்படை விமான அறுவை மருத்துவர். கொலம்பியா அவரது முதல் பயணம்.
Brown & Anderson


இலான் ராமோன் இஸ்ரேலிலிருந்து வந்து கொலம்பியாவில் பங்கெடுத்த முதல் விண்வெளி விமானி. இஸ்ரேல் விமனப்படை கெர்னல். அவருக்கு மனைவி, மூன்று புதல்வர், ஒரு புதல்வி உள்ளனர்.

பாரதத்தில் பிறந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை
நாற்பத்தி ஒன்று வயதான கல்பனா சாவ்லா ஓர் பறப்பியல் எஞ்சினியர் [Flight Engineer]. பாரதத்தில் பிறந்து, அமெரிக்கக் குடிமகள் ஆன கல்பனா நாஸா விண்வெளி விமானியாகி, அண்டவெளித் தேடலில் உயிரைத் தியாகம் செய்தவர்! முதல் இந்திய விண்வெளி விமானி ராகேஷ் ஷர்மா [Rakesh Sharma] ரஷ்ய விண்சிமிழில் பயணம் செய்த பின், முதல் பெண் விண்வெளி விமானி என்று பெயர் பெற்றவர், கல்பனா! இரண்டாவது இந்திய விண்வெளி விமானி எனினும், அமெரிக்க விண்கப்பலில் இரண்டு முறை அண்டவெளியைச் சுற்றி வந்த முதல் விண்வெளித் தீர நங்கை என்று புகழடைந்தவர்!
Dr. Clark


‘முதன் முதல் இந்தியத் தபால் பயண விமானத்தை செலுத்திய ஜே.ஆர்.டி. டாடா [J.R.D. Tata] அவர்களே என்னைக் கவர்ந்தவர். நான் பறப்பியலைப் பின்பற்ற அவரே காரண கர்த்தா ‘ என்று கல்பனா சாவ்லா  ஒரு முறைக் கூறியுள்ளார். கல்பனா இந்திய தேசத்தின் விண்வெளி வீராங்கனை! டில்லிக்கு வடக்கே 75 மைல் தூரத்தில் உள்ள கர்நல் [Karnal] என்னும் ஊரில் 1962 இல் கல்பனா பிறந்தார். தாகூர் பல் நிகேதன் பள்ளியில் [Tagore Bal Niketan School] கல்பனா கல்வி பயின்றார். கல்பனா சிறு வயதில் சைக்கிள் போட்டியில் சகோதரனுக்கு இணையாக ஓட்டிக் காட்டியவர்! இருவரும் வெகு தூரம் சைக்கிளில் போய் முடிவில் ஓர் விமானப் பயிற்சிக் கூடத்தின் அருகே வந்து நிற்பார்கள்! விமானங்கள் ஏறுவதையும் இறங்குவதையும் பல தடவை வேடிக்கை பார்த்துப் பிறகு அந்த வேட்கையே கல்பனாவை விமானத்துறைப் பொறியியல் பயிலத் தூண்டி விட்டதாக, அவர் ஒரு சமயம் கூறி யிருக்கிறார்! உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே, தானொரு விண்வெளி எஞ்சினியராக [Aerospace Engineer] வேண்டும் என்ற மன உறுதியில் இருந்தார்!

Kalpana Chawla


1982 இல் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் விமானவியல் எஞ்சினியரிங் படித்த ஆடவர் மத்தியில் பயின்ற ஒரே ஒரு பெண் மாணவராய், B.Sc. [Aeronautical Engineering] பட்டத்தைப் பெற்றார். அதற்குப் பிறகு அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து டெக்ஸஸ் பல்கலைக் கழகத்தில் [University of Texas] சேர்ந்து, 1984 ஆம் ஆண்டு M.Sc. [Aerospace Engineering] பட்டத்தைப் பெற்றார். அப்போது அமெரிக்கக் குடியினர் [U.S. Citizen] தகுதியும் கல்பனாவுக்குக் கிடைத்தது. பிறகு 1988 இல் கொலொராடோ பல்கலைக் கழகத்தில் [University of Colorado] மேற்படிப்பைத் தொடர்ந்து, தனது 26 ஆம் வயதில் ஆர்வமோடு படித்து Ph.D. [Aerospace Engineering] பட்டத்தையும் அடைந்தார்! கல்பனா ஓர் அமெரிக்கரைத் திருமணம் செய்து கொண்டார்! அவரது கணவர் ஜீன் பியர் ஹாரிஸன் [Jean-Pierre Harrison] ஒரு விமானப் பயிற்சியாளர் [Flying Instructor].

Kalpana Chawla Remembered


முதலில் காலிஃபோர்னியாவில் உள்ள நாஸாவின் அமெஸ் ஆய்வு மையத்தில் [Ames Research Center, Moffit Field] காற்றடிப்பில் ‘உயர் வினைபுரியும் விமானம் ‘ [Air Flows around High Performance Aircraft] எப்படி இயங்கும் என்று சோதனைகள் செய்தார். 1994 டிசம்பரில் நாஸாவின் விண்வெளி மீள்கப்பல் குறிப்பணிப் [Space Shuttle Mission] பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்பயிற்சிக்குப் பின் கல்பனா விண்வெளிக் கப்பல் பயணங்களில் சிறப்பநராகப் [Mission Specialist] பணி புரிய வேண்டும். 1997 இல் திட்ட மிட்ட அவரது முதல் கொலம்பியா விண்வெளிக் குறிப்பணி STS-87 [Space Mission STS-87]. STS-87 குறிப்பணி நாஸா நான்காவது முறை செய்யும், நுண்ணீர்ப்பியல் பளுதூக்கிப் பயணம் [Microgravity Payload Flight]. அப்பணியில் கல்பனா ‘சுய நகர்ச்சிக் கரம் ‘ இயக்குநராக [Robotic Arm Operator] வேலை செய்து, 376 மணி நேரங்கள் [சுமார் 15 நாட்கள்] அண்டவெளி அனுபவம் பெற்றுள்ளார். முதல் பயணத்தில், விஞ்ஞானத் துணைக்கோள் [Science Satellite] ஒன்று கட்டு மீறிக் கடந்து செல்லக் கைத்தவறு செய்ததால், கல்பனா பழிக்கப் பட்டார். உடனே அருகில் இருந்த மற்ற விமானிகள் அண்டவெளி நீச்சல் அடித்து [Space Walk], விலகிச் செல்லும் துணைக் கோளைக் கைப்பற்றினார்!



1997 முதல் கொலம்பியா பயணம் முடிந்த பின்பு, கல்பனா இமய மலைத் தொடர்களைக் கீழே பார்த்ததாகவும், கங்கை நதி கம்பீரமாகப் போவதைக் கண்டு களிப்படைந்த தாகவும் ஓர் இந்தியச் செய்தி நிருபரிடம் கூறினார்! ஆஃப்ரிக்கா பாலைவன மாகத் தோன்றுவதாகவும், அதில் நைல் நதி ஓர் நரம்பு போல் தெரிவதாகவும் நிருபரிடம் சொல்லி யிருக்கிறார்!

2003 ஜனவரி 16 ஆம் தேதி அவரது இறுதிப் பயணம் கனாவரல் முனை ஏவுதளத்தில் தயாராக இருந்த கொலம்பியா விண்வெளிக் கப்பலில் துவங்கியது! விபத்துக் குள்ளான கொலம்பியாவின் 28 ஆவது முடிவுக் குறிப்பணி STS-107 [Space Mission STS-107]! அதன் விமான ஆளுநர் ரிக் ஹஸ்பன்ட் [Commander Rick Husband] குழுவினருள் ஒரு குறிப்பணி சிறப்புநராகப் [Mission Specialist] பணி புரிந்தார்!
கொலம்பியா பயணத்தில் கல்பனா புரிய வேண்டிய பணிகள்
1. விண்கப்பலின் ‘பளுதாங்கி முற்றத்தில் ‘ [Payload Bay] பலவித அண்டவெளிச் சோதனைகள் புரியச் சாதனங்களை அமைக்க வேண்டியது.
2. விண்வெளியில் நுண் ஜீவிகள் வளர்ச்சிச் சோதனை [Astroculture (Bacteria)]
3. முற்போக்கு புரோடான் படிகச் சாதன ஆய்வு [Advanced Protein Crystal Facility]
4. வாணிபப் புரோடான் வளர்ச்சிச் சோதனை [Commercial Protein Growth]
5. உயிர்ப் பொறியியல் காட்சி முறை ஏற்பாடு [Biotechnology Demonstration System]
6. எட்டு உயிர்த்தொகுப்புச் சோதனைகள் [Biopack ESA, Eight Experiments]
Kalpana Chawla with the Group


7. சீர் போக்குப் புகைத் தணல் அடுப்புச் சோதனை [Combustion Module with Laminar Soot Processes]

8. ஆவிநீர் தீ அணைப்பு ஆராய்ச்சி [Water Mist Fire Suppression]
9. கீழ் லூயிஸ் எண்ணில் தீக்கோள அமைப்புச் சோதனைகள் [Structures of Flame Balls Experiments at Low Lewis-number]
10. தானியம் ஒத்த பண்டங்களின் யந்திரவியல் [Mechanics of Granular Materials]
11. விண்வெளியில் அழுத்த வாயுவின் ரசாயன வடியல் முறைச் சோதனைகள் [Vapour Compression Distillation Flight Experiments]
12. ஸியோலைட் படிக வளர்ச்சி உலை ஆய்வு [Zeolite Crystal Growth Furnace]
Kalpana in Spacehab


விண்வெளி மீள்கப்பல்களின் பிரச்சனைகள், எதிர்காலப் பயணங்கள்

1960-1972 ஆண்டுகளில் நாஸா வெற்றிகரமாக சந்திர மண்டலப் பயணங்களை நிகழ்த்திய அபொல்லோ திட்டங்கள் யாவும் ஓய்ந்த பின்பு, இரண்டாவது கட்ட விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] திட்டம் 1977 இல் உருவாகி 1981 ஆம் ஆண்டிலிருந்து பறப்பியல் படலம் ஆரம்பமானது!
விண்வெளி மீள்கப்பல் திட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே டிசைன் தவறுகள், நிதிச் செலவு மீறல் [Cost Overruns], தயாரிப்புத் தாமதங்கள், கள்ளத்தனம் [Fraud], நிர்வாகக் கோளாறுகள், இப்படி பல இடையூறுகள் ஏற்பட்டு, முதல் பயிற்சிப் பயணம் தொடங்கவே சுமார் பத்தாண்டுகள் ஓடிவிட்டன! ஒவ்வொரு விண்வெளி மீள்கப்பல் பயணத்துக்கும் [ஏவுதல், பறப்புக் கண்காணிப்பு, இறங்குதல்] சுமார் 250 மில்லியன் டாலர் செலவாகும் என்று அறியப்படுகிறது! ஐந்து விண்வெளிக் கப்பல்கள் உள்ள போது, ஆண்டுக்கு 60 அண்டவெளிப் பறப்புகளைத் நாஸா முதலில் திட்டமிட்டி ருந்தது! ஆனால் சராசரியாக நடந்தது, ஆண்டுக்கு 5 அல்லது 6 பயணங்களே! எஞ்சிய மூன்று விண்கப்பலில் இனிப் பயணங்கள் தொடருமாகில், அவற்றுக்கு ஒப்பியவாறு குறைந்து ஆண்டுக்கு 2 அல்லது 3 ஆகச் சிறுத்து விடலாம்!

Kalpana Chawla Bidding Farewell


1986 இல் ஏற்பட்ட சாலஞ்சர் விபத்தின் காரணத்தை உளவு செய்த போது, நாஸா அமெரிக்கக் காங்கிரஸிடம் மறைத்த, திரித்துக் கூறிய பல செய்திகள் தெரிய வந்தன! விண்கப்பல் பயணத்தின் மெய்யான செலவு கணக்குகள், திட்டங்களின் நிகழ்ச்சி நிரல்கள், தீவிரத் தகவல்கள் ஆகியவை மறைக்கப் பட்டிருப்பதுடன், பல பில்லியன் டாலர் விரயமாகி யிருப்பதும், நூற்றுக் கணக்கான விதி மீறல்கள் [Federal Code Violations] விண்கப்பல் அமைப்பாடில் விளைந்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டன!

சென்ற 16 ஆண்டுகள் [1986-2002] விண்கப்பல்களின் குறிப்பணிகள் சிறப்பாகவும், பொறுப்பாகவும் பலமுறை நிறைவேறி யுள்ளதை மெச்சத்தான் வேண்டும்! புதிய ஆய்வுத் துணைக்கோள் ஏவுதல், செயலற்ற துணைக் கோள்களைக் கைப்பற்றல், விண்வெளி நிலையங்களைச் செப்பமிடல், ஹப்பிள் தொலைநோக்கி ஏவியது, பலமுறைப் புதுப்பித்தது, செப்பமிட்டது, வியாழன், வெள்ளி, சூரியன் போன்ற அண்டக் கோள்களுக்கு விண்ணாய்வுச் சிமிழ்களை அனுப்பியது யாவும் விண்வெளி வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய நிகழ்ச்சிகளாகும்! அண்டவெளியில் உருவாகி, மூன்று விமானிகளோடு பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்ணிலையத்துடன் தொடர்பு கொள்ளவும், அடுத்து இனி முடிக்க வேண்டிய பல விண்பணிகளைத் துவங்கவும் விண்கப்பல் பயணங்களை மீண்டும் ஆரம்பிக்கத்தான் வேண்டும்! விண்கப்பல் குறிப்பணிகளில் பல தளங்களில் வேலை செய்து வரும் 12,000 அமெரிக்க நபர்களின் வேலைகளைப் பாதுகாப்புக் காகவும், மிஞ்சிய மூன்று விண்கப்பல்கள் மீண்டும் உயிர்த்து எழுந்து பறக்கத்தான் வேண்டும்!


கொலம்பியா இழப்பு போன்று 1986 இல் கென்னடி விண்வெளி மையத்தில் ஏவிய போது வெடித்த சாலஞ்சர் விண்கப்பல் ஏற்கனவே, ஏழு உயிர்களையும், 25 பில்லியன் டாலரையும் விழுங்கி யிருக்கிறது! 100 குறிப்பணிப் பயணங்களுக்கு டிசைன் செய்யப் பட்ட கொலம்பியா, 28 ஆவது பயணத்தை முடிக்காமலே, மூச்சு நின்று போனது, உலக விஞ்ஞானிகளுக்கும், எஞ்சினியர்களுக்கும் பெரு வியப்பை மூட்டுகிறது! 2003 இல் நிகழ்ந்த கொலம்பியா விண்கப்பல் சிதைவில் ஏழு மாந்தர் உயிரிழந்ததுடன், 100 விண்வெளிச் சோதனை விளைவுகள் மாய்ந்துபோய், 25 பில்லியன் டாலர் தயாரிப்புத் தொகையும் மறைந்து போனது! எல்லா இழப்புகளையும் விட, இறந்து போன ஏழு உன்னத மனித உயிர்களுக்கு ஈடான தொகை எத்தனை, எத்தனை பில்லியன் டாலர் என்பது கற்பனையில் கூட கணிக்க முடியாத அளவுத் தொகையாகும்!

Kalpana Chawla -1

கணித மேதை ராமானுஜன்

கணித மேதை ராமானுஜன்

cover-image-ramanujan.jpg

கணித மேதை ராமானுஜன்
(1887-1920)

“ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 !  பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.”
பிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி


சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.

1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது.  அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார்.  பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே.  உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன்! அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்!
fig-3-ramanujans-home
ராமானுஜன் தமிழ் நாட்டில் 1887 டிசம்பர் 22 நாள் ஒர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தார். பிறந்த ஊர் ஈரோடு. படித்ததும், வளர்ந்ததும் கும்பகோணத்திலே. தந்தையார் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதுபவர். கலைமகள் கணித ஞானத்தை அருளியது, ராமானுஜன் சிறுவனாக இருந்த போதே தென்பட்டது. அபூர்வமான தெய்வீக அருள் பெற்ற “ஞானச் சிறுவன்” [Child Prodigy] ராமானுஜன். அவரது அபாரக் கணிதத் திறனைச் சிறு வயதிலேயே பலர் கண்டு வியப்படைந்தார்கள். ஏழு வயதிலே உதவிநிதி பெற்று, ராமானுஜன் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார்! அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம்! “பை” இன் மதிப்பை [3.14] பல தசமத்தில் மாணவர்களிடம் பள்ளியில் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார் அந்த இளமை வயதிலே, ராமானுஜன்.
பன்னிரண்டாம் வயதில் “லோனியின் மட்டத் திரிகோணவியல்” கணித நூலில் [Loney's Plane Trigonometry] கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராமானுஜன் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணியின் தொகுப்பு, அதன் பெருக்கம் [Sum & Products of Infinite Sequences] பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு ஒன்று [Formula], உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம். அத்தொடரோடு வேறோர் எண்ணைக் கூட்டியோ, பெருக்கியோ, முடிவற்ற சீரணியை முடிவுள்ள சீரணியாக மாற்றி விடலாம்.
பதினைந்தாம் வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித வல்லுநர், கார் [G.S.Carr] தொகுத்த “தூய கணித அடிப்படை விளைவுகளின் சுருக்கம்” [Synopsis of Elementary Results in Pure Mathematics] என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 கணித மெய்ப்பாடுகளை [Theorems] ஆழ்ந்து கற்றுக் கொண்டார்.  இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்டது.  அவைகளே அவரது பிற்கால அபாரக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்தன.
fig-2-ramanujan-notes
1903 ஆம் ஆண்டில் பதினாறு வயதில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ராமானுஜன் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது முழு மனதும் கணிதம் ஒன்றிலே ஆழ்ந்து விட்டதால், மற்ற பாடங்களில் கவனம் செல்லாது, அவர் கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றார். இதே ஒழுங்கில் படித்து, நான்கு வருடங்கள் கழித்துச் சேர்ந்த சென்னைக் கல்லூரியிலும் முடிவில் தோல்வியடைந்தார். 1909 இல் ராமானுஜன் திருமணம் செய்த கொண்டபின், தற்காலியமாய்த் தன் கணிதப் பித்தை ஒதுக்கி வைத்தி விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்னையில் ஒரு வேலையைத் தேடினார்.
கணிதத்தை ஆதரிக்கும் செல்வந்தர் ஆர்.. ராமச்சந்திர ராவ், அனுதாப முடைய கணித வல்லுநர் பலரது உறுதியான சிபாரிசின் பேரில், 1910 இல் ராமானுஜத்துக்கு கணிதத் துறையில் பணிபுரிய, ஓரளவுத் தொகையை உபகாரச் சம்பளமாக மாதா மாதம் அளிக்க முன்வந்தார். 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் [Journal of the Indian Mathematical Society] வெளிவந்தன.
மேலும் தனியாக வேலை செய்ய விரும்பி 1912 இல், ராமானுஜம் சென்னைத் துறைமுக நிறுனத்தில் எழுத்தராக [Madras Port Trust Clerk] அமைந்தார். நிறுவனத்தின் மேலதிபர் பிரிட்டீஷ் எஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங். அதை மேற்பார்க்கும் மானேஜர், இந்திய கணிதக் குழுவை [Indian Mathematical Society] நிர்மாணித்த பிரபல வி. ராமசுவாமி ஐயர். இருவரும் ராமானுஜத்தின் கணித ஞானத்தைப் பாராட்டி, அவரது கணிதப் படைப்புக்களை, இங்கிலாந்தில் மூன்று முக்கிய பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பித் தொடர்பு கொள்ள ஊக்கம் அளித்தார்கள்.  அவர்களில் இருவர் பதில் போடவில்லை. ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார்!  அவர்தான், அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கணித நிபுணர், G.H. ஹார்டி.
fig-1-men-behind-ramanujan
ராமானுஜத்தின் கத்தையான கடிதம் ஹார்டியின் கையில் கிடைத்த 1913 ஜனவரி 16 ஆம் தேதி, ஒரு முக்கிய தினம்!  அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள்! முதலில் மேலாகப் பார்த்து விட்டு, ஏதோ ஒரு பைத்தியம் எழுதியதாக எண்ணிக் கடிதக் கட்டை ஒதுக்கி வைத்தார் ஹார்டி. டின்னருக்குப் பிறகு இரவில் பொறுமையாக அவரும், அவரது நெருங்கிய கணித ஞானி, ஜான் லிட்டில்வுட்டும் [John E. Littlewood],  புதிர்களைப் போல் காணும் ராமானுஜத்தின் நூதனமான 120 கணித இணைப்பாடுகளையும், [Formulae] கணித மெய்ப்பாடுகளையும் [Theorems] மெதுவாகப் புரட்டிப் பார்த்துப் பொறுமையாக ஆழ்ந்து படித்தார்கள்.  சில மணி நேரம் கழித்து, பிரமித்துப் போன இருவரும் ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தனர். நிச்சயம் அவர்கள் காண்பது ஒரு மகா மேதையின் உன்னதக் கணிதப் படைப்புகள்.  ஒரு பைத்தியகாரனின் முறை கெட்ட கிறுக்கல் அல்ல அவை என்று வியப்படைந்தார்கள்!
ஹார்டி உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் [University of Madras], இங்கிலாந்து கேம்பிரிட்ஜ், டிரினிடிக் கல்லூரியும் அவருக்கு உதவிநிதி கொடுக்க முன்வந்தன. 1914 ம் ஆண்டு மார்ச் மாதம், தாயின் பலத்த எதிர்ப்பைத் தள்ளியும், தன் கொள்கையை விட்டுக் கொடுத்தும், ராமானுஜன் இங்கிலாந்துக்குப் புறப்படக் கப்பலேறினார்.
fig-a-ramanujan-award
அடுத்த ஐந்து ஆண்டுகள் ஹார்டியும், ராமானுஜமும் டிரினிடிக் கல்லூரியில் [Trinity College] ஒன்றாகக் கணிதத் துறை ஆக்கப் பணியில் ஈடுபட்டார்கள். ஹார்டியின் சீரிய பொறி நுணுக்கமும், ராமானுஜத்தின் நூதன கணித ஞானமும் இணையாகப் பொருந்தி, ஒப்பற்ற உடன்பாடு நிலவி, கணித மெய்ப்பாடுகள் பல உருவாகின. இருவரும் கணிதச் சீர்ப்பாடுகள் [Arithmatic Functions] பலவற்றை ஆங்கில, ஈரோப்பிய விஞ்ஞானப் பதிவுகளில் வெளியிட்டார்கள். அவற்றில் ரெய்மன் சீரினம் [Riemann Series], நீள்வட்ட முழு இலக்கங்கள் [Elliptical Integrals], உயர் ஜியாமெட்ரிச் சீரினம் [Hyper Geometric Series], ஜீட்டா சீர்ப்பாடுகளின் இயக்கச் சமன்பாடுகள் [Fuctional Equations of Zeta Functions],  ராமானுஜன் தனியாக ஆக்கிய விரியும் சீரினங்கள் [Divergent Series] ஆகியவை கணிதத் துறையில் குறிப்பிடத் தக்கவை. அவை பின்வரும் வினாக்களுக்குப் பதில் அளிக்க அடிப்படைத் தளமாய் அமைந்தன. எடுத்துக் கொண்ட ஓர் இலக்கம், எத்தனை “பிரதம வகுப்பினம்” [Prime Divisors] கொள்ளலாம் ? எத்தனை முறைகளில் ஓர் எண்ணை, அதற்கும் சிறிய “நேரியல் முழு இலக்கங்கள்” [Positive Integers] பலவற்றின் தொகையாகக் குறிப்பிடலாம் ?
தெய்வீக ஞானசக்தி மூலம் தான் கணித்த மெய்ப்பாடுகள் எதிர்காலத்தில் மின்கணணிகளுக்குப் [Computers] பயன்படப் போகின்றன என்று ராமானுஜன் எதிர்பார்த்திருக்க மாட்டார்! சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை! ராமானுஜத்தின் கணிதத் தீர்வு முறை மற்றவர் ஆக்கிய முறைகளைப் போல் விரியாமல், அதி விரைவில் குவிந்து, பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாய்த் தருகிறது!
ராமானுஜத்தின் படைப்புகள் யாவும் அவரது “குறிப்பு நூலில்” [Notebooks] அடங்கி யுள்ளன. பல மெய்ப்பாடுகள் வழக்கமான நிரூபணம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளன. மற்றும் அவரது குறிப்பு நூலில் “முழுமைப்பாடுகள்” [Integrals], முடிவில்லாச் சீரினங்கள் [Infinite Series], தொடர்ப் பின்னங்கள் [Continued Fractions] போன்றவை விளக்கப் படுகின்றன. கணிதத் துறையினர் இன்னும் அவரது கணித மேன்மையின் முழுத் தகுதியையும் அறிய வில்லை! அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் [University of Illinois] கணித வல்லுநர், புரூஸ் பெர்ன்ட் [Bruce C. Berndt] ராமானுஜத்தின் கணிதக் குறிப்பு நூலைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார். அதற்குப் பிறகுதான், ராமானுஜத்தின் நூதனக் கணிதப் பணிகள் யாவும் கணிதத் துறையினர் கையாளப் பயன்படும்.
fig-b-ramanujan-award-for-sujatha-ramdorai
பின்னால் ஒரு முறை ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் ஒப்பிட்டு ஹார்டி கூறியது; ராமானுஜத்தின் திறனுக்குத் தகுதி மதிப்பு 100 அளித்தால், லிட்டில்வுட்டுக்கு 30, தனக்கு 25 மட்டுமே! அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80! ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை! “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி! ராமானுஜத்தின் கணிதப் படைப்புகள் யாவும் மெய்யானவை என்றும், அவரது கணித மெய்ப்பாடுகள் தன்னைப் பிரமிக்க வைத்து முற்றிலும் வென்று விட்டதாகவும், ஹார்டி கருதுகிறார். அவை யாவும் பொய்யானவையாக இருந்தால், ஒரு மேதை தன் கற்பனையில் அவற்றை உருவாக்கி யிருக்க முடியாது, என்றும் கூறுகிறார்!
1917 ஆம் ஆண்டில் ராமானுஜன் லண்டன் F.R.S. [Fellow of Royal Society] விருதையும், டிரினிடி கல்லூரியின்  ஃபெல்லோஷிப் [Fellow of Trinity College] விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும்பெரும் இந்த இரண்டு கௌரவப் பட்டங்களை முதன்முதலில் முப்பது வயதில் பெற்ற இந்தியன் ராமானுஜன் ஒருவரே!  ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது! வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது!  முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது!  அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை! அடிக்கடி சானடோரியத்துக்கு [Sanatorium] ராமானுஜன் போக வேண்டிய தாயிற்று.  அப்படிப் போய்க் கொண்டிருந்தாலும், அவரது புதியக் கணிதப் படைப்புகள் பேரளவில் பெருகிக் கொண்டுதான் இருந்தன!
sujatha-ramadorai-at-tifr5
1919 ஆம் ஆண்டில் போர் நின்று அமைதி நிலவிய போது, நோய் முற்றி இங்கிலாந்தில் வாழ முடியாது, ராமானுஜன் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் காசநோயைக் குணப்படுத்தச் சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை! நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை! தனது 32 ம் வயதில், இந்தியக் “கணிதச் சுடர்விழி” [Maths Icon] ராமானுஜன், 1920 ஏப்ரல் 26 ம் நாள் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்கு ஏகினார்.  உயிர் நழுவிச் செல்லும் கடைசி வேளை வரை அவர் கணிதத் துறைக்குப் புத்துயிர் அளித்ததை, இன்றும் அவரது இறுதிக் குறிப்பு நூல்கள் காட்டுகின்றன.
ஆயுள் முழுவதையும் கணிதப் பணிக்கு அர்ப்பணம் செய்து, வாலிப வயதிலே மறைந்த, ராமானுஜத்தின் அரிய சாதனைகளுக்கு ஈடும், இணையும் இல்லை என்று, அவர் பிறந்த தமிழகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்! கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம்! ராமானுஜன் கற்றது கடுகளவு! கணித்தது கால் பந்தளவு! என்று சொன்னால், அப்புகழ்ச்சி சற்றும் அவருக்கு மிகையாகாது!

ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்

“படைப்புக்கு வேண்டியது ஆக்கும் உள்ளெழுச்சி ஒரு சதவீதம்.  வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம்.”
தாமஸ் ஆல்வா எடிசன்
“அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்.”
தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]

படிக்காத மேதை ! பட்டம் பெறாத மேதை !
‘எப்படி நூற்றுக் கணக்கான புது யந்திரச் சாதனங்களைக் கண்டு பிடித்தீர்கள் ‘ என்று ஒருவர் கேட்டதும், ‘படைப்புக்கு வேண்டியது, ஆக்கும் உள்ளெழுச்சி 1 சதவீதம், வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம் [1% Inspiration & 99% Pespiration] ‘ என்று தாமஸ் ஆல்வா எடிசன் பதில் அளித்தாராம். எடிசன் தனியாகவோ, இணைந்தோ படைத்த அரும்பெரும் சாதனங்கள், ஆயிரத்துக்கும் மேலானவை! நவீன மின்சார யந்திர யுகத்தை அமெரிக்காவில் உருவாக்கியவர், எடிசன்! உலகின் முதல் தொழிற்துறை ஆய்வுக் கூடத்தை [Industrial Research Centre] அமெரிக்காவில் தோற்றுவித்தவர், எடிசன்! 18-19 நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மின்சக்தி யந்திர யுகம் தோன்ற அடிகோலியவர்களுள் முக்கியமானவர், எடிசன்! அவரது உயர்ந்த படைப்புகள்: முதல் மின்சாரக் குமிழி [Electric Bulb], மின்சார ஜனனி & மோட்டார் [Electric Generator & Motor], மின்சார இருப்புப் பாதை, [Electric Railroad], மின்சக்தி வர்த்தகத் துறை, தொலைபேசி வாய்க்கருவி [Telephone Speaker], ஒலிபெருக்கி [Microphone], கிராமஃபோன் [Phonograph], மூவிக் காமிரா [Movie Camera] போன்றவை. முதலில் மின் விளக்கை உருவாக்கிடும் போது, எடிசனுக்கு அதற்கு அடிப்படையான ‘ஓம்ஸ் நியதி ‘ [Ohm 's Law] பற்றி எதுவும் தெரியாது! எடிசன் ஒழுங்கான பள்ளிப் படிப்போ, உயர்ந்த பட்டப் படிப்போ எதுவும் அற்றவர்! கடின உழைப்பாலும், ஞான நுட்பத்தாலும் பலவிதச் சாதனங்களைப் படைத்து ஏழ்மையிலிருந்து செல்வந்தரான ஒரு மேதை, எடிசன்! அவர் படிக்காத மேதை! அவர் கற்றது கடுகளவு! கண்டு பிடித்தது கால் பந்தளவு!
Edison -4
‘நான் ஒரு கணிதத் துறை அறிவு இல்லாதவன். ஆனால் கலைத்துவத் துறையில் சோதிக்கப் பட்டால், முதல் பத்து சதவீதத் தகுதியில் நான் உயர்வு பெற முடியும். கணித வல்லுநர்களை நான் வேலை செய்ய வைத்துக் கொள்ளலாம். ஆனால் என்னை யாரும் வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் ‘ என்று ஒருமுறை எடிசன் வேடிக்கையாகக் கூறி யிருக்கிறார். ‘நான் ஒரு விஞ்ஞானி அல்லன்! டாலர் வெள்ளி நாணயம் சம்பாதிக்க உழைக்கும் ஒரு வாணிபப் படைப்பாளி ‘ என்று தன்னைப் பற்றி அடுத்து ஒரு சமயம் சொல்லி யிருக்கிறார்!
மந்த புத்தியோடு, செவிடான சிறுவன்
தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசன் எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். தந்தையார் சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புக்குக் காரணமாகவும் இருந்தது! தாத்தா ஜான் எடிசன், 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரில் [War of Independence] பிரிட்டாஷ் பக்கம் சேர்ந்து, நாட்டை விட்டோடிக் கனடாவில் உள்ள நோவாஸ் கோசியாவில் [Nova Scotia] சரண் புகுந்தார். பிறகு மேற்திசை நோக்கிச் சென்று, கனடாவின் அண்டரியோ மாநிலத்தில் ஈரி ஏரிக் கரையில் உள்ள பாங்கம் [Bangham on Lake Erie] என்னும் ஊரில் குடியேறினார். 1837 இல் கனடாவிலும் உள்நாட்டுக் கலகம் எழவே, ஜான் குடும்பத்தோடு மறுபடியும் அமெரிக்கா நோக்கி ஓடினார்! அங்கு ஓஹையோவில் ஈரி ஏரிக் கரையின் தென் பகுதியில் மிலான் என்னும் ஊரில் குடியேறினர்.
Edison-2
1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். அது மென்மேலும் பெருகி விருத்தி யடைந்தது. பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் [Port Huron, MI] கலங்கரைத் தீபக் காப்பாளராகவும் [Lighthouse Keeper], கிராடியட் கோட்டை ராணுவத் தளத்தில் [Fort Gratiot Military Post] மரச் செதுக்கு ஊழியராகவும் சாமுவெல் வேலை பார்த்தார். தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் [Scarlet Fever] கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் தாமஸ் கண்களில் கண்ணீர் சொரிய வீட்டுக்குத் திரும்பினார். ‘மூளைக் கோளாறு உள்ளவன் ‘ என்று ஆசிரியர் திட்டியதாகத் தாயிடம் புகார் செய்தார், எடிசன்! அத்துடன் அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது! பள்ளிக்கூட ஆசிரியை யான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். இதைக் கேட்டுப் பலர் ஆச்சரியப் படலாம்! புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞர், லியனார்டோ டவின்ஸி, அணுக்கரு அமைப்பை விளக்கிய, டேனிஷ் விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr], கணித விஞ்ஞான நிபுணர், ஸர் ஐஸக் நியூட்டன் ஆகியோரும் சிறு வயதில் மூளைத் தளர்ச்சி [Isaac Newton] உள்ளவராகப் பள்ளியில் கருதப் பட்டார்கள்! ‘எதிலும் இனி நீ உருப்படப் போவதில்லை ‘ என்று பள்ளித் தலைமை ஆசிரியர், சிறுவன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை நோக்கி எச்சரிக்கை செய்தாராம்! மேதை எடிசனும், அகில விஞ்ஞானி, ஐன்ஸ்டைனைப் போல் மந்த புத்திச் சிறுவனாகத்தான் பள்ளிக் கூடத்தில் காட்சி அளித்திருக்கிறார்.
ஏழு வயதில் திடீரென எடிசனின் சிந்தனா சக்தி விரிந்து தூண்டப் பட்டது! சூழ்நிலைச் சாதனங்களின் மேல் ஆர்வம் மிகுந்து அடிப்படை ஆய்வுக் கேள்விகள் எழுந்தன. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் [Richard Parker] எழுதிய ‘இயற்கைச் சோதனை வேதம் ‘ [Natural & Experimental Philosophy] என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பெயின் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், சிரமத்துடன் ஐஸக் நியூட்டன் இயற்றிய ‘கோட்பாடு ‘ [Principia] என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைகேல் ஃபாரடேயின் [Micheal Faraday] செய்தித்தாளில் இருந்த ‘மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ‘ [Experimental Researches in Electricity] பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். அந்த ஞானம் அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணிதப் படிப்பில் லாத எடிசன், விஞ்ஞான இயற்பாடு [Theory] எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, ஞான யுக்தியால் பல அரிய நூதனச் சாதனங்களைப் படைத்து உலகப் புகழ் பெற்றார்.
Edison -3
தானாக இயங்கும் தந்திக்குறிப் பதிவுக் கருவி
1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் [Detriot-Port Huron], ரயில் பாதையில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் சென்ட்ரல் நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்கு வரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளிக் கோடுகளாகப் [Dots & Dashes] பதிவானதால், அவரது செவிட்டுத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை! பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது தான் வேலையைச் சீக்கிரம் செய்ய, தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமைக் காட்டினார், எடிசன். 1869 இல் தன் 22 ஆம் வயதில் ‘இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ‘ [Duplex Telegraph with Printer] பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார், எடிசன். அத்துடன் தந்தியின் மின்குறிகளைச் சுயமாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் .
எடிசன் தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப் பணிக்கு, நியூ யார்க் நகருக்குச் சென்றார். அங்கு ஃபிராங்க் போப்புடன் [Frank Pope] கூட்டாகச் சேர்ந்து, ‘எடிசன் அகிலப் பதிப்பி ‘ [Edison Universal Stock Printer], மற்றும் வேறு பதிக்கும் சாதனங்களையும் படைத்தார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் [Western Union] சுயமாய் இயங்கும் தந்தி [Automatic Telegraph] ஏற்பாட்டைச் செப்பனிட்டார். ரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக் கருவி ஏற்பாடு, மின்குறி அனுப்புதலை [Electrical Transmission] மிகவும் விபத்துக்குள் ளாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், ரசாயன ஞானத்தை உயர்த்த வேண்டிய தாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா [Electric Pen], பிரதி எடுப்பி [Mimeograph] போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த அனுபவம், எடிசன் எதிர்பாரதவாறு கிராமஃபோனைக் [Phonograph] கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று.
Edison -1
முதல் கிராமஃபோன் கண்டுபிடிப்பு
புதிய சாதனங்களைக் கண்டு பிடிக்கும் போது, வேறு பல அரிய உபசாதனங்களும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று ‘கரி அனுப்பி ‘ [Carbon Transmitter] என்னும் சாதனம். 1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, மிக நூதன முன்னோடிச் சாதனம், கிராமஃபோன். பிரான்சின் ஆக்க மேதை, லியான் ஸ்காட் [Leon Scott] ‘ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ‘ என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதி யிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு [Phonography] எனப்படுவது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச் சுவடுகள் பாரஃபின் [Paraffin] தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், தலை எழுத்துப் போல் கிறுக்கப் பட்டு நுணுக்க மாகத் தாளில் வரையப் பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது!
எடிசன் அடுத்து ஓர் உருளை [Cylinder] மீது தகரத் தாளைச் [Tin Foil] சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் கிராமஃபோன் [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் கிராமஃபோன் ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆயின.
மின்குமிழி [Electric Bulb] மின்சக்தி ஜனனி [Generator] கண்டுபிடிப்பு
எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் [Gas Light] வீதிக் கம்பங்களில் பயன் படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக ‘மின்சார விளக்கு ‘ பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளி எஞ்சினியர்களுக்குப் படு தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் ‘மின்வீச்சு விளக்கு ‘ [Electric Arc Lighting] சம்பந்தமாக பலவித ஆய்வுகள் செய்து வந்த காலம். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது ‘சூரிய வெளிக்கனல் ‘ [Sun 's Corona] எழுப்பிய வெப்ப உஷ்ண வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவையானது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன் படுத்தி ‘நுண்ணுனர் மானி ‘ [Microtasi meter] என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப் படுத்தலாம். அம்முறையைப் பயன் படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வம் உண்டானது.
எடிசன் மின்விளக்கு ஆராய்ச்சிக்கு, ‘எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ‘ [Edison Electric Light Company] துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக $ 30,000 தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக எம்.ஏ. விஞ்ஞானப் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் [Francis Upton] எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் கிடைத்தது. மின்தடை [Resistance] மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் [Series Circuit] செல்லும் மின்னோட்டம் [Electric Current] மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு [Eletric Arc Light] ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்கு களும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் [Parallel Circuit] பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்க வில்லை. எடிசன் குழுவினர், பிளாடினம் கம்பியைச் சுருளைச் [Platinum Filament] சூன்யக் குமிழி [Vacuum Bulb] ஒன்றில் உபயோகித்துக், கட்டுப் படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உண்டாக்கிக் காட்டினார்கள்.
இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார ஜனனியை உண்டாக்க போதிய சோதனைகள் செய்து முடித்தார்கள். யந்திர சக்தியில் ஓட்டினால் ஜனனியில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்ப்ி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக ஜனனியின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே சாதனம் யந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனையே!
1881 ஜனவரியில் முதல் ‘விளக்கொளி மின்சார அமைப்பு ‘ [Incadescent Electric Power System] வர்த்தகத் துறை ஏற்பாடு, நியூ யார்க் ‘ஹிந்த் & கெட்சம் ‘ [Hind & Ketcham] அச்சக மாளிகையில் நிர்மாணிக்குப் பட்டது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக ‘மத்திய மின்சார ஏற்பாடு ‘ [Central Power System], எடிசன் நேரடிப் பார்வையில் நிறுவப் பட்டது! அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்ப்ித்தது. அந்த மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய ஹோட்டல்கள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், வர்த்தகக் கடைகள் யாவற்றிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.
விளக்கு எரியும் போது, சூனியமான மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்த போது, அந் நிகழ்ச்சிக்கு ‘எடிசன் விளைவு ‘ [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1998 இல் ஜே. ஜே. தாம்ஸன் [J.J. Thomson] முதன் முதல் ‘எதிர்த்துகள் ‘ [Electron] பரமாணுவைக் கண்டுபிடித்தார். விஞ்ஞானிகள் பின்னால் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எதிர்த்துகள் [Electrons] சூடான முனையிலிருந்து தண்மையான முனைக்கு [Cold Electrode], வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் ‘எதிர்த்துகள் குமிழி ‘ [Electron Tube] தோன்ற வழி வகுத்து ‘மின்னியல் தொழிற் துறைக்கு ‘ [Electronics Industry] அடிகோலியது.
திரைப்படக் காமிரா [Movie Camera] கண்டுபிடிப்பு
போனோகிராஃபில் வெற்றி பெற்ற எடிசன், அடுத்து மூவிக் காமிரா வளர்ச்சியில் ஆழ்ந்து வேலை செய்தார். அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது: ‘கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் ‘நகரும் படம் ‘ [Movie] மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை மூவிக் காமிரா யந்திரத்துடன் இணைத்துப் ‘பேசும் படம் ‘ [Talkies] என்னால் தயாரிக்க முடியும் ‘ இந்த சிந்தனா யுக்தி எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. 1880 இல் முதல் நகரும் படம் வெளிவரப் பொறுப்பாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் [W.K.L. Dickson]. எடிசன் நகரும் படக் காமிராவை விருத்தி செய்ய, பலரது படைப்பு களைக் களவு செய்தார். தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார்.
1888 இல் எடிசன் முதலில் படைத்த மூவிக் காமிரா, கினெட்டாஸ்கோப் [Kinetoscope].  ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் [Friese-Green] ஒருவிதப் பதிவு நாடாவைப் [Sensitized Ribbon] பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் [George Eastman] உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் காமிராவை விருத்தி செய்து, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் [Magnifying Glass] வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த மூவிக் காமிராவை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.
‘ஒளியையும், ஒலியையும் இணைத்துப் பேசும் படத்தைத் திரையில் காட்டிச் சிறுவர், சிறுமிகளுக்குச் சிறந்த முறையில் பாடம் சொல்லிக் கொடுக்கலாம் ‘, என்னும் கருத்தில் உறுதியான நம்பிக்கை காட்டினார் எடிசன். ‘கல்வி புகட்டுவதில் எந்த அங்கம் முக்கிய மானது ? கண்களா ? அன்றி காதுகளா ? ‘ என்று ஒருவர் கேட்ட போது, எடிசன் கூறினார்: ‘கண்கள்தான்! ஓலியை விட, ஒளி அதி வேகம் உடையது. காதுகளை விடக் கண்கள் விரைவாகக் கற்பவை! நகரும் படங்கள் மூலம், கண்கள் கற்றுக் கொள்வது நேரடி வழி! விரைவுப் பாதை! தெளிவாய் விளக்கும் பாதை! புத்தகத்தில் சொற்களைப் படித்து அறிவதை விட, பார்வை மூலம் படிப்பது எளியது! ‘ ‘ஒரு படம் ஆயிரம் சொற்க ளுக்குச் சமம் ‘ என்பதை எடிசன் எத்தனை அழகாகச் சொல்லி விட்டார்! ஒரு நிலைப் படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்றால், ஓடும் படம் எத்தனை ஆயிரம் சொற்களுக்கு இணையாகும், என்பதைக் கணக்கிட முடியுமா ?
Cover image
அமெரிக்க ஒளி விளக்கு அணைந்தது
ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் [President Herbert Hoover] எடிசன் உடல் அடக்கத்தின் போது அமெரிக்கா வெங்கும் தேவையான விளக்குகளைத் தவிர, மற்ற மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 [EST] மணிக்கு அவரது புகழுடல் அடக்க மானது. நியூ யார்க்கில் மாலை 9:59 [EST] மணிக்கு ‘விடுதலை விக்கிரகத்தின் ‘ [Statue of Liberty] கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! வீதியில் பயணப் போக்கு [Traffic Signals] விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் கண்ணை மூடின! சிகாகோவில் சரியாக 8:59 மணிக்கு வீதியில் மின்சார வண்டிகள் [Street Cars] ஒரு நிமிடம் நின்றன! மின்விளக்குகள் அணைந்தன! டென்வரில் 7:59 P.M மலை நேரத்தில் விளக்குகள் ஒரு நிமிடம் கண்ணை மூடி அஞ்சலி செய்தன! கிழக்கே எடிசன் உடல் அடக்கமான சமயத்தில், மேற்கே காலிஃபோர்னியாவில் பசிஃபிக் நேரம் 6:59 P.M. மணிக்கு, சூரியனும் செவ்வானில் தன் ஒளியைக் குறைத்து இருட்கடலில் மூழ்கியது! விளக்குகளும் ஒரு நிமிடம் இமை மூடின! ஆனால் எடிசன் ஆத்மா வாகிய மின்விளக்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சுடர் விட்டு, அகில உலகுக்கும் ஒளி பாய்ச்சிக் கொண்டே இருக்கும்!